சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 576 -580 
( தமிழ்ச்சொல்லாக்கம் 571-575 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 576-580
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
576. Table Talk – உண்டாட்டுரை
இதழ் : நச்சினார்க்கினியன் (1926) பக்கம் : 58
மொழிபெயர்ப்பு : நச்சினார்க்கினியன் ஆசிரியர்
★
577. சீவானந்தம் – உயிர் இன்பன் (1926)
இளமையிலே சீவாவிடம் தமிழ்ப்பற்று மிகுதி. சிராவயலின் ஆசிரம வாழ்க்கையும், ஆசிரம வாழ்க்கையில் அவர் கற்ற ஏராளமான தமிழ் நூற்களும் அவருடைய தமிழ்ப் பற்றை வளர்த்தன.
இக்காலத்தில் தமிழ் நாட்டில் காங்கிரசு இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் கிட்டத்தட்ட சமமாக நடைபெற்ற இன்னொரு இயக்கம் தனித்தமிழ் இயக்கம். பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே – அதாவது ஆரிய எதிர்ப்பு – ஆரிய கலாச்சார எதிர்ப்பு, அதன் குறியீடாக ஆரிய மொழி எதிர்ப்பு – மறுபுறம் தனித்தமிழ் இயக்கம் – எனச் செயல்பட்டது. மறைமலையடிகளார். இதன் தானைத் தளபதி, போலியான பிராமணிய கலாச்சார எதிர்ப்புக் குரல் கொடுத்த இந்த இயக்கத்தின் ஒளியுள்ள அம்சம் தமிழ்ப்பற்று. அதாவது தமிழனின் உணர்ச்சி மற்றும் கருத்து வெளியிட்டுக் கருவியாக தமிழையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அம்சம். இந்த அம்சம் இளைஞன் சீவாவைக் கவர்ந்தது. சீவா தனித்தமிழ் பக்தரானார்.
இந்த வெறி எவ்வளவு தூரம் சீவாவைப் பிடித்திருந்தது என்பதற்குப் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். தோழர் சி.பி. இளங்கோ கிருட்டிணன் என்ற தனது பெயரைப் பறிகொடுத்தார். சீவானந்தம் என்ற பெயர் ‘உயிர் இன்பன்’ என்று மாறிவிட்டது.
நூல் : சீவா என்றொரு மானுடன் (1982) பக்கங்கள் 22, 23
நூலாசிரியர் : பொன்னீலன்
★
578. பகிரங்கக் கடிதம் – திறந்த மடல்
ஒத்துழையாக் காலத்தில் இங்கிலீசு மக்களுக்குக் காந்தியடிகள் எழுதிய திறந்த மடலில் (பகிரங்கக் கடிதத்தில்) எனது அன்பார்ந்த நண்பர்களே என்று அவர்களை அடிக்கடி விளித்தமை காண்க.
நூல் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926 பக்கம் : 380
நூலாசிரியர் : திரு. வி. கலியாணசுந்தரனார்
★
579. ஆத்ம சக்தி – உள்ளொளி
தியாகம் ஒருவனது பருஉடல் உணர்வை அரித்து அரித்து உள்ளொளியை (ஆத்ம சக்தியை ஒளிரச் செய்யும்.
மேற்படி நூல் : பக்கம் : 179
★
580. பிராயச் சித்தம் – கழுவாய்
காந்தியடிகள் தமக்குள்ள மேல் நாட்டு அறிவு துணைகொண்டு பிணங்கி நில்லாது தமையனார் ஆணைக்கிணங்கிக் கழுவாய் (பிராயச் சித்தஞ் செய்து) கொண்டார்.
நூல் : பக்கம் : 117
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply