( தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

522. Director – தலைமையோர்

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும் உதவிகளை நெல்லையிலிருந்து புரிந்து வந்தபடியாலும், பொதுவாக உலக நடையில் சிறந்த அநுபவமுடையவரா யிருந்தபடியானும், மேற்படி காரியங்களை நிகழ்த்தும் தலைமையோர் (டைரக்டர்)களில் இவரும் ஒருவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 60

523. அரித்துவாரம் – சிங்கத்துளை

நூல்   :           பிரமானந்த நான்மணி மாலை (1924 பக்கம் 13

நூலாசிரியர்         :           பி.பி.நாராயணசாமி நாயுடு (திருநெல்வேலி சிந்துபூந்துறை பென்சன் போலீசு இன்சுபெக்டர்)

524. வசன நடை – ஒழுக்கம்

பத்மினி பெயர்க்கிணங்க நல்லொழுக்கம் நன்கமைந்தது; (ஒழுக்கம்-வசனநடை என்பதும் ஒருபொருள்) எவர்க்கும் எளிதில் பொருள் விளக்கும் எழிலது, செந்தமிழணங்கின் கீர்த்தியைத் தெரிவிப்பது நடந்தே நவில்வது.

நூல்   :           பத்மினி (1924 பக்கம் : 6)

தலைப்பு     :           சில தமிழ் அபிப்பிராயங்கள்.

சொல் விளக்கம்  :           திருப்பாதிரிப்புலியூர் சிரீமத்து ஞானியார் மடாலயத்து சுவாமிகள்

525. பிரசவம் – பிள்ளைப்பேறு

பூர்ணமான பிண்டாண்டத்தில் (1) குழந்தை அல்லது பிண்டம், 2) குழந்தை மிதந்து கிடக்கும் பனிநீர், 3) பனிநீரையடக்கஞ் செய்து கொண்டிருக்கும் சவ்வுகள், 4) மாயை, கொப்பூழ் கொடி, இவைகளடங்கி யிருக்கின்றன. சனன வாய்க்காலின் வழியாய்ப் பிண்டாண்டமானது வெளியில் தள்ளும் சக்திகளால் வெளியாகும் விதானத்திற்குப் ‘பிரசவம்’ அல்லது ‘பிள்ளைப்பேறு’ என்று சொல்லப்படும்.

நூல்   :           மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம், 15.

நூலாசிரியர்         :           கோ. கி. மதுசூதனராவு

526. Typewriting – கையச்சு

கும்பகோணத்தில் முனிசிபாலிடியார் ஒரு சித்திர பாடசாலை வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 100 பிள்ளைகள் உயர்ந்த சித்திர வேலை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். டைப்ரைட்டிங் என்ற கையச்சு வேலையில் பயில பல பாடசாலைகள் எங்குப் பார்த்தாலும் இருக்கின்றன.

நூல்   :           தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு (1924 பக்கம் : 87)

நூலாசிரியர்         :           ஆர். விசுவநாத ஐயர் (Assistant, Govt., Model High School, Saidapet)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்