(தமிழ்ச்சொல்லாக்கம்: 340 – 341 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 342-344

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

342. நவநீதகிருட்டிணன் – வெண்ணெய்க்கண்ணன்

இது மகா-ள-ள-சிரீ பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது.

நூல்      :           சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் – 4.

நூலாசிரியர்      :           மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்.

நூலைப் பரிசோதித்தவர் :           பிரசங்க வித்துவான் நவநீத கிருட்டிண பாரதியார்.

343. தரித்திரம் – நல்கூர்வார்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர் என்னும் இக்குறளைக் கவனியுங்கள். உலகத்தில் செல்வர்கள் சிலராக, நல்கூர்வார் (தரித்திரர்) பலராதற்குக் காரணம் யாதென் றாராய்ந்துழி; அது தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராதலும் போல வென்றார்.

நூல்      :           தவம் (1917) பக்கம் – 4.

நூலாசிரியர்      :           ச. தா. மூர்த்தி முதலியார் (தமிழ் நாட்டில் தமிழனே ஆளவேண்டும்; தமிழ்க்கொடி பறக்கவேண்டும் என்று முதன்முதல் கவிதை பாடியவர்)

344. களந்தை கிழான்

சைவ சித்தாந்த சமாசத்தின் பன்னிரண்டாவது அண்டுவிழா இச்சமாசத்தின் பன்னிரண்டாவது ஆண்டு நிறை விழா 1917ஆம் வருடம் திசம்பர் ௴ 23, 24, 25ஆம் தேதிகளில் சென்னைக்கடுத்த பிரம்பூர் செம்பியத்தில் அமைத்துள்ள ஓர் நாடகக் கொட்டகையில் கூடி சமாசத்தின் நிருவாக சபை அங்கத்தவரில் ஒருவராய் வெம்பியம் கிராம முனிசீப் சிரீமான் – பண்டிதரத்தினம் புழலை – திருநாவுக்கரசு முதலியாரவர்கள் (Honorary Magistrate) பெரு முயற்சியாய் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபூ கலியான சுந்தர யதீந்திர சுவாமிகள் அத்திராசனம் வகித்து விழாவை அணிபெற நடத்தினர்.

களந்தை கிழான் (கி. குப்புச்சாமி)

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி – 7, பகுதி – 1, பக்கம் – 17,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்