(தமிழ்ச்சொல்லாக்கம்: 421-425 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 429-429

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

426. Mathematics professor – கணித நூற்புலவர்

அக்காலத்தில் சென்னை பிரஸிடென்சி காலேசில் மாத மெடிக் புரொபெசராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற இராயபகதூர் பூண்டி அரங்கநாத முதலியாதொருவர்தான், இவ்வாசிரியர் சிவபதம் பெற்றதும், இவரது சேசுட்டக் குமாரனாகிய அடியேனுக்குத் தாம் மேற்பார்த்து வந்த தமிழ் டிரான்சி லேட்டர் ஆபீசில் உத்தியோகஞ் செய்வித்து, அதன் மூலமாய் எமது குடும்பத்தைத் தமது நண்பரைப் போல் பாவித்துக் காப்பாற்றினவர். அந்நன்றி யென்றும் மறக்கற்பாலதன்று.

நூல்   :           சிரீ சங்கர விசயம் (1921), 3ஆவது பதிப்பு பக். 14

முகவுரை    :           தொழுவூர் வே. திருநாகேசுவரன்

(தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் புதல்வர்

427. நமோ, நம – வணக்கம்

நமோ, நம என்பவை மந்திரங்களி னீற்றில் வணக்கத்தை யுணர்த்தற்பொருட்டு, வருஞ்சொற்கள்; இவற்றிற்கு ‘வணக்கஞ் செய்கிறேன்’, ‘நமசுகரிக்கின்றேன்’ என்பன பொருள்களாம்.

நூல்   :           கந்தர் சசுட்டிக் கவசம் மூலமும் உரையும் (1921 பக்கம் 24)

நூலாசிரியர்         :           மதுரை சில்லா, செம்பூர் – வித்துவான் வீ. ஆறுமுகஞ் சேர்வை

428. Station Master – தங்கு நிலையத்தவர் (1922)

டி. எம். அச்சுக்கூடம்

ஓம்

பல்லாவரம், 23.1.1922

அன்பிற்கோர் உறையுளாய்த் திகழும் திருவாளர் வே. நாகலிங்கம் பிள்ளையவர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலன்களும் உண்டாகுக!

தங்கள் அன்பின் திறத்தாலும் திருவருள் வலத்தாலும் பையனும் நானும் நலமே இங்கு வந்து சேர்ந்தோம். வரும்போது தனுக்கோடித் தங்கு நிலையத்தவர் (Station Master) வேண்டுகோளுக்கிணங்க அங்கே, ‘தமிழரின் கடவுள் நிலை’ என்பதைப் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தினேன். அதனை ஆரியப் பார்ப்பனர் பலரும் வந்து கேட்டனராயினும், எவருங் குறை சொல்லாமல் மகிழ்ந்து வியந்தனர்.

அன்புள்ள

மறைமலைமடிகள்

நூல்   :           மறைமலையடிகள் (1951) பக்கம் 211.

நூலாசிரியர்         :           புலவர் அரசு

429. Hammock – வலையேணி

அப்பொழுதுதான் கனகவல்லி பாட்டை முடித்தாள். மாடியின் நடுவே, இரண்டு மரத்துண்டுகளிடையே கட்டப்பட்டிருந்த வலையேணி (Hammock) ஒன்றில் அவள் படுத்திருந்தாள். கடுமையும் செம்மையும் கலந்த அவ்வலையேணியில், ஒல்லியும் உயரமுமான அப் பொன்மேனிப் பாவை நல்லாள் வெண்சிவப்புப் பட்டாடை யுடுத்துப் படுத்திருந்த காட்சி, நீல வானத்திடையே மின்னற்கொடி யொன்று நிலையாய்க் கிடப்பதுபோலிருந்தது. –

நூல்   :           சதானந்தர் (ஒர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் -4 துறவியின் துறவு, பட்சகம் -79

நூலாசிரியர்         :           நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை

(மறைமலையடிகள் மாணவர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்