(தமிழ்ச்சொல்லாக்கம்  84-90 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

91. அக்கினி பாணம் – தீயம்பு

நூல்        :              சிரீ பக்த லீலாமிர்தம் (1888) பக்கம் – 17

நூலாசிரியர்         :               தஞ்சை மாநகரம் இராசாராம் கோவிந்தராவு

(குறிப்பு : இம்மொழிபெயர்ப்பு அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது)

92. உதய காலம் – நாளடி

நூல்        :               சிரீ பக்த லீலாமிர்தம் (1888) பக்கம் – 28

நூலாசிரியர்         :               இராசாராம் கோவிந்தராவு

குறிப்புரை           :               தஞ்சை மகாவித்துவான் மதுரை முத்து பாத்தியாயர்

(குறிப்பு : இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது)

93. Circular Road – வளைவு வீதி

இந்தக் கல்கத்தா பட்டண மானது கங்கையின் ஒரு கிளை நதியின் இடது பாகத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பட்டணம். இந்தப் பட்டணத்துக்கும் பங்காள சமுத்திரக் கரைக்கும் சுமார் நூறு மைல் நீளமும், ஒன்றரை மைல் அகலமும், சுமார் 8 சதுர மைல் வித்தீரணமுள்ளதாக விருந்து, இப்போது அப்படி இரண்டத்தனை வித்தீரணமானதாகத் தோற்றுகிறது.

1742-இல் மகாராட்டிரர்கள் இதன் மேல் படையெடுத்து வராதபடி அந்த நதியின் வடபாக முதல் கிழக்குப் பாகம் வரையில் கோண வாய்க்கால் ஒன்றை வெட்டிப் பட்டணத்தைப் பாதுகாத்து வரப்பட்டது. இந்த மகாராட்டிர வாய்க்காலுக்கு அப்புறமும், தற்காலத்து (Circular Road) வளைவு விதிக்கும் இடையில் Chitpore – சீத்பூர் வடபாகத்திலும் நந்தன் பாக்கு, சீல்தா, எண்டாலி, புகார் சிம்லா, பாலிகஞ்சு தென்கிழக்காகவும், பவானியூர், அல்லியூர், கிட்டரபூர், தெற்குப் பாகத்திலுமாக அநேக பெரிய கிராமங்கள் சூழ்ந்திருக்கின்றன.

நூல்        :               திவ்விய தேச யாத்திரை சரித்திரம் (1889) பக்கம்- 118.

நூலாசிரியர்         :               சேலம், பகடாலு, நரசிம்மலு நாயுடு.

(தமிழகத்தின் முதல் விடுதலைக் கவிஞர்)

94. காப்புச் சேனை

கி.பி. 1781 இல் வாரன்ஃகேடிங்கு காசிப் பட்டணத்துக்குப் போய் சிவாலைய காட்டில் கோட்டையிலிருந்த இராசனைத் தாக்க, அந்த இராசன் குடிகளுடைய சகாயத்தினால் தப்பித்துக்கொண்டு 20,000 காப்புச் சேனையோடு சூனார் (Chunar) கோட்டையில் போய்த் தங்கி, பிறகு குவாலியூரில் (Gwalior) 29 வருட காலம் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தான்.

மேற்படி நூல் : பக்கம் – 57,

The Town Hall – நகர மண்டபம்

கி.பி. 1876 – 77 வருடம் மாட்சிமை தங்கிய விக்குடோரியா சக்கிரவர்த்தினி யவர்களுடைய சேசுட்ட புத்திரரும், இளவரசருமாகிய, சிரீ பிரின்சுசாப் வேல்சு இராசகுமாரர் காசி சேத்திரத்தைத் தரிசித்தபோது அவரால் கடைக்கால் போடப்பட்டு, சிரேட்ட தேசாதிபதிகளிற் சிறந்தவராகிய அப்பன் ரிப்பன் பிரபு (Lord Ripon) அவர்களால் கிரகப் பிரவேசம் செய்விக்கலான ஒரு அழகிய தரும வைத்தியசாலை இருக்கின்றது. இதற்குப் பிரின்சுசாப் வேல்சு ஆசுபத்திரி என்று பெயர். இந்தக் கட்டிடத்திற்குப் பிடித்த செலவுத் தொகை முழுதும் சுதேச தரும பிரபுக்களால் கொடுக்கப்பட்டது.

இந்தத் தரும வைத்தியசாலைக்கருகில் கி.பி. 1870 ௵ சனவரி ௴ இந்தக் காசி சேத்திரத்தைத் தரிசித்த சிரீ விக்குடோரியா சக்கிரவர்த்தினி அவர்களுடைய துவிதிய குமாரராகிய சிரீ டியூகாப் எடின்பர்க்கு, என்பவருடைய விசய ஞாபகச் சின்னமாக விசயநகரம் மகாராச ரவர்களால் கட்டி வைக்கலான நகர மண்டபம் (Town Hall) இருக்கிறது.

மேற்படி நூல் : பக்கம் -38, 39.

பிருந்தம் – துளசி

இப்போது இந்த வசனத்தை எங்கு நின்று பார்த்தாலும் திவ்வியமான துளசிச் செடிகள் பெருத்துப் பெரிய வனங்களாகப் பிரகாசிக்கின்றபடியால் இதற்கு (பிருந்தம் – துளசி என்னும் பதப்பொருளால்) பிருந்தாவனம் என்னும் பெயர் வழங்கி வருவதாகத் தோற்றுகிறது.

மேற்படி நூல் பக்கம் – 210,

95. Compartment – அறைகள்

சப்பல்பூர் பார்க்கத் தக்க ஒரு பெரிய பட்டணமாயும், அதைப் பார்த்துப்போக ஆவல் கொண்டவனாயுமிருந்தும், அந்த இசுடேசனிலிருந்து The East India Railway – பெரிய கிழக்கு இந்திய புகை வண்டி பிரயாணம் ஆரம்பிப்பதால், அந்தப் பிரம்மாண்டமான இசுடேனில் பல வகுப்பான பிரயாணிகள் கும்பல் கும்பலாகக் கூட்டம் கூடியும், நான் வந்த சி.ஐ.பி.ஆர். புகை வண்டிப் பிரயாணிகளையும் முக்கியமாக என்னுடன் வந்த (இ)சுதிரீகளை வெளியில் கொண்டு போக அனுகூலப்படவில்லை; மேலும் பெரிய மழையும் பெய்யத் தொடங்கியதன்றியில், அந்த அர்த்த ராத்திரி காலத்தில் சம்சாரத்துடன் பலவிதத்தாலும் புதிதான சப்பல்பூருக்குள் போக என் மனம் துணியவில்லை; ஆகவே, எனது சம்சாரத்தை யிறக்கி ஓர் மறைவானவிடத்தில் நிற்கவிட்டு அலகாபாத்துக்கு ஆள் ஒன்றுக்கு உரூ. 2.15.6 கொடுத்து ரெயில் சீட்டு வாங்கப் போய் அந்த அபரிமிதமான கும்பலில் அடிபட்டு இடிபட்டு அவத்தையுடன் டிக்கெட்டுகளை வாங்கினேன்

அந்த சப்பல்பூர் முதல் பங்காள பாபுகள்தான் புகை வண்டி ஸ்டேஷன் மாஸ்டர்களாகவும் மற்ற சிப்பந்திகளாகவு மிருக்கிறார்கள். அந்தக் கிழக்கிந்தியப் புகை வண்டிகள் சென்னைப் புகை வண்டிகளைப் போலவே பெரிதாக இருக்கினும், கம்பார்டுமெண்டு (அறைகளை) இரும்புச் சலாகைகளினால் தடுத்திருக்கிறர்கள். எனக்குக் கூடிய வரையில் நல்ல வண்டி யடுக்கப்பட்டது.

மேற்படி நூல் : பக். -7, 8.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்