சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 453-460
(தமிழ்ச்சொல்லாக்கம்: 447-452 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 453-460
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
453. பிரதிகம் – பிண்டம்
454. பதிகம் – பத்து
மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராண னருளினாற் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கந்தொழப் பெற்றதால்
என்னுந் திருப்பாவின்கண் பதிகம் என்னும் வடசொல் ஈரிடத்துளது. முன்னது ’பிரதீகம்’ என்னும் வடசொற்றிரிபு. பிரதிகம் என்னுஞ் சொல் பிண்டம் அஃதாவது சரீரம்’ என்னும் பொருட்டு பின்னது, ’பதிகம்’ என்னும் வடசொற்றிரிபு இப்பதிகம்’ என்னுஞ் சொல்லிற் பதி என்பது ’பத்து’ என்னும் பொருட்டு; இராவணனுக்குப் ’பதி கண்டன்’ என்னும் பெயரிருத்தலறிக.
நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924) பக்கம் 127
நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)
★
455. சுப்பிரமணி – வெண்மணி
தந்தையின் சிறிய தாயாராகிய சண்முகத்தம்மாள் சில காரணங்களால் இக் குழந்தையினிடத்தில் பற்றுடையவளாய் சிரத்தையுடன் குழந்தையைப் பாதுகாத்து வளர்த்து வரிவாளாயினாள். இம்மைந்தனுக்குத் தந்தையின் தந்தையராகிய பேரனார் சுப்பிரமணி (வெண்மணி) என்னும் பிள்ளைத் திருநாமம் அமைந்தது. –
நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணியபிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 4
நூலாசிரியர் : மு.பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை
(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)
★
456. Unlimited Bank – மட்டிடப் பெறாத பணக்கூடம்
நம் நண்பர் பெரிது முயன்று செய்த இப் போது நலம் ஊருக்கும் நாட்டுக்கும் நன்மை தருவமன்றி அவர் தங் குடும்பத்துக்கும் நன்மை பயப்பதாயிற்று. நாளடைவில் நமது நண்பர் இந்நகரத்துச் சிறந்த செல்வர்களில் ஒருவராயினார். அப்பால் தாம் சொந்தத்தில் பணக்கூடம் ஒன்று அமைத்து வைக்கும் தகுதியுடைய ராயினார். 1087ம்௵ தமக்கு உற்ற நண்பராகிய திருவாளர் பி.எம்.கைலாசம் பிள்ளையவர்களைத் துணைக்கொண்டு கே.எசு.பாங்க் என்னும் பெயரால் மட்டிடப் பெறாத (Unlimited) பணக்கூடம் ஒன்றை அமைத்து வைத்தனர்.
மேற்படி நூல் : பக், 45
★
457. Municipality – நகரப் பாதுகாப்புச் சங்கம்
இனி நமது நண்பரின் பொதுநல விருப்பும் உழைப்புங் கண்டறிந்த பல பொதுநலச் சங்கங்களில் இவர் உதவியை நனி விரும்பிக் கொண்டார்கள். திருநெல்வேலி நகரப் பாதுகாப்புச் சங்க (முன்சிப்பாலிட்டி)த்தில் நெடுங்காலம் அங்கத்தினர் கவுன்சிலர் ஆக இருந்து ஊரார் உவக்குமாறு உழைத்து வந்தார்.
மேற்படி நூல் : பக்கம் – 59
458. உபகரணங்கள் – துணைக்கருவிப் பொருள்
சேதுபதியவர்கள், மற்ற ஆடம்பரமான வரவேற்பு முதலியவை விரும்பிலரேனும், வைதீகமான சிவபூசை வழிபாட்டில் மிகப் பற்றுடையவர் என்பதும், அதனைச் சிறக்கச் செய்வதில் கருத்துடையவர் என்பதும் தெரிந்துகொண்ட நண்பர், அதற்குரிய துணைக் கருவிப் பொருளை (உபகரணங்களைச் சிறப்பாக செய்து வைத்திருந்தார்.
மேற்படி நூல் : பக்கம் – 63
★
459. பரமானந்தம் – பேரின்பம்
பக்தியிற் சிறந்த சேதுபதியவர்கள், திருக்கைலாசம் போல் தோன்றிய பூசை மடத்தின் அமைப்பும் சிறப்புங் கண்டு வியந்து பேரின்பத்தில்: (பரமானந்தத்தில்) மூழ்கினவராய் ஐம்புலனும் ஓர் புலனாக ஒடுங்கிய மனத்துடன் உள்ளமுருகிச் சிவ வழிபாடு செய்து முடித்தார்.
மேற்படி நூல் : பக்கம் – 64
★
460. தரும சங்கடம் – அறவழியிடர்
நண்பர் தம்முடைய மூத்தமகனாகிய துரைசாமி பிள்ளைக்குத் திருமண முயற்சி தொடங்குங்கால் இருதலையிடரில் அகப்படலுற்றார். ஆயினும் இது உலகத்தில் புதியதன்று. இடை இடையே நிகழ்வதொன்றாம்.
நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் திரு. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச்சுருக்கம் (1924) ப73
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை
(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply