(தோழர் தியாகு எழுதுகிறார் 96: பதிவுகள் தளத்தில் செவ்வி 3- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 4

அடுத்ததாகத் தேசிய இயக்கத்தில் வரும் இராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். இராணுவவாதம் என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல, குமுகவியத்திலும்( சோசலிசத்திலும்) வந்திருக்கிறது. நிறஒதுக்கலுக்கு எதிரான ஏ.என்.சி.யின்  (ஆப்பிரிக்க தேசியப் பே்ராயம்) போராட்டத்தில் கூட வந்திருக்கிறது. மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்டப் பட்டறிவுகளிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.சி.க்கு இருந்தது.  ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரிப் பட்டறிவுகள் இல்லை. நிரம்பவும் அடிப்படை நிலையில் இருந்தவர்கள். கற்றுக்  கொள்ள வேண்டிய பருவத்தில் இருந்தவர்கள். ஒரு பட்டறிவும் கிடையாது. பட்டறிவு வாய்ந்த அரசியல் தலைமை பாதியிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டது. ஆனால் ஏ.என்.சி.யில் நீங்கள் அபபடிப் பார்க்க முடியாது. அரசியல் தலைமைதான் இராணுவத் தலைமையாக மாறுகிறது. மண்டேலா எல்லாக் கட்டங்களையும் தாண்டி வந்தவர். அங்கோலாவில் நாம் பார்த்தோம். எம்.பி.எல.ஏ மட்டும்தான் கடைசிவரை போராட்டத்தில் நின்றது. யுனிட்டா  தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசின் கருவியாகவும், என்.எல்.ஏ. சிஜ.ஏ.வின. கைக்கூலியாகவும் ஆனது. இதற்காக நாம் அங்கோலாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் குறை சொல்ல முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மறைப் போக்குகள் பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட ஒரு தேசியத்தின் வெளியிலிருந்து ஏகாதிபத்தியத்தாலும் இந்திய அரசாலும் உள்ளிருந்து சாதியத்தாலும் வளர்ச்சி மறுக்கப்பட்டு தடைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தமிழ்த் தேசியம் என்பது முற்போக்கானது. குடிநாயகத் தன்மை கொண்டது. குடிநாயக உள்ளடக்கம் கொண்டது. அந்த உள்ளடக்கத்தைச் சரியான வழியில் வெளிப்படுத்துகிற கடமை தமிழ்த் தேசியத்திற்காகப் போராடுகிற சக்திகளின் கையில் இருக்கிறது. இதற்கு மாறான வடிவத்தை வெளிப்படுத்துபவர்களை எதிர்க்கிறோம். எம்முடைய தமிழ்த் தேசியத்தில் கொடுங்குழுவிய(பாசிச) ஆபத்து இல்லை. அப்படியாக நாம் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. 

யமுனா: 

தமிழ்த் தேசியத்தின் திட்டம் மற்றும் அதனது அரசியல் தந்திரோபாயம் என்ன? அதனது நேச சக்திகள் என்று எதனைக் கருதுகிறீர்கள்?

அதன் தலையாய எதிரிகள் என எதை வரையறுக்கிறீர்கள்? இந்தியத் தேசியம் என்பது பல்வேறு அண்டைத் தேசியங்களைக் கொண்ட அரசாக இருக்கிற சூழலில் இக்கேள்வி மிக முக்கியத்துவமுள்ளது என நான் கருதுகிறேன். ஒரு குறிப்பான சிக்கலான பிரச்சினை இங்கு என்னவென்றால் – நாங்கள் தேசியம் என்கிற போது ஒரு மொழியை வரையறுக்கிறோம். ஒரு எல்லையை வரையறுக்கிறோம். ஒரு பண்பாடடையும் வரையறுக்கிறோம். எனக்கு அதிகம் பரிச்சயமான தென் இந்தியச் சூழலில் இருந்து சிக்கலைத் துவங்கலாம் என நினைக்கிறேன். தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரா என  (நமது விவாதத்தின் பொருட்டு) நான்கு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த எல்லா மாநிலங்களிலும் குறிப்பான மொழி பேசுகிறவர்களை மட்டும் கொண்டதாக இம்மாநிலங்கள் இல்லை. தமிழகத்தில் இருக்கிற ஆறு கோடிக்கும் மேலானவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள் இல்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் உள்ளார்கள். இதே மாதிரியான ஒரு கலப்பான நிலைதான் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் நிலவுகிறது. இவவாறான சூழலில் கன்னட தேசியம், கேரள தேசியம், ஆந்திர தேசியம், தமிழக தேசியம் போன்றன முன்வைக்கப்படக் கூடிய சூழல் இருக்கிறது. எனில் இந்தத் தேசிய இனங்களின் சிக்கல்களை எதிரொலிப்பவர்களுக்கிடையிலான உறவுகள் முரண்கள் எவ்வகையில் அமையப் போகின்றன? 

தியாகு:

தமிழ்த் தேசியம் என்று சொல்கிற போது பிற மொழி பேசுகிறவர்கள் தொடர்பான சிக்கலில் இரண்டு விதமான நிலைகள்  இருக்கின்றன. ஒன்று வீட்டுத் தாய்மொழியாக மட்டும் பிற மொழிகளைக் கொண்டவர்கள். வாழ்க்கை மொழியாகத் தமிழை  ஏற்றுக் கொண்டவர்கள். அது தவிர்க்க முடியாதது. ஒரு  இயக்கத் துடிப்புள்ள சமூகம் (‘டைனமிக் சொசைட்டி’) அப்படித்தான் இயங்கும். அது ஒரு பெரிய கொதிகலன். அதற்குள் வருவதையெல்லாம் அது கலந்து ஒன்று சேர்த்துக் கொள்ளும். அப்படியில்லையெனில் அந்தச் சமூகத்தின் இயக்கமே சந்தேகத்துக்குரியதாகி விடும். அவ்வாறு தமிழ் மன்பதை என்பது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறிய தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மற்ற மற்றத் தேசிய இனத்தவர்களை, மற்ற மொழி பேசுகிற மக்களை உள்வாங்கி விட்டது. தேசிய இனத்துக்குரிய இலக்கண வரையறையில் பொது மொழி என்று சொல்கிறோமேயொழிய தாய்மொழி என்று சொல்வதில்லை. தாய்மொழியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமேயில்லை.

தென் ஆப்பிரிக்கத் தேசியத்தில் பார்த்தோமெனில் வரலாற்றுப் படிநிலைவளர்ச்சி என்பது எவ்வாறு பங்கு வகிக்கிறதெனப் பார்க்க முடியும். 13 மொழி பேசுகிற மக்கள் அவர்கள். மண்டேலாவின் மொழி வேறு. புத்துலேசியினுடைய மொழி வேறு. ஆனால் அவர்களுடைய மொழிகளெல்லாம் இயல்பாக வளர்ந்து தேசிய மொழிகளாக மலர்ந்து தனித்த தேசிய இனங்களாக வளரக் கூடிய வளர்ச்சிப் போக்கு என்பது வெள்ளையர்களின் குடியேற்ற ( காலானி)ஆதிக்கத்தினால் பாதியில் குறுக்கீட்டுக்குள்ளாகியது. எனவே இந்த மக்களெல்லாம் வளர்ந்து தேசிய இனம் ஆகிய பிறகு நமது விடுதலைக்குப் போராடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே அவசரமாக அவர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே கல்வித் துறை சார்ந்து ஆங்கிலம் பழகி இருந்தது.

ஆங்கிலத்தையே பொது மொழியாக எடுத்துக் கொணடார்கள். மண்டேலா விடுதலையாகி வெளிவந்து ஆங்கிலத்தில்தான் உரையாற்றினார். தென்னாப்பிரிக்க தேசம் என்பது உருவாகி வளர்ந்த போது, தேசியம் ஏற்கெனவே நிறஒதுக்கலுக்கெதிரான போராட்டத்தில் உருவாகி விட்டது. தென்னாப்பிரிக்கத் தேசியத்தின் மொழி ஆங்கிலம். சொவெட்டோ கிளர்ச்சி என்பது ஆங்கிலத்துக்கு ஆதரவாக, ஆப்பிரிக்கர் மொழித் திணிப்பிற்கு எதிராகத்தான் நடந்தது. ஆகவே பொதுமொழி என்பது முக்கியமாகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பெரும் பகுதியானவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வீட்டு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பொது மொழியாகத் தமிழைக் கொண்ருப்பவர்களைத் தமிழர்கள் அல்லாதவர்கள் என்று கருத நியாயமேயில்லை. அவர்களும் தமிழ்த்தேசிய இனத்தினுடைய ஒரு பகுதியே ஆவர். ஏற்கெனவே ஒன்று கலந்துவிட்டார்கள். இன்னும் கலந்து கொண்டே இருக்கிறார்கள். அந்தச் செயல்போக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

பிறிதொரு பகுதியினர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாத் தேசிய இனங்களிலும் இருப்பார்கள். எல்லையோரத்தில் வாழக் கூடியவர்கள். அவர்கள் தொடர்ந்து எங்கிருந்து வந்தார்களோ அந்தத் தாய்நாட்டோடு பிணைப்புகள், கொடுக்கல்வாங்கல் உறவு வைத்திருப்பார்கள். ரொம்பவும் அண்மைக் காலத்தில் வந்து குடியேறித் தம் அடையாளத்தைக் காத்துக் கொண்டிருக்கிற சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் உலகெங்கிலும் இருப்பவர்கள்தான். நமது நாட்டில் மட்டும் அதிசயமாக இருக்கிறவர்கள் அல்லர். இதற்காக இவர்கள் தேசிய அடையாளத்தைக் கைவிட்டு விடுகிறார்கள் என்றோ தேசிய மொழியைக் கைவிட்டுவிடுகிறார்கள் என்றோ பொருளன்று. இந்தப் போக்கும் ஒரு புறம் இருக்கும். தேசியச் சிறுபான்மையினர் உரிமை என்பதும் பிறிதொரு பக்கம் இருக்கும். மொழி, மதம், பண்பாடு ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வாழ்ந்தால் தன்னாட்சி சுயாட்சி – autonomy  – உள்பட அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்படும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65