சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144
(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
- Degree – மாத்திரை
- Beauty Spot – அழகின் உறைவிடம்
- Radio – ஒலிபரப்பி
- Department of Epigraphy – கல்வெட்டுப் பதிவு நிலையத்தார்
- Executive Officer – ஆணையாளர்
- சல்லரி- கஞ்சிரா
சல்லரி என்றழைக்கப்பட்டு வந்த பழைய கைப்பறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இதை வாசித்தால் கிலுகிலுவென்னும் ஒருவித ஒலி உண்டாகும். தலைஞாயிறு இராதா கிருட்டிணையர், புதுக்கோட்டை மான்-ண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் கஞ்சிரா வாசிப்பதில் மிகச் சிறந்தவர்கள்.
★
- இசைத்தமிழன்
அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குள்ளே ஆனாய நாயனார் என்பவர் வேய்ங்குழலைக் கொண்டு வாசித்த போது சராசரங்கள் யாவும் இயக்கமற்று அவ்வினிய ஓசையென்னும் தேனையுண்டு தியங்கிய பிரமரங்கள் போல் சலனமற்று நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சங்கீதத்துக் குருகாத கன்னெஞ்சமுடையான் மானிட இயல்புடையவ னல்ல னென்றும் சகல துர்க்குணங்களுக்கும் அவன் மனம் இலேசாய் இணங்குமென்று இங்கிலாண்டு தேசத்தன் காளிதாசரென்று பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக்கவி கூறுகின்றனரென்றால் சங்கீதத்தின் பெருமையை இன்னும் என்னென்று வியப்பது.
இதழ் : சனவிநோதினி (1910)
கட்டுரையாளர் : இசைத்தமிழ்
★
- BALCONY – உயர்நிலைப்படி
கொட்டகையை யடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா – கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்சு (Box) அல்லது பெட்டி என்ற ஆசனம் கிடைக்குமென்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத் திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன் மனம் சோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்ஸில் போய் உட்கார்ந்தான்.
நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 – மாயா மித்திரம், பக்கம் – 38,
நூலாசிரியர் : பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,
★
- இரணியப் பிண்டம் – பொற்கட்டி
இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம். அது இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவார். ‘ஆடகப் பெயரின் அவுனர் மார்பினன்’ என வரூஉம் குமரகுருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.
நூல் : பணம் (1953) பக்கம் – 15,
நூலாசிரியர் : ரெ. சேசாசலம், எம்.ஏ.,
(ம. தி. தா. இந்துக் கல்லூரி – பொருளாதார ஆசிரியர்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
நூல் நிறைவு. தொடர்ந்து
சொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் பட்டியலும்
சொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் பட்டியலும்
இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து அவை வரும்.
Leave a Reply