( தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

561. Lift – தூக்கி

சத்யவிரதன் மறுபடி யவளுக்குத் தைரியத்தைச் சொல்லிவிட்டுத் தூக்கி வழியே கீழே இறங்கினான். அவன் கீழே வந்த பொழுதும் அம்மாள் மறுநாள் வேலையில் உச்சித்தலைவரை மூழ்கியிருந்தாள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925)

அதிகாரம்   :           15 திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா,

562. Introduction – முதலறிவு

இதற்கு மத்தியில், சனிக்கிழமை பொழுதடைந்ததும் சத்யவிரதன் பாட்டம் அம்மையிடம் சொன்னப் பிரகாரமே இரண்டு போலிப் பெண்களை அழைத்துக் கொண்டு அவள் மாளிகைக்குச் சென்றான். பெண்கள் முன்னேற்பாட்டின்படி வெவ்வேறிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சற்று நேரமானதும் சாமியாரும் வந்து சேர்ந்தார். சத்யவிரதனைக் கண்டு சற்று திகைப்பது போல் நின்றார். இருவருக்கும் பாட்டம் அம்மை முதலறிவு (introduction) செய்து வைத்தாள். பிறகு, சாமியாரைக் கொஞ்ச தூரத்திற்கப்பால் அழைத்துச் சென்று, சத்யவிரதனிடம் சொன்னது போல் அவரும் அன்றிரவு தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். –

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 20 – மாயாமித்திரம் மறைதல், பக்கம் – 266

563. Wig – மயிர்த்தொப்பி

கைதிகளுக்குள் அதிகக் கலவரை செய்யும் வகுப்பினர் ஒருவருண்டு. அவர்களை மேல் காற்றுகள் என்பார்கள். அவர்களெல்லாம் தங்கள் உடம்பில் பச்சை குத்திக் கொள்வார்கள். துன்பக் குழந்தை, தோற்கப்பட்டாலும் ஆளப்படவில்லை, கடவுளுமில்லை, எஜமானுவில்லை என்ற வாக்கியங்கள் அவர்கள் சரீரத்தில் பற்பல விடங்களில் எழுதப்பட்டிருக்கும். வழுக்கு மண்டையுடைய கைதியின் தலையில் மயிர்த்தொப்பி வரைந்திருக்கும். முழுக்குருடன் கண்கள் மேல் மூக்குக் கண்ணாடி குத்தி யிருக்கும்.

இன்னொருவன் மார்பில் ‘கண்ணிய சைன்யம்'(Legion of Honour) என்ற பிருது பச்சையில் விளங்கிற்று. அதிசயப் பேர்வழிகள் இதில் கூடியிருக்கிறார்கள்.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 18 – படையெழுச்சி, பக்கம் – 240

564. பாட்டை சாரி – வழிப்போக்கர்

‘இனி என் காதலியிருந்தென்ன? இறந்தென்ன? இனி நான் முன்போலின்றித் துறவியானேன். ஆகையால், இனி நான் வீட்டுக்குள் இருந்தாலென்ன? வெளியிலிருந்தாலென்ன? என்று ஒரு பாட்டை சாரி (வழிப்போக்கன்) யோசித்துப் பார்த்துச் சொன்னான்.

நூல்   :           பர்த்ருஅரி சிங்கார சதகம் உரை (1925) 5-வது அதிகாரம், போலித் துறவு, பக்கம். 31

தெளிபொருள் விளக்க உரை           :           தமிழ்ப் பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

565. Sofa – சாய்மான மஞ்சம்

நேர்த்தியான மூங்கிற்பாயொன்று தரையில் விரித்திருந்தது. அதன் மேல் கித்தான் நாற்காலி ஓரிடத்திலும், சாய்மான மஞ்சம் (Sofa) மற்றோரிடத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் 2 – வீரனின் வியாகுலம், பக்கம்-9

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்