(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 302-304

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

302. Atoms – உயிரணு

பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம்.

நூல்   :           வியாசப்பிரகாசிகை (1910), பக்.97.

பதிப்பாளர்            :           பி. எசு. அப்புசாமி (ஐயர்)

(உரிமையாளர்    :           சக்கரவர்த்தினி பத்திரிகை)

303. பிரசண்ட மாருதம் – பெருங்காற்று (1909)

பின்பு அவ்வணிகன் புறப்படும்போது சக்திதேவன் தானும் கூட வருவதாகச் சொல்ல அவனும் சம்மதித்து தங்களிருவர்க்கும் வழிக்கு வேண்டும் உணவுப் பதார்த்தங்களை நிரம்ப வைத்துக் கொள்ள இருவரும் கப்பலின் மீதேறிக் கடல்மார்க்கமாகப் பிள்ளை பிரயாணமானார்கள்.

பின்னர் அக்கப்பலானது நெடுந்தூரங்கடந்து அந்த உத்தலத்(து) விபத்தை யடைவதற்குச் சொற்ப தூரத்திற் செல்லுங்கால் மின்னற் கொடியாகிய நாவுடன் கூடி முழங்குகின்ற கரிய மேகமாகிய இராக்கத வடிவம் ஆகாயத்திற் கிளம்பிற்று. அச்சமயத்தில் இலேசான பொருள்களை உயரவெடுத்தெறிகின்றதும், கனத்த பொருள்களைக் கீழே கொண்டமிழ்த்துகின்றதுமாகிய பிரசண்டமாருதம் (பெருங்காற்று) விதியின் ஆரம்பம் போல வீசிற்று.

இதழ் :           செந்தமிழ் (1910), தொகுதி -8, பகுதி – 2, பக்கம் -71

கட்டுரை     :           கதாசரித சாசரம்

மொழிபெயர்ப்பாளர்   :           வீராசாமி (ஐயங்கார்)

304. அலிட்ரேசன் – முற்றுமோனை

நளன்சீர் நவிலுநல நல்கும் என்பதில் நகர முற்று மோனையால் வந்திருப்பதைக் கவனிக்க. அங்கில முடையார் இதை அலிட்ரேசன் என்பர்.

நூல்   :    நள வெண்பா மூலமும் அகல உரையும் (1910) நூற் சிறப்புப் பாயிரம், பக்கம் – 4

உரையாசிரியர்   :           தமிழ்வாணர் – மதுரகவி ம. மாணிக்கவாசகம் (பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்