கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக !

பல்துறைக் கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகள் தமிழ்நாட்டரசின் சார்பில் கலைபண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப் பெறுகின்றன.

பொதுவாக எத்தகைய விருதுகள் வழங்கினாலும் அவை குறித்த எதிருரைகள் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால்,  கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் எதிர் அலைகள் மிகுதியாகவே வீசப்படுகின்றன. “ திரைத்துறையினருக்கே கொட்டிக் குவிக்கின்றனர்; கலைஆற்றலின் மிகுதியைக் கருதாமல் ஆடைக் குறைப்பின் மிகுதியைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்குகின்றனர்; குறிப்பிட்ட சாதியினர்மட்டும்தான் தகுதியாளர்களா? அவர்களுக்கே விருதுகள் வழங்குவது ஏன்?; மதுரை சோமசுந்தரக் கடவுளுக்குக் காணிக்கை அளித்தவர்களுக்கு விருதுகளை விற்றுவிட்டனர்; மன்றத்தில் இருவர் பொறுப்பாளர்களை ஆட்டிப் படைத்து விலைக்கு விருது என்று நடைமுறைப்படுத்துகின்றனர்; ” என்பன போன்ற உள்ளக் குமுறல்களை விருது பெறாத கலைஞர்களும் ஊடகத்தினரும் சொல்வது இயல்பானதாக மாறி விட்டது.

இவ்வாறு, பணத்திற்கு விருதுகள் வழங்கப்படுவதாக ஆண்டுதோறும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. அவ்வாறு விருது பெற்றவர்களைவிட மூத்தக் கலைஞர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களுள் பலர் தகுதியானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அஃதாவது தகுதியற்ற பலருக்கு விருதுகள் விற்கப்படவில்லை.

1955 இல் ‘தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம்’  என்று தோன்றிய அமைப்புதான், 1973 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என மாறியது. அப்போதைய முதல்வர் கலைஞரால் தமிழ்மணம் கமழும் இப்பெயர் மாற்றம் நிகழ்ந்தது.  1990 இல் அப்போதைய முதல்வர் செயலலிதா கலைபண்பாட்டு இயக்ககம் என்னும் தனித்துறையை உருவாக்கினார். அப்பொழுது இம்மன்றம் இதன்  கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆனால், அங்கிருந்த பணியாளர்களால் எந்த இடத்திலும் கலைபண்பாட்டுத்துறையின் கீழ் இருப்பதாகக் குறிப்பது கிடையாது. அவ்வாறு குறிப்பிட்டால் தனிக்காட்டு அரசராகத் திகழ முடியாதே என்ற எண்ணம்தான் காரணம். எந்த விழாவிலும் துறைத்தலைவர் பெயரை அழைப்பிதழில் குறிப்பிடுவதில்லை; துறைத் தலைவரை மேடைக்கு அழைத்துப் பேச வைப்பதில்லை. ஆனால், நிதி பெறுதல் முதலிய அரசு தொடர்பு யாவும் கலைபண்பாட்டு இயக்ககம் மூலம்தான் நடைபெற்றது. கலைபண்பாட்டுத் துறை என்னும் உண்மையைக் குறிப்பிட்டால்தான் அரசிற்கு மன்றத்தின் வேண்டுகோள்கள், தொடர்பான பரிந்துரைகள் அனுப்பப்படும் என நான் கண்டிப்பாகக் கூறிய பின்னர்தான் கலைபண்பாட்டுத்துறை என்பதை அரை மனத்துடன் குறித்தனர் விழாக்களில் துறைத்தலைவரையும் பேச அழைத்தனர்

ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய கலைமாமணி விருதுகளை இடையிடையே வழங்காமல் சேர்த்து வழங்குவதையும் அரசு கடைப்பிடிக்கிறது. எடுத்துக் காட்டாக 2011- 2018 காலத்திற்கான விருதுகளைச் சேர்த்துத்தான் வழங்கினர். இதனால் எண்ணிக்கை மிகுந்ததால், வரிகையில் நின்றவர்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கி விட்டனர் எனக் கேலி பேசினர்.  உண்மையில் தமிழ்நாட்டில் மிகுதியான கலைஞர்கள் உள்ளதால், மிகுதியான விருதுகள் வழங்கப்படுவதை வரவேற்கத்தான் செய்ய வேண்டும்.

திரைப்படக்கலைஞர்களுக்கு மிகுதியாக விருதுகள் வழங்குவைத்தவிர்த்து, நாடகக் கலைஞர்களுக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி விருதுகள் பரவலாகப் பல துறையினருக்கும் வழங்க வேண்டும் என்று துறையில் தெரிவித்த பொழுது அவ்வாறே சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர், கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர்ச் சில குறிப்புகளை ‘அகரமுதல’ இதழ் வாயிலாக(மடல் எண் 101/2018 நாள் சித்திரை 04, 2049 / ஏப்பிரல் 17,2018) அளித்திருந்தேன். அவற்றை மீளவும் பின்வருமாறு தெரிவிக்கின்றேன்.

  1. கலைஞர்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஈர்க்கும் நோக்கில் அல்லது எதிர்க்கட்சி ஆதரவு நிலையைத் தடுக்கும் நோக்கில் கட்சிக் கண்ணோட்டத்துடன் விருதாளர்களைத் தெரிவு செய்யக்கூடாது.
  • கவர்ச்சியால் படம் ஓடினால், அவ்வாறு நடித்தமைக்காக விருதுகள் வழங்கப்பெறக்கூடா.
  • திரைப்பட வெற்றியைமட்டும் கருத்தில்கொள்ளாமல், தொழில்நுட்பம் முதலான வகைகளில் பின்புலமாக இருப்பவர்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
  • இளங்கலைஞர்களைப் பாராட்ட எண்ணினால், கலைமணி என்னும் விருதினை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வழங்கலாம்.20 ஆண்டுகளேனும் பட்டறிவு – அனுபவம் – உடையவர்களையும் 50 ஆண்டு அகவை( வயது) உடையவர்களையும் கருதிப்பார்க்க வேண்டும்.
  • படங்களுக்கும் கதை மாந்தர்களுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டுபவர்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டைப் படைப்புகளில் எதிரொலிப்பவர்களுக்கும் விருதுகள் வழங்குவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
  • திரைத்துரையினருக்கு விருதுகள் வழங்கப் பல அமைப்புகள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் முதன்மை அளிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
  • நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் விருதுகளைப் பரவலாக வழங்க வேண்டும்.
  • இயற்கலைஞர்கள் போதிய அளவு போற்றப்படுவதில்லை. தமிழறிஞர்களுக்கும் நற்றமிழ்ப் படைப்பாளிகளுக்கும் விருதுகள், இசை நாடகக் கலைஞர்களுக்கு இணையாக வழங்கப்பெற வேண்டும்.
  • தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் நடத்திவரும், பெரியார் வாசகர் வட்டம், ஒய்எம்சிஏ பட்டிமன்றம் முதலான பல அமைப்புகள் உள்ளன. கலை அமைப்புகளுக்கு வழங்குவதுபோல், இயற்றமிழ் வளர்க்கும் அமைப்புகளுக்கும் நீண்டகாலப் பொறுப்பாளர்களுக்கும் கலைமாமணி விருதுகள் வழங்க வேண்டும்.    
  • அரசு மாவட்ட அளவில் வழங்கும் ஐவகை கலைவிருதுகளில் மூத்தவர்களுக்கான கலைநன்மணி விருதும் கலைமுதுமணி விருதும் குறிப்பிடத்தக்கன. இவ்விருது பெற்றவர்களையும் கலைமாமணி விருது வழங்கக் கருதிப்பார்க்க வேண்டும்.
  • தமிழ்க்கலைகளை வளர்ப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என்பதால் அயற்கலை வாணர்களுக்கு விருதுகள் வழங்குவதைக் கைவிட வேண்டுகிறோம்.

இவை இன்றைக்கும் பொருந்தக் கூடியனவாக உள்ளன. எனவே, அரசு இதில் கருத்து செலுத்த வேண்டும்.

2011- 2018 ஆம் ஆண்டுகளில், கலைமாமணி விருதுகள் பின்வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன:

இசை நாடக ஒத்திசை (ஆர்மோனியம்) (3),

 இசை நாடக நடிகர் (1),

இசை நாடக நடிகை (1),

இயற்றமிழ் (13),

இயற்றமிழ் – கவிஞர் (3),

 இலக்கியச் சொற்பொழிவாளர் (1),

 ஒத்திசை (ஆர்மோனியம்) (0),

ஒளிப்படக் கலைஞர் (1),

ஓவியம்/சிற்பம்  (1),

 கடம் (1),

கலைத் திறனாய்வாளர் (1),

கவிஞர் (2),

காவடியாட்டம் (1),

கானா பாடல் கலைஞர் (1),

 குச்சுப்புடி (1),

 குரலிசை  (20),

கொம்பு தப்பட்டை (1),

கோல்கால் கட்டை(கோக்கலிக்கட்டை) (1),

 கைச்சிலம்பு (1),

சண்டைப்பயிற்சியாளர்/இயக்குநர் (1),

சமயச் சொற்பொழிவாளர் (2),

வளைகுழலிசை (saxophone) (1),

சின்னத்திரை நடிகர் (1),

சின்னத்திரை நடிகை (0),

சொற்பொழிவு(அரிகதை விற்பன்னர் (1). 

பாகவத மேளம் (1),

தவில் (2),

தாள இசை (1),

திரைப்பட இசையமைப்பாளர்  (2),

 திரைப்பட இயக்குநர் (3),

திரைப்பட உடை அலங்காரம் (1),

திரைப்பட குணச்சித்திர நடிகர்  (10),

திரைப்பட நடன இயக்குநர் (2),

திரைப்பட நடிகர் (1),

திரைப்பட நடிகை (7),

திரைப்படப் பாடலாசிரியர் (1),

தேவார இசை (1),

நகைச்சுவை  நடிகர் (5),

 நா முழவு( morsing) (1),

நாடகத்  தயாரிப்பாளர் (1),

நாடக நகைச்சுவை நடிகர் (2),

 நாடக நடிகர் (7),

 நாடக நடிகை (1),

நாட்டுப்புறப் பாடகி (1),

நாட்டுப்புறப் பாடற் கலைஞர் (1),

நாதசுரம் (7),

 நிகழ்ச்சித் தொகுப்பாளர்  (1),

நூலாசிரியர் (5),

நையாண்டி மேள நாதசுரம் (2),

பண்பாட்டுக் கலை பரப்புநர்  (1)

பம்பை (2),

 பரத நாட்டிய ஆசிரியர் (6),

 பரதநாட்டியம் (12),

பாகவத மேளம் (2),

பாவைக்கூத்து (2),

பின்னணிப் பாடகி (2),

புரவியாட்டம் (1),

புல்லாங்குழல் (1),

பொம்மலாட்டம் (1),

முந்நரம்பு வீணை(சித்தார்) (1),

முழவு(மிருதங்கம்) (2),

மூத்தப் பத்திரிகையாளர்  (4),

மெல்லிசை (2),

 மோகினியாட்டம் (1),

விகடம் (1),

விசைஇசை (key board) (1),

வில்யாழ்(வயலின்) (5),

வில்லிசை (3),

வீணை (3),

திரைப்படத் தயாரிப்பாளர் (2),

திரைப்பட  ஒளிப்படக் கலைஞர் (1), 

கரகாட்டம்(1),

திரைப்படப் பின்னணிப் பாடகர்(3)

ஒயிலாட்டம், தேவராட்டம் முதலிய சில நாட்டுப்புறக்கலைகளுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. 2021 இல் கலைமாமணி 31 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்களில் மூவர் தவிர ஏனைய அனைவரும் திரைத்துறையினரே. இதுவரை ஒட்டு மொத்தமாக 1924 பேருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் நாட்டுப்புறக்கலைஞர்கள்(150) இசை நாடகக்கலைஞர்கள்(91)  ஆகியோருக்குக் குறைவாகவே விருதுகள் வழங்கப்பட்டன. இந்தப் பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். 

ஏறத்தாழ 75 வகையான கலைப்பிரிவினருக்குக் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எல்லா ஆண்டும் எல்லாக் கலைப்பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருக்காது.  சில ஆண்டுகளில் சிலருக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்து அதற்கேற்பக் கலைப்பிரிவைச் சேர்க்கும் வழக்கமும் உள்ளது.  ஆகவே, விருதுகள் எண்ணிக்கயை ஆண்டுதோறும் சீராக அனைத்துப்பிரிவினருக்கும் கிடைக்கும் வகையில் உயர்த்த வேண்டும்.  இவர்களுள் மூத்த பத்திரிகையாளர் என்ற தலைப்பில் திரைப்படச் செய்தியாளர்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. காலம் காட்டும் கண்ணாடியாகத் திகழும் இதழப்பணிகளில் ஈடுபடுநருக்கு என்று இதழாளர் பிரிவில் ஆண்டுதோறும் ஐவருக்காவது விருதுகள் வழங்கப்பட வேண்டும் இவர்களுள் மின்னிதழாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவேண்டும்.

கலைத்துறையிலும் முத்திரை பதித்துள்ள முதல்வர் மு.க.தாலின் கருத்து செலுத்தி, விருதாளர் எண்ணிக்கை, விருது தெரிவு முறை முதலியன குறித்துத் தக்க வழிகாட்டிச் சீரான முறையில் கலைமாமணி விருதுகள் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

நக்கீரன் 2023, பிப்.11-14 பக்கங்கள் 19-22