பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7
Alimony-துணைமைப்படி/துணைமைத் தொகை
ஊட்ட உணவு, ஊட்டச்சத்து, ஊட்டமளித்தல் என்னும் பொருள் கொண்ட alimōnia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து alimony சொல் வந்தது.
வாழ்க்கைப்படி, பேணற்படி, ஊட்டம், வாழ்க்கைப் படி, பிரிமனைப் படி, வாழ்க்கைப்படி, வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி. சீவனாம்சம் எனப் பலவாறாகச் சொல்லப்படுகிறது. சீவனாம்சம் தமிழல்ல. பொதுவாகக் கணவன் பிரியும் நிலைக்கு மனைவிக்குத் தரும் வாழ்க்கைப்படியாக உள்ளது.
மணவிலக்கிற்குப் பின்னர், மனைவியின் உண்டி, உறையுள், உடை பிற தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவும் தொகை. மனைவியுடன் குழந்தை அல்லது குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் சேர்த்து வழங்கப்டுவது.
எனினும் சில நேர்வுகளில் மனைவியும் கணவனுக்குப் பேணல்படி வழங்கும் நிலையும் உள்ளது.
துணையைப் பிரிந்து வாழ்தல் அல்லது மணவிலக்கு பெற்று வாழ்தல் என்னும் ஒப்பந்த அடிப்படையில் துணைவருக்கு அல்லது முன்னாள் துணைவருக்குக் கொடுக்கப்பட வேண்டியது என நீதிமன்றத்தால் வரையறுக்குப்படும் தொகையாகும்.
குறைந்த வருவாய் அல்லது வருமானமின்மையால் துணைவர் அல்லலுறக்கூடாது என்பதற்காக இது வழங்கப்படுகிறது.
பொதுவாக வாழ்க்கைத் துணைவர் ஒருவர் இல்லற வாழ்க்கையிலிருந்து பிரியும் பொழுது மற்றொரு துணைவருக்கு அளிப்பது என்பதால் துணைமைப்படி எனலாம். படி என்று சொல்வதன் காரணம் திங்கள் தோறும் அளிக்கப்படுவதால். ஒட்டு மொத்தத் தொகை ஒரே தவணையில் வழங்கினால் துணைமைத் தொகை எனலாம்.
divorce என்றால் மண முறிவு அல்லது மண விலக்கு என்னும் பொருள்களிலேயே பார்க்கிறோம். 1990களில் ஒரு பையன் தன் பெற்றோரிடம் இருந்து divorce கேட்டு வழக்கு தொடுத்தான். அப்பொழுதுதான் உறவு முறிவு அல்லது உறவு விலக்கு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. இத்தகைய நேர்வில் வழங்கப்படும் படி பேணற்படியாகும். எனினும் வாழ்க்கைக்குத் துணையாகச் செலவுத் தொகையாக அல்லது பேணல் தொகையாக வழங்கப்டுவதால் துணைமைப்படி என்பதை இதற்கும் பொருத்தமாகக் கருதலாம்.
alibi, plea of – அயலிருப்பு முறைப்பாடு
alibī என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள்கள் வேறோர் இடத்தில் அல்லது மற்றோர் இடத்தில் என்பனவாகும்.
வேற்றிட வாதம் என்கின்றனர். அயலிடத்தில் இருப்பதாகத் தெரிவிப்பதால் alibi – அயலிட இருப்பு > அயலிருப்பு எனலாம். குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் குற்றத்திற்குத் தொடர்பில்லாத அயலிடத்தில் இருந்ததாக முறையிடுவதால் அயலிருப்பு முறையீடு ஆகிறது.
வழக்குரை, வேண்டுகோள், வேண்டுதல், எதிருரை, வாதுரை, சுர, நியாயம், வழக்கு, முறையீடு, வழக்கு, இரைஞ்சல், முறையீடு, வழக்குரை, வாதம், இரைஞ்சல், பிராது, புகார் எனப் பலவும் plea என்பதற்குத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றுள் பிராது என்பது உருதுமொழியி்ல் இருந்து வந்த சொல்.
பிற Plaint, request, Rejoinder, complaint போன்ற பிற சொற்கள் வரும் இடங்களில் பயன்படுத்தப்படுவதால் முறைப்பாடு எனலாம்.
குற்றஞ் சாட்டப்படுநர், அல்லது குற்றவாளி என ஐயப்படுபவர், குற்றம் நடந்த இடத்தில், குற்றம் நிகழ்ந்த நேரத்தில் இல்லை என முறையிடுவதே அயலிட முறைப்பாடு > அயலிருப்பு முறைப்பாடு
குற்றவழக்குச்சட்டத்தின்படிக் குற்றம் நடந்த இடத்தில் தான் இல்லை என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ் சாட்டப்பட்டவருடையதே.
amicus curiae, amica curiae – ஆற்றுநர்
amicus curiae ஆண் உதவியாளரையும் amica curiae பெண் உதவியாளரையும் குறிக்கிறது.
amīcus, cūria, cūriae என்னும் இலத்தீன் சொற்களின் பொருள்கள் முறையே நண்பன், நீதி மன்றம், நீதிமன்றத்தின் என்பனவாகும்.
amica என்பது பெண் உதவியரைக் குறிக்கும். பால் வேறுபாடின்றி இருபாலினரையும் நீதிமன்ற உதவுநர் எனலாம். நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர் என்பர்.
சட்ட வழக்கில் தரப்பினராக இல்லாமல், முறைமன்றத்திற்குத் தகவல், வல்லமைக் குறிப்பு அல்லது நுண்ணறிவை வழங்கி உதவும் தனியாள் அல்லது அமைப்பு. எனினும் மன்ற உதவுநர் கருத்தைக் கருதிப்பார்க்க வேண்டுமா இல்லையா என்பது முறைமன்றத்தின் முடிவுரிமைக்கு உட்பட்டது.
ஆனால், உதவியாளர்/ உதவுநர் என்னும் பொழுது அலுவலகப் பணிக்கான உதவியாளா் அல்லது எழுத்துப்பணிக்கான உதவியாளர் எனப்பொருள் கொள்ளவே நேரிடும். ஏனெனில் அலுவலக உதவியாளர்,இளநிலை உதவியாளர், உதவியாளர் எனப் பதவிகள் உள்ளன. எனவே, அவர்களிலிருந்து வேறுபடுத்த வேறு சொல் கையாள வேண்டும்.
ஆற்றுதல் என்பது வழிகாட்டி உதவுவதைத் குறிக்கும். எனவேதான் அவ்வாறு வழிகாட்டும் நூலை ஆற்றுப்படை என்றனர்.
“ஒருவீ ரொருவீர்க் காற்றுதிர்” என்கிறார் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறநானூறு 58, அடி 20,) இவ்வாறு உதவுதல் என்னும் பொருளில் வந்தாலும் வழிநடத்துதல் என்னும் பொருளே மிக்கிருக்கிறது.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன் என்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள் 46)
அறத்தாற்றின் – அறவழியில், இல்வாழ்க்கை ஆற்றின் – இல்லறத்தை நடத்திச் சென்றால் எனப் பொருள்கள்.
ஆற்றின் – ஆற்றுதல் – வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல், உவமையாதல்; செய்தல், தேடுதல், உதவுதல், நடத்துதல், கூட்டுதல், சுமத்தல், பசி முதலியன தணித்தல்; துன்பம் முதலியன தணித்தல்; சூடு தணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல் முறுக்காற்றுதல்; நீக்குதல் எனப்பொருள்கள்.
எனவே, வழி நடத்துநரை ஆற்றுநர் எனலாம்.
எனவே, முறை மன்றத்தில் வழக்கு தொடர்பான வழி நடத்துவதற்காக ஆற்றுப்படுத்துபவரை ஆற்றுநர் எனலாம். எனவே, முறைமன்ற ஆற்றுநர் > முறை யாற்றுநர் > ஆற்றுநர் எனலாம். ஆண் பெண் இருபாலராக இருப்பினும் ஆண் உதவியாளர் பெண் உதவியாளர் என்பதுபோல் குறிக்காமல் ஆற்றுநர் என்றே குறிப்பிடலாம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
Leave a Reply