பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
பன்னாட்டுத் தமிழ்மொழி
பண்பாட்டுக் கல்விக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
ஆடி 27, 2054 —– ஆகட்டு 12, 2023
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 1/7
கலைச்சொற்கள், துறைச் சொற்கள், தொழில் நுட்பச் சொற்கள் எனச் சிலவாறாகக் கூறப்படும் சொற்கள் இயல்பான வழக்கில் கருதப்படும் பொருள்களுக்கு மாறாகச் சிறப்புப் பொருள்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சொல்லே பயன்படும் இடத்திற்கு ஏற்ப இயல்புச் சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ பயன்படுத்தப்படுகிறது. எனவே, கலைச்சொல் என எதுவும் தனியாக இல்லை எனலாம்.
கலைச்சொல்லிற்காகத் தரப்படும் விளக்கமும் சரியில்லை. “மற்ற மொழிகளில் உள்ள சொற்களை அந்தந்தத் துறையில் உள்ளவர்கள் அவர்களின் துறைக்கு ஏதுவாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதே கலைச்சொற்கள்” என்கின்றனர். அப்படியானால் பிற மொழிச்சொற்களுக்கான பொருளை விளக்கும் சொற்கள்தாம் கலைச்சொற்கள் என்றால், தாய்மொழியிலேயே அமையும் நுட்பச்சொற்கள் அல்லது சிறப்புச் சொற்கள் கலைச்சொற்கள் ஆகாவா? எனவே, இத்தகைய விளக்கம் தவறு. இருப்பினும் நடைமுறை அடிப்படையில் கலைச்சொல் என்றே இங்கே பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சொல் இடத்திற்கேற்ப பொருளைப் பெறுகிறது. எனவே, பயன்பாட்டு அடிப்படையில்தான் கலைச்சொல் உருவாக்கப்பட வேண்டும்.
Back – பின் / முன்
எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்ப்போம்.
நான் வேறொரு கட்டுரையில் தெரிவித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
Back என்றால் பின் அல்லது பின்பக்கம் இருக்கும் முதுகு என நடைமுறையில் பொருள் கொள்கிறோம். back என்றால், பின்னே, உதவி செய், மீண்டும், பின்பகுதி, பின்பக்கம், காக்கும் ஆட்டக் காரர், காப்பாளர், முதுகுப்புறம், ஆதரவளி, முதுகு, புறம், குண்டில், சிறுபுறம், முதலான பல பொருள்களை அகராதிகள் குறிக்கின்றன. ஆனால் back file என்னும் பொழுது முந்தைய கோப்பு அல்லது முன் கோப்பு என்றாகிறது. இங்கே பயன்பாட்டில் பின் என்பதற்கு மாற்றாக முன் வருகிறது. எனவே, ஒரு சொல்லின் பொதுவான பொருளையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் பயன்பாட்டிற்கு ஏற்ற பொருளை விளக்கும் வகையில் சொல்லாக்கம் இருத்தல் வேண்டும்.
மற்றொன்றையும் இங்கே பார்ப்பது ஏற்றதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
Orderly room register
orderly என்றால் பொதுவாக ஏவலர் என்று குறிக்கப்பெறுகிறது.
துணை ஏவலர், ஒழுங்கு முறையான, துணை ஏவலர், உள்ளிருப்பு மருத்துவமனைப் பணியாள், மருத்துவமனை ஏவலாள், ஏவலாள், முதலான பொருள்களை அகராதிகள் குறிக்கின்றன. சிறைத்துறை போன்ற சீருடைத் துறை அலுவலகங்களில் orderly room register எனப் பதிவேடு உள்ளது.
இங்கே orderly என்பதை ஏவலர் என்று குறிப்பது தவறாகும். orderly என்பது தகவல்களை அல்லது உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடர்பானது அல்லது குற்றஞ்சாட்டப்படுவது எனப் பொருளாகும். அதுபோல், இங்கே orderly என்பது ஒழுங்குமுறை தொடர்பான குறைகளைத் தெரிவிப்பது. உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றாத அல்லது நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டும் குறைபாடுகளைப் பதிவது; அத்துடன் பணியாளர்களும் தங்கள் குறைகளை வெளிப்படுத்த வாயிலாக அமைவது.
room என்றால் பொதுவாக அறை என்றே குறிக்கிறோம். அறையில் இடமளி, கொட்டடி, அறைப்புரை, முறி, ஙனம், ஙகரம், நாடு, அறைவீடு, அங்கணம், தேயம், நிலையம், இடம், கதவு, அறை, அரங்கு, கோட்டம், பள்ளி, வெளி, அவகாசம், அறைக்கட்டு எனப் பல பொருள்களை அகராதிகள் கூறுகின்றன.
give no room for rumors என்றால் புரளிகளுக்கு(வதந்திகளுக்கு) இடம் தர வேண்டா எனப் பொருள். அறை தர வேண்டா எனச் சொல்வதில்லை.
எனவே, இந்த இடத்தில் room என்பதை அறை என்னும் பொருளில் குறிப்பது தவறாகிறது. பணியாளர்கள் தங்களுக்கு உள்ள குறைகளை மேலலுவர்களுக்குத் தெரிவிப்பதற்கான பதிவேடும் ஆகும். நான் முதலில் குறைநிறை பதிவேடு எனக் குறித்துள்ளேன். எனினும் குறை முறைப் பதிவேடு என்பதே சரியாக இருக்கும். குறைகளை முறையிடுவதற்கும் அதற்கான முறைகளைக் காண்பதற்குமான பதிவேடுதானே. எனவே
orderly room register – குறை முறைப் பதிவேடு எனலாம்.
ஆனால் இத்தகைய பதிவேடு நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.
சட்டச் சொற்கள் சில
சட்டத்துறையி்ல் வழக்கத்திற்கு மாறான பொருளுடைய சில சொற்களைப் பார்ப்போம்.
Achromatic – எழுதா ஆவணம்
Achromatic – நிறமற்ற என்று பொருள்.
எழுதப்பெறா என்னும் பொருளில் சட்டத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. பயன்பாட்டில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் > எழுதா ஆவணம் எனலாம். எழுதப்பெறாத வேதத்தை எழுதாக் கிளவி என்பது தமிழ் வழக்கு.
Alienation- மாற்றுரிமை
Alienation-மாற்றாக்கம் எனக் குறிப்பிடுகின்றனர்.
பராதீனம் என்றும் சொல்கின்றனர்; நற்றமிழ்ச் சொல்லன்று இது. பராதீனம் என்பதன் பொருள் கட்டுப்பாடற்ற என்பதாகும். ஆதலின் ஒன்றிலிருந்து விலக்குதல், பிரித்தல் என்றும் பொருள் படுகிறது. கட்டுப்பாடற்ற என்பது அதனால், பிறர் வயமாவதையும் குறிக்கிறது.
பிறர் வயமாக்குவதற்காக ஒருவர் சொத்து, நிலங்கள், குடியிருப்புகள் அல்லது பிற பொருட்களை மற்றொருவருக்கு மாற்றும் ஒரு செயலாகும். எனவே, மற்றாக்கம் எனப்படுகிறது. உரிமை மாற்றம் > மாற்றுரிமை என்றே சொல்லலாம்.
Alienee – மாற்றாளர்
சொத்து அல்லது சொத்து உரிமை மாற்றம் பெறுபவர். எனவே, சுருக்கமாக மாற்றாளர் எனப்படுகிறது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
Leave a Reply