( தமிழ்ச்சொல்லாக்கம் 493-504 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 505-510

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

505. கோகினோர் – ஒளிமலை

தென்னிந்தியாவில் வச்சிரகருவூர் என்னும் ஒரு கிராமம் உண்டு. அப்பெயர், வைரக்கற்களைத் தன் வயிற்றுள் அடக்கியிருக்கும் ஊர் என்று பொருள்படும். அவ்வூரின் சுற்றுப்புறமெங்கும் பண்டை நாளில் வைரக்கற்கள் புதைந்திருந்த சுரங்கங்கள் பல இருந்தன.

ஆப்பிரிக்கா அமெரிக்கா முதலிய கண்டங்களில் வைரக்கனிகள் கண்டுபிடிக்கப்படு முன்னர் வைரக்கற்களுக்காக உலகெங்கும் பேர்பெற்றது இவ்வூர்தான்.

மொகலாய அரசர்கள் வீற்றிருந்ததும், விலைமதிக்க முடியாதபடி சிறந்து விளங்கியதுமான மயிலாசனத்தின் மேலிருந்த வைர மணிகளெல்லாம் இங்கிருந்து போனவையே. இப்போது இங்கிலாந்து அரசர் முடியில் அணிபெறத் திவ்விய ஒளி வீசும் கோகினோர் அல்லது ’ஒளிமலை’ எனப்படும் உயர்தர வைரமணியும், இவ்வூரில் முதன்முதல் அகப்பட்டு, பின் ஆப்புகானியர் சீக்கியர் முதலியவர் கைமாறி, கடைசியில் ஆங்கிலேயர் கைப்பட்டது.

நூல்   :           பத்மினி (1924), பக்.41,42,

நூலாசிரியர்         :           வே. முத்துலாமி ஐயர், எம்.ஏ. எல்.டி.,

(சென்னைத் தமிழர் கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்)

506. (உ)ருத்திர பூமி – சுடுகாடு

கல்லாதார் முகம் (உ)ருத்திரபூமி (சுடுகாடு)யை ஒக்குமெனவும், கல்லாதார் உருவம் மரத்துக் கொப்பெனவும், கல்லாதார் கண்கள் இரண்டும் புண்களை யொக்குமெனவும், கற்றார் சபையில், கல்லாதார் சுவானத்துக் கொப்பாவார் எனவும், கல்லாதார் உடம்பு பாழ்நிலத்தை யொக்குமெனவும் அறிஞர் கூறியிருக்கின்ற தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு என்பதனாலு மறிக.

நூல் : தமிழ்க் கல்வி (1924) பக்கம் 96

நூலாசிரியர் : மனத்தட்டை எசு. துரைசாமி ஐயர்

507. Liquor Amnii — முன்நீர், பனிநீர்

வாசுதவமாகவே கருப்பையானது கருப்பக் காலத்தில் 20 நிமிடத்திற்கொருதரம் சிறுத்துக் குறுகிப் பிற்பாடு தளர்ச்சியடையும் பிண்டம் சிதைந்து போகாமலிருப்பதற்காக அதைச் சுற்றிலும் ஓர்வகை நீர் ஏற்பட்டிருக்கிறது. அதை (Liquor Amnii) முன்நீர், பனிநீர் என்பார்கள்.

நூல்   :     மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம் -5

நூலாசிரியர்         :           கோ.கி. மதுசூதன இராவு (மதராசு கவர்ன்மென்ட் பிரசவ வைத்திய சாலையில் மருத்துவ மாணாக்கியர்களின் உபாத்தியாயர்)

508. Cells – கண்ணறை

509. கோரியன் / Chorion – வெளித்தோல்

510. ஆம்னியன் / Amnion – உள்தோல்

கருத்தரித்த முட்டையானது அதிசீக்கிரமாய் வளர்ந்து அநேக விதங்களான நுண்ணிய கண்ணறைகளாக மாறுகிறது. பிண்டத்தைச் சுற்றிலும் நீருடன் மூடியிருக்கும் இரண்டு சவ்வுத் தோல்களுற் பத்தியாகின்றன. வெளித்தோலுக்கு கோரியன் என்றும் உள் தோலுக்கு ஆம்னியன் Amnion என்றும் பெயர்.

மேற்படி நூல் : பக்கம் – 4

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்