சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
733. Homeopathy – ஒப்புமுறை வைத்தியம்
பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy) வைத்தியத்தைக் கண்டு பிடித்த ஃகைன்மன் (Hahenemann) என்னும் சருமானிய வைத்தியர் சொல்லுகின்றனர்.
நூல் : நூல் உடல்நூல் (1934), பக்கம் -35
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். ஏ., எம். எல்.
★
734. Record — குறிப்பேடு
(வேதப்புராதனம்) வேதங்கள் மனிதர்களின் பழங்காலத்துக் குறிப்பேடு (Record) ஆகும். இவ்வாறே ஆங்கிலேயர்களும் நம்புகின்றனர்.
நூல் : ஆரிய சித்தாந்தம் 1934), பக்கம் – 6
நூலாசிரியர் : பண்டிட் – கண்ணையா
★
735. Belt – அரைப்பட்டிகை
இருவரும் விமானத்தில் ஏறி உட்காந்து கொண்டனர். டிரைவர் ஒவ்வொருவருக்கும் ஓர் அரைப் பட்டிகை (Belt) போட்டு, ஏரோபிளேனிலுள்ள பீடத்திற்கும், அவர்கள் அரைக்கும் மார்புக்கும் தொடுத்துக் கட்டினர் ஏரோபிளேன் மெல்ல நகர்ந்தது, சிறிது விரைவாக ஓடிற்று. ஒடும்போதே அது மேலே எழுந்தது; பின்னும் மேலே எழுந்தது.
நூல் : ஆகாய விமானம் (1934), பக்கம் – 14
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
(சென்னை இராசதானிக் கலாசாலை முன்னாள் தமிழாசிரியர்)
★
736. பர்தா – மறைப்பு அங்கி
வட இந்தியாவிலே இந்துக்களுக்குள் மறைப்பு அங்கி (பர்தா) அணியும் பழக்கம் இருந்து வருகின்றது. இப்பழக்கம் பழங்கால இந்தியாவில் இருக்கவில்லை. முகம்மதியர்களிடமிருந்தே இந்துக்கள் இப்பழக்கத்தைக் கைக்கொண்டனர்.
நூல் : ஆரிய சித்தாந்தம் (1934), பக்கம் : 29
நூலாசிரியர் : பண்டிட் – கண்ணையா
★
737.(உ) ரோமத் துவாரங்கள் – மயிர்க் கால்கள்
நமது உடலில் மேற்புரம் முழுவதையும் தோல் மூடிக் கொண்டு இருக்கிறது. அந்தத் தோல் சில இடங்களில் அரைக்கால் அங்குல கனமும், சில இடங்களில் கால் அங்குல கனமும் இருக்கிறது. நமது தோல் முழுவதிலும் மிகச் சிறிய துவாரங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கு மயிர்க் கால்கள் அல்லது (உ)ரோமத் துவாரங்கள் என்று பெயர்.
நூல் : மூன்றாம் பாடப் புத்தகம் (1934), பக்கம் , 91 (நான்காம் வகுப்பு)
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
(சென்னை, இராசதானி கலாசாலை முன்னாள் தமிழாசிரியர்)
★
738. Bus – பெருவண்டி
சென்னையுள்ளூரில் ஓடும் பெருவண்டி (Buses)களில், ஏறுகிறவர்களிடம் கூலி வாங்கினாலும் சீட்டு தருவதில்லை. அதனால் ஒருவரிடம் பலமுறை ஒரே பிராயணத்தில், கார் நடத்துவோன் காசு கேட்க நேரிடுகிறது.
கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்.,
உயர் பதிப்பாளர், ‘மணிமாலை’ 1935
பக்கம் – 448-49
★
739. Open Book – விரிசுவடி
பிராணிகளுக்கெல்லாம் மேம்பட்டவன் தானே யென்று மனிதன் பெருமை பாராட்டுகிறான். ஆயினும், ஒவ்வொரு விசயத்திலும் இயனிலை (Nature) மனிதனுக்கு முந்திக் கொண்டு, அவனுக்கு வழிகாட்டுகின்றது. இயனிலை (Nature) என்பது ஒரு விரிசுவடி (Open Book) அறிவுள்ள மாக்களெல்லாரும் இந்தச் சுவடியினின்றும் தங்கள் தங்கள் பாடங்களைப் படித்துப் பயின்று வருகிறார்கள். தோழர் தியாகு எழுதுகிறார்
நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935) நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply