தமிழில் தேர்ச்சி பெற மாட்டேன் போடா!…10 ஆம் வகுப்பு தேர்வு பகீர்

– கணேசுகுமார்

“இந்தி தெரியாது போடான்னு சொல்லிப் போராடினீங்களே? இப்போ தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே” என பா.ச.க., மூத்த தலைவர் எச்.ராசா போட்ட சுட்டுரைப் (twitter) பதிவுதான் தமிழ் ஆர்வலர்களுக்குக் கடும் அதிர்ச்சி!

இந்த ஆண்டு திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார். இதனைப் பலரும் பாராட்டியும் கொண்டாடியும் மகிழ்கின்றனர். இந்த நேரத்தில்தான் 9.12 நூறாயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வில் 47 ஆயிரம் மாணாக்கர், மாணாக்கியர் தமிழ்ப் பாடத்தில் தோல்வியைத் தழுவியிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லை, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தமிழில் ஒரு மதிப்பெண் மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது பேரதிர்ச்சி!

இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், “இது சங்கடமான செய்திதான். ஆனால், இதை அரசியல் நோக்கத்தில் பா.ச.க-வினர் குறை கூறுவது சரியில்லை. உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வு எழுதுபவர்களில் 20 விழுக்காட்டுக்கும் மேலான மாணவர்கள் இந்தி மொழியில் தோல்வி அடைகிறார்களே? அதற்கு என்ன விடை வைத்திருக்கிறார்கள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழில் 94.84 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கணக்கில் 90.89 விழுக்காடு, அறிவியலில் 93.67 விழுக்காடு, சமுக அறிவியலில் 91.86 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்தான். ஆனாலும் நாம் முழுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்யப் பிற மொழிப்பாடங்களில் ஒரு தாள் இருந்தாலும் தமிழில் இரு தாள் நடைமுறையை எதிர்காலத்தில் நடைமுறைக்கு அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும். அதே போல் தமிழ் வழியில் படிப்பவர்கள் பிற பாடங்களைப் பிழையுடன் எழுதினால் மதிப்பெண் குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் பிழையில்லாமல் எழுதுவதில் மாணாக்க, மாணாக்கியர் கவனம் செலுத்துவர். அது மட்டுமின்றி மருத்துவம் முதலான தொழிற்கல்விக்கான அடிப்படை மதிப்பெண்களில் தமிழில் பெற்ற மதிப்பெண்ணில் பத்து விழுக்காடு சேர்க்கப்படும் என அறிவித்தால் அனைவரும் தமிழை ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்கள்.

அதே போல் தமிழாசிரியர்களுக்குக் குறுங்கால மீள் பயிற்சி அளிக்க வேண்டும். தமிழாசிரியர்கள் பலருக்கே பிழையின்றி எழுதத் தெரியவில்லை. தமிழில் போதிய அறிவும் இல்லை. எனவே மீள்பயிற்சி மூலம் ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தவும் மாணவர்களின் தேர்ச்சியை நூறு விழுக்காடு வரை எட்டவும் முடியும்” என்றார் ஆற்றாமையுடன்.

தாய்மொழி கற்பதில் குறைபாடு குறித்து மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, “பொதுவாக மொழிப்பாடத்தில் ஆசிரியர்கள் சலுகை காட்ட மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு (centum) கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்குகிறார்கள். தமிழ் மொழியில் நூறு மதிப்பெண் வாங்க முடியாது என்பதால்தான் நிறையப் பேர் இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உலகம் முழுக்கத் தாய் மொழிப் பாடத்துக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அறிவியல் பாடத்துக்குக் கொடுக்கப்படும் முதன்மையை மொழிப் பாடத்துக்குக் கொடுப்பதில்லை. அது மட்டுமில்லை, நுழைவுத்தேர்வு என ஒன்று வந்த பிறகு அனைத்துப் பாடங்களுக்குமான தேவை குறைந்து விட்டது.

மொழிப்பாடம் குமுகத்தையும் (சமுகத்தையும்) குமுக (சமுக) உறவுகளையும் மேம்படுத்தும். மொழிப்பாடம் என்பது அறம் சார்ந்தது. அறம் நன்றாக இருந்தால்தான் மனநலம் நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் குமுகாய நலன் நன்றாக இருக்கும். இதை உணர்ந்துதான் இப்போது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வந்திருக்கிறது. அறிவியல் எந்த வகையிலும் மனிதநேயத்தைச் சொல்லிக் கொடுக்காது. எனவே மாணவர்களும் பெற்றோர்களும் மொழிக்கான ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், மொழிப்பாடங்களைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் தேர்வில் அரசு கவனம் செலுத்துவதும் முக்கியம். ஏனென்றால், மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்தாம் கற்பிக்கும் தகுதி படைத்தவர் என்ற கோட்பாட்டை உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்தாம் மொழிப் படிப்பைத் தேர்வு செய்து ஆசிரியராகும் சூழல் நிலவுகிறது.

இப்பொழுது தமிழில் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்ததற்கும் உளவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழில் 70 மதிப்பெண் வாங்கினால்தான் நுழைவுத்தேர்வில் பங்கேற்க முடியும் எனச் சொல்லிப் பாருங்கள்! அனைவரும் கட்டாயம் தேர்ச்சி அடைந்து விடுவார்கள். தமிழ் மொழி என்றாலே ஓர் இளக்காரம் நிலவுகிறது. எப்படியும் நமக்கு ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்கி விடுவார்கள் என்ற நினைப்பில்தான் மாணாக்கர் குமுகாயம் இருக்கிறது. இந்த மனப்பான்மையைத் தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டும்” என்றார்.

தமிழ் ஆசிரியை சுகுணா, “மொழிப்பாடங்களுக்கு நாங்கள் முதன்மை கொடுக்கிறோம். ஆனால் ‘தமிழ் படித்து என்ன ஆகப் போகிறது’ என்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். மொழி அழிந்தால் பண்பாடு மட்டுமில்லை ஓர் இனமே அழிந்து விடும் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்! அதே போல் பிற மொழிப்பாடங்களில் ஒரு தாள் இருந்தாலும் தமிழில் இரு தாள் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதனால் மாணவர்களுக்குத் தமிழ்த் தேர்வு முறையை எளிமைப்படுத்த முடியும்” என்றார்.

இது குறித்துத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசிடம் விளக்கம் கேட்டதும், “தமிழ் மொழியில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் உயர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கி இருக்கிறது. தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்டு வருகிறோம். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட குறைகள் சரி செய்யப்படும். கல்வித்தரம் மேம்படுத்தப்படும்” என்றார் உறுதியாக.

தமிழுக்குச் சோதனை நீங்கட்டும்!

  • குமுதம் ரிப்போர்ட்டர், மலர் 22, இதழ் 27 நாள் 01.07.2022, பக்கங்கள் 20-21

– தரவு: ஞானம்