(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி)

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458)

மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது.

பதவுரை:

மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.

கருத்துரைகள்

மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு உடையது என்கிறார் திருவள்ளுவர்.

மணக்குடவர் உரை: 

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.

இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

 பரிமேலழகர் உரை:

மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு  இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து

முந்தைய நல்வினையால் மனநலம் உடையவராக இருப்பதாகப் பரிமேலழகர் கூறுவதுபோல் சிலரும் அவர் வழியில் இவ்வாறே கூறுகின்றனர்.

உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.

சான்றோர்கள் உறுதியான மனவளம் கொண்டவர்கள். அவர்களும் சிற்றினத்துடன் சேர்க்கை கொண்டால், அவர் மனம் தளர்ச்சி யடைந்து உள்ளத்தை மாசுபடுத்தி விடும். நல்ல இனத்தாருடனனான பழக்கம் அத்தகைய தளர்ச்சிக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

சான்றோர்க்கே இனநலம் பாதுகாப்பாக இருக்கும் என்றால் பிறருக்கு மிகுதியும் இனநலம் தேவை என்பதை உணரலாம்.


நல்லினத்தைத் துணையாகக் கொண்டால் தீமையிலிருந்து காக்கவும் அழிவு வராமல் தடுக்கவும் நற்பயன் விளைவிக்கவும் பாதுகாவலாக இருக்கும். எனவே, நாம் இன நலனில் கருத்து செலுத்த வேண்டும். பல நாட்டுப் போராளிகளும் இனநலத்துடன் செயற்பட்டமையால்தான் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அந்நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தனர். ஈழத்திலும் விடுதலைப்புலிகளும் இன நலத்துடன் செயற்பட்டமையால்தான் அந்நாட்டு மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி இனப்படுகொலைகள் நிகழும்  வரை – வாணாள் வரையும் நல்லாட்சியும் புரிந்தனர்; தம் நாட்டவர்க்குப் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால்,  இனநலமற்றவர் ஊடுருவலாலும் தமிழ்நாட்டு மக்கள் இனநலனில் கருத்து செலுத்தாததாலும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலையாயினர். கைகளில் விழுந்த விடுதலைக்கனி பறிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர இருப்பவர்களும் உறுப்புகள் இழந்தும் உடைமைகள் இழந்தும் இன்னலில் சிக்குண்டுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க நாம் இனநலம் பேணுவோரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல நாடுகளிலும் இனநலமுடையாரைச் சார்ந்திருப்போர் பாதுகாப்பாக உள்ளனர். அவ்வாறில்லாதார் பாதுகாப்பு இழந்து துயருறுகின்றனர்.

எனவே தூய மனமுடையவராக இருப்பினும் இன நலத்தைப் பாதுகாப்பாகக் கொள்வோம்!