(சொற்களஞ்சியம் சுரதா! – தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

தமிழ்ச்சொல்லாக்கம் : 1-7

1.            Geometry – அளவு நூல்

கண்டிதமான அளவு நூலில் குத்துக்கு யாதொரு பெருமையும் இல்லை. (அதாவது) நீட்சியும் இல்லை, அகலமும் இல்லை, கனமும் இல்லை. கோட்டுக்கு நீட்சி மாத்திரம் உண்டேயன்றி, அகலமும் இல்லை, கனமும் இல்லை. ஆகையால், வழக்கத்தில் குத்துக்களையும், கோடுகளையும், இந்த வரையறுப்பு வாக்கியங்களின் கருத்துக்கு எவ்வளவோ சமீபமாய்ப் பொருந்தும்படி நாம் எடுக்கிறோமோ, அவ்வளவு, அவற்றின் மீது சார்வாய் இருக்கும் வேலைகள் திருத்தமாய் இருக்கும்.

நூல்        : அளவு நூல் (1857), இரண்டாம் புத்தகம், பக்கம் – 4

நூலாசிரியர்         : தாமசு (உ)லுண்டு, B.D.

விசுவகன்மியம் : சிற்ப நூல்

2. செவித்துவாரம்    – ஓசைப்புழை

3. சுக்கிலம்    – வீரியம்

4. சாதாரணம்  – பொது

நூல்        : சிவதருமோத்தரம் மூலமும் உரையும்

(மறைஞான சம்பந்த நாயனார்)

உரையாசிரியர் குறிப்புரை              : திருநெல்வேலி சாலிவாடீசுர ஓதுவாமூர்த்திகள்

5. புநர் விவாகம் – மறுமணம்

மேல் விவரித்த வேத வசனங்களாலும் சுமிருதி வசனங்களாலும் புருட சங்க நேர்ந்திராத கைமைகளுக்குப் புநர்விவாகஞ் செய்வது வேத சாத்திர சம்மதமென்றும், சில பிராம்மண சாதியில் இப்போதும் மறுமணம் நடந்தேறி வருகிறதாக சகநாததர்க்க பஞ்சானன வியாக்கியானத்தினால் தெரிய வருகிறபடியாலும், மேற்குறித்த வசனங்களின் ஆதாரத்தின் பேரில் மறுமணஞ் செய்து கொள்வதாய் தமயந்தி சுயவரம் சாட்டினதாக நளசரித்திரத்தினால் தெரிய வருகிறபடியாலும், பல்லாரி சில்லாவில் (இ)லிங்க பலசளூ என்கிற மிகவும் மேன்மை பெற்ற குலத்தாளில் சீரையுடுக்கி என்கிற மறுமணம் இப்போதுஞ் செய்யப்பட்டு வருவதாலும், இன்னம் சில இந்து சாதிகளில் மறுமணம் நடந்தேறி வருவதாலும், இத்தேசத்தில் பூர்வ காலத்தில் அது நடந்தேறி வந்து சிலகாலமாய் ஏதோ ஒருவிதத்தில் நின்று போயிருப்பதாகவும், மேற்சொல்லிய துரைத்தன சட்டங்களால் இராசநீதிக்கும்,சன சவரட்சணைக்கும், சவுக்கியத்திற்கும், விர்த்திக்கும் ஒத்திருப்பதாகவும் பிரகாசப்படுகின்றது.

நூல்        : இந்து கைமை புநர்விவாக தீபிகை (பக்கம் 13)

நூலாசிரியர்         : சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்.

6. Translation – மொழி பெயர்ப்பு

ஐந்தாம் வேதமென்னப்பட்ட சிரீ மகாபாரத இதிகாசமானது அநாதியான சம்சுகிருத பாடையில் சிரீ வேதவியாசரால் ஆதியில், சயாத இலட்சுமன்கின்ற நூற்றிருபத்தையாயிரங் கிரந்தமாக உலகோர்க்கு இசுபர சுகிர்தப் பிரயோசனகரமாய் நின்று உதவும்படி பிரசாதிக்கப்பட்டது. இதனை, அக்காலத் தொடங்கி இந்த பரதக் கண்டத்தில் வழங்கும் வடதேசத்துப் பாடைகளிலும் தென்தேசத்துப் பாடைகளிலும் அவ்வப் பெரியோர் தங்கள் தங்கள் தமிழ் தெலுங்கு முதலிய நடைகளில், தொகுத்தல் வரித்தல் தொகைவிரி மொழி பெயர்ப்பென்கின்ற நூல் யாப்பின் விதிப்படி காவியம் பத்தியம் வசனம் ஆகிய பல உரூபங்களாக ஏற்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் வெண்பாப் பாரதமென்பது மதுரைப் பாண்டியராசன் சங்கத்தார் செய்தது. இது இக்காலத்தில் இறந்த நூலாகி பொருளிலக்கண் நூல்களில் மேற்கோளாக மாத்திரம் காணப்படுகின்றது.

நூல்        : மகாபாரதமென்னும் இதிகாசத்தில் முதலாவது ஆதிபர்வம் (1870)

மகாபாரத சரித்திர பாயிரம்            : பக்கம் 1

நூலாசிரியர்         : தரங்கை மாநகரம் ந.வ. சுப்பராயலு நாயகர்.

7. தொகை விளம்பி – இது ஒரு யந்திரத்தின் பெயர்.

இருப்புப்பாதை வண்டிகளில் ஏறிச் செல்லும் பிரயாணிகளின் தொகையைத் தவறாமல் குறிப்பிக்கும். இந்த யந்திரங்கள் சில சென்னை வீதி இரும்புப் பாதை வண்டிகளில் வைக்கும்படி சீமையினின்று வந்து சேர்ந்தனவாம். வனவிலங்கதிசயம் பார்க்கப்போகும் பெயர் இத்தனை பெயரென்று திட்டமாய்க் கண்டு சேர்ந்த கட்டளைகளுக்கு அறியும்படி ஒரு யந்திரம் உத்தியானத்திலும் வைக்கப்படுமாம்.

இதழ்     : சனவிநோதினி, ஆகத்து – 1874

சொல்லாக்கம்    : இதழாசிரியர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்