(தமிழ்ச்சொல்லாக்கம்: 333 – 339 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 340-341

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

340. சுவாமி வேதாசலம் – மறைமலை அடிகள்

(1916)

பொதுநிலைக் கழக மாளிகை அழகிய பூங்காவினாற் சூழப்பெற்றிருந்தது. உள்ளமும் உடலும் நலமுறக் காலையினும் மாலையினும் அடிகளார் தம் அருமருந்தன்ன மகளுடன் உலாவி வருவார். தம் மகளையுந் தம்மைப்போலவே இன்னிசையிலே பயிற்றுவித் திருந்தனர் அடிகள். 1916இல் ஒருநாள் மாலை இராமலிங்க அடிகள் பாடிய,

“பெற்ற தாய்தனை மகமறந் தாலும்

பிள்ளை யைப்பெறுந் தாய்மறந்த தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்

உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சங் கலைமறந் தாலும்

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்குமென்

நமச்சி வாயத்தை நான்மற வேனே

என்னும் இப்பாடலை உள்ளமுருக உயிருருக ஓதி முடித்தனர் அடிகள். அப்பொழுது அடிகளின் உள்ளம் அப்பாடலின் இன்னோசையிலே மூழ்கியது.

நீலா! இப்பாடலிலுள்ள ’தேகம்’ என்ற வடசொற்கு மறாக, ’யாக்கை’ என்னுந் தமிழ்ச்சொல் ஆளப்பட்டிருப்பின் சொல்லோசை மேலும் இனிமையாக இருக்குமன்றோ? வடசொற்களும் ஏனை அயன்மொழிச் சொற்களுந் தமிழிற் கலப்பதால், தமிழ்மொழியின் இனிமை குறைவதுடன், தமிழ்ச் சொற்கள் பலவும் நாளடைவில் மறைய, அயன்மொழிச் சொற்கள் ஏராளமாகத் தமிழில் நிலைபெற்று விடுகின்றன. இதனாற் காலஞ் செல்லச் செல்லத் தமிழ்ச்சொற்கள் சிறுகச் சிறுக மறைந்தழிகின்றன. இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருந்தால், தமிழ்மொழியும் இறந்துபோன மொழிகளில் ஒன்றாகிவிடுமன்றோ? என்று கூறினர் அடிகள்.

நீலாம்பிகையார், அங்ங்னமானால், இனி நாம் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப உரைத்தனர்.

அன்று முதல் அம்மையார் தனித்தமிழ்ச் சொற்களையே அமைத்துப் பேசவும் எழுதவும் முற்பட்டார். அடிகளும் தம் மகளின் முற்போக்குக்கிணங்க, ‘சுவாமி வேதாசலம்’ எனுந் தம் பெயரை மறைமலை அடிகள் எனவும், தம் “ஞானசாகரத்தை அறிவுக் கடல் எனவும், மாற்றியமைத்தனர்.

மற்றும் தாம் எழுதிய புதிய நூல்களைத் தனித்தமிழிலேயே எழுதியும், பழைய நூல்களை மறுமுறை பதிப்பிக்கும்போது வட சொற்களைத் தனித்தமிழ்ச் சொற்களாக மாற்றிப் பதித்துந் தனித்தமிழ் தொண்டு புரிந்து வந்தனர்.

நூல்   :           மறைமலையடிகள் (1951) பக்கங்கள், 77, 78.

நூலாசிரியர்         :           புலவர் அரசு

341. காயசித்தி – உள்ளுடம்பு

உள்ளுடம்பு (காயசித்தி) பெறுதலையே பெறற்(கரும்) பேறாகவும், சித்தி முத்தியாகவும், மற்ற யாதனா சரீரங்களை விட்டு இந்த உள்ளுடம்பைப் பற்றுதலொன்றையே கடைப்பிடி’யாகவும் பிடித்துழைக்கிறவர்கள் உலகத்தில் உண்டென்பது விளங்கும்.

நூல்   :           நாத-கீத-நாமகள் சிலம்பொலி (1916) பக்கம் – 118.

நூலாசிரியர்         :           சி.வி. சாமிநாதையர்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்