(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6

யமுனா :

பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி விட்டதென அவர் அவதானிக்கிறார். இன்னும் தேசியம்  பெண்களின் உயிர் மறுஉற்பத்தி சார்ந்த விசயங்களைக் கட்டுப்படுத்தும் பிற்போக்கான கருத்தியலாகவும் வளர்ந்திருக்கிறது எனும் விமர்சனமும் அதன் மீது உண்டு. இவ்வகையில் தமிழ்த் தேசியத்தில் ஒரு சமூக சக்தியாகப் பெண்கள் பற்றிக் குறிப்பிபடவேயில்லை – அவர்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?

தியாகு:

சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு கூறாக ஆணாதிக்கத்திற்கெதிரான பெண்களின் போராட்டத்தை வரவிருக்கும் “தலித்தியமும் தமிழ்த் தேசியமும்” நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறேன். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் எல்லாவிதமான ஆதிக்கங்களையும் சாதிய ஆதிக்கத்தோடு தொடர்புபடுத்த முடியும் என நான் அதில் விவாதிக்கிறேன். ஆணாதிக்கத்தைக் கூட சாதிய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கருவியாக விளக்கிய அம்பேத்துகரை மேற்கோள் காட்டுகிறேன். எவ்வாறாக இராசபுத்திரர்களின் உடன்கட்டை ஏறும் பழக்கம் கூட அகமணமுறையைப் பாதுகாக்குமுகத்தான் ஏற்படுத்தப்பட்டது என அம்பேத்துகர் சொல்கிறார். பாரதிராசாவினுடைய ‘கருத்தம்மா‘ திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசினேன். ‘கருத்தம்மா’ படத்தில் ஏன் இந்த பெண் சிசுக் கொலைப் பழக்கம் வந்தது என்பதை பாரதிராசாவினால் சரியாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று நான் கூறினேன். வரதட்சணைக் கொடுமையால் சிசுக் கொலை நடப்பதாக அந்தப் படத்தில் அவர் சொல்கிறார். வரதட்சணைக் கொடுமையால் பெண்சிசுக் கொலை நடைபெற வேண்டுமானால் எந்தச் சாதியில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக இருக்கிறதோ அந்தச் சாதியில்தான் அந்தச் சிசுக்கொலை நடந்திருக்கவேண்டும். வரதட்சணைக் கொடுமை என்பது பார்ப்பனர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் எந்தப் பார்ப்பனக் குடும்பத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார் குடும்பத்திலும் பெண்சிசுக் கொலை நடக்கவில்லை. மாறாக முக்குலத்தோரில், தேவர் குடும்பஙகளில் நடக்கிறது – வரதட்சணை என்பதை ஒப்புக் கொள்ளாத சாதியில் பெண் சிசுக்கொலை இருக்கிறது. வரதட்சணைக் கொடுமை என்பது அவர்களிடம் இல்லை. தற்போது தலித்துகளுக்கிடையில் கூட வரதட்சணைப் பழக்கம் வந்திருக்கிறது. பார்ப்பனமயமாதலின்  தாக்கமாகத்தான் அது மற்றவர்களிடம் பரவியிருக்கிறது. தாங்களும் அவர்களைப் போல் நடந்து கொள்ளவும் இருக்கவும் மற்ற சாதிகள் முயற்சி பண்ணுவதின் விளைவுதான் வரதட்சணைக் கொடுமை இவர்களிடம் வந்திருக்கிறது. நான் அந்தப் படத்தின் உள்ளிருந்தே ஒரு உதாரணம் கொடுத்தேன். கருத்தம்மாவை ஒருவன் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்யப் போவான். போகும் போது இதோ இந்தச் சீதனத்தை வைத்துக் கொள் என்று கொடுப்பான். மாப்பிள்ளை பெண்ணுக்குச் சீதனம் கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொள்கிற பழக்கம்தான் தேவர் சாதியில் உண்டே தவிர பெண்வீட்டார் அவனுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் பண்ணுகிற பழக்கம் கிடையாது. எனில் தேவர் குடும்பத்தில் எப்படி பெண்சிசுக்கொலை நடக்கும்? இது வரதட்சணைக் கொடுமையோடு தொடர்புடையதல்ல, அந்தச் சாதியின் படைத் தொழிலோடு சம்பந்தமுள்ளது. அது படைச் சாதி (martial caste). அவர்கள் போர்களுக்குச் செல்கிற போது இயல்பாகவே ஆண்பெண் விகிதம் மாறிப் போய் விடுகிறது. ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது. பெண்களின் தொகை அதிகரிக்கிற போது திருமணம் செயவதற்கு அவர்கள் சாதியை மீறி வெளியில் போக வேண்டிய கட்டாயம் வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமெனில் – சாதியைக் காப்பாற்ற வேண்டுமெனில் –  ஆண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெண்களின் எணணிக்கையைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இராசபுத்திரர்களின் மத்தியில் இது உடன்கட்டை ஏறும் பழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், தேவர்கள் மத்தியில் இது பெண்சிசுக் கொலையாகியது என்று சொன்னேன். 

யமுனா:

தமிழ்த் தேசியத்தின் புரட்சிகரத் தன்மை, அதனது சமூக வருக்க சக்திகள் பற்றி இது வரை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியத்தின் எதிரிகளென எவரை வரையறுக்கிறீர்கள்?

தியாகு: 

தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு எது தடை – தேசிய வளரச்சியென்பதை சமூகத்தின் சனநாயக வளர்ச்சியாக – மனிதத் தன்மை கொண்ட, மனிதநேயம் கொண்ட ஒரு கட்டமைப்பை நோக்கிய சமூகத்திற்கான தடையாக – குமுகவியம், பொதுவுடைமை யெல்லாம்(சோசலிசம் கம்யூனிசமெல்லாம்) நீண்ட கால நோக்கம் – அதற்குள் எல்லாம் நாங்கள் இப்போது போகவில்லை – ஒரு சனநாயக சமூகத்தை – மனித சமத்துவம் நிலவும் “பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்” என்ற நிலையைக் கொண்டுவந்தால் போதும், இப்போது அந்தவொரு சமூகத்திற்கு எது தடையாக இருக்கிறது என நாம் பார்க்கிறோம். இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று, தில்லி ஏகாதிபத்தியம், மற்றது சாதியம். தில்லி ஏகாதிபத்தியம் என்கிற போது இந்திய  அரசைக் குறிப்பிடுகிறேன். இதனது சமூகச் சக்திகளை மூன்று விதமாக வரையறுக்கிறோம். ஐரோப்பா மாதிரி இந்தியச் சமூகத்தை வருக்கப் பகுப்பாய்வுக்குள், வருக்கக் குறுக்கல் வாதத்துக்குள் கொண்டுவர முடியாது. அந்தக் கட்டத்தை நாம் தாண்டிப் போய் விட்டோம். ஆனால் வருக்கம் இல்லையென்றோ வருக்க நிராகரிப்பு என்றோ நாம் சொல்லவில்லை.

1)     அந்நிய நிதி மூலதனத்தோடு இணைந்து செயல்படுகிற, அதனைச்  சார்ந்திருக்கிற – உலகமயமாதல்  மற்றும் ஏகாதிபத்தியப் போக்குகளின் கருவியாகச் செயல்படுகிற – இந்தியப் பெருமுதலாளி வருக்கம். இவர்களை நாம் பன்னாட்டு மூலதனத்தினர் என்று வரையறுக்கிறோம். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று நாங்கள் சொல்கிற போது இவர்கள் பன்னாட்டு மூலதனத்தினர்தான். வருக்கெமன்று பார்க்கும் போது இவர்கள்தான் முதல் எதிரிகள்.

2)     சமூகச் சக்திகள் என்று பார்க்கிற போது உத்தியோகத் துறை மற்றும் பொருளுற்பத்தியில் இருக்கக் கூடிய மூலதனம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பார்ப்பன பனியா வருக்கம். இது சாதிய அடிப்படை கொண்டது.

3)      இந்துத் தேசியம் என்கிற இந்தியத் தேசியம்: இந்தி மொழி ஆதிக்க சக்திகள். இவர்கள் சார்பில் நடைபெறுவதுதான் இந்திய அரசு அதிகாரம் என்று நாம் வரையறை செய்கிறோம். இவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் எமது நோக்கம். இதற்கான புரட்சிகர சக்திகள் யார்? இயல்பாகத் தமிழ்த் தேசியம் என்பது எந்தெந்தச் சக்திகளின்  வளர்ச்சிக்குத் துணை செய்யுமோ அந்தச் சக்திகள். – அப்படிப் பார்க்கிற போது பாட்டாளி வருக்கம் – பாட்டாளி வருக்கம் இன்னும்  முழு வளர்ச்சி பெறாத போதும் –  வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளி வருக்கம் என்று கொள்ளலாம். – அதே போல சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் – இவர்கள்தான் பிரதான சக்திகள். இதைப் போலவே பிற்படுத்தப்பட்ட சாதியினர் – இவர்களைப் பொறுத்து இரண்டு விதமான போக்குகளை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது – அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகப் போராட வேண்டும். அவர்களே அடிமைகள் எனும் அளவில் அவர்களுக்கு மேலிருக்கிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். போராட்டப் போக்கில்தான் இந்தச் சக்திகளை நாம் ஒன்றுபடுத்த முடியும். அடுத்தாகச் சமுதாயத்தில் இருக்கும் சனநாயக சக்திகள். இதில் எந்த வருக்கமும் உள்ளடங்கும். எந்தச் சாதியும் இதற்குள் வரலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65