(உ.வே.சா.வின் என் சரித்திரம், 11 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 7
கிருட்டிண சாசுதிரிகள்
(தொடர்ச்சி)

வாழ்நாள் முழுவதும் சிவ பூசையும் சபம் முதலிய கருமானுட்டானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகசுதர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருட்டிண சாசுதிரிகளென்பது.

அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்; சிவ பக்தியிற் சிறந்தவர். அரதத்த சிவாசாரியார், அப்பைய தீட்சதர், நீலகண்ட தீட்சதர், திருவிசைநல்லூர் ஐயா அவர்களென்னும் ஸ்ரீதர வேங்கடேசர் முதலிய பெரியோர்கள் இயற்றிய சிவ தோத்திரங்களிலும் நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எப்பொழுதும் அவருடைய வாயிலிருந்து சிவநாமம் இனிய மெல்லிய தொனியிலே வெளிவந்து கொண்டிருக்கும். வண்டின் (இ)ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவநாமத்திலே நான் இளமையிலே ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம சபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ அந்த சபத்தைச் செய்து கொண்டுவருகிறேன்.

இளமையில், கிருட்டிண சாசுதிரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர சபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமத்தான்; அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருட்டிண சாசுதிரிகளே யாவர்.

புதுக்கோட்டையைச் சார்ந்த ஆரணப்பட்டி என்னும் ஊரில் அவர் இருந்தார்; பதினான்கு பிராயத்தில் தம் தந்தையாரிடம் பார்த்திப பூசையும் படிகலிங்க பூசையும் பெற்றுக்கொண்டனர். அந்த படிகலிங்கமாகிய மூர்த்திக்குச் சிதம்பரேசரென்பது திருநாமம். அவர் நாள்தோறும் இலட்சம் சிவநாம சபம் செய்வார். ஆருணம் சொல்லி 124 சூரிய நமசுகாரம் செய்து சகசுரநாம பாராயணம் பண்ணுவார். விடிய நான்கு நாழிகை தொடங்கி இரவு பத்து நாழிகை வரையில் பெரும்பாலும் வைதிக மார்க்கத்திலேயே அவருடைய காலம் செல்லும்.

தம்முடைய தந்தையார் காலஞ்சென்ற பிறகு ஆரணப்பட்டியிலே இருந்து வருகையில், அவருடைய மூத்த சகோதரியார், புருசர் காலஞ் சென்றதனால் தம் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அது முதல் அவரே குடும்பத்தின் பொறுப்பை வகித்து நடத்தத் தொடங்கினார். சிவ பூசா துரந்தரராகிய கிருட்டிண சாசுதிரிகள் தம்முடைய தமக்கையார் அடைந்த கோலத்தைக் கண்டு வருந்தினாலும், ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று எண்ணுபவராதலால் ”நமக்குக் குடும்பத் தொல்லை இராவண்ணம் திருவருள் இவ்வாறு செய்வித்தது போலும்” என்று ஒருவாறு ஆறுதலுற்றார். சில காலம் அங்கே இருந்து வந்தபோது தம்முடைய பந்துக்கள் நிறைந்துள்ள சோழ நாட்டில் காவிரிக் கரையை அடுத்துள்ள ஊர்களில் ஈசுவர ஆராதனம் செய்துகொண்டு காலங் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. குடும்ப நிருவாகத்தில் தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாமையால் எந்தச் சமயத்திலும் புறப்படும் நிலையில்தான் அவர் இருந்தார்.

அவருக்குத் தம் நிலங்கள் முதலியவற்றைப் பற்றியே ஞாபகம் இல்லை. வீடு, நிலம் எல்லாவற்றையும் தமக்கையாரிடமே ஒப்பித்து விட்டு அவற்றிற்கு ஈடாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு செல்லலாமென்று எண்ணித் தமக்கையாரிடம் தம் கருத்தைச் சொன்னார். அவர் தம் தம்பியாருடைய மனோபாவத்தை உணர்ந்து ஐந்நூறு உரூபாயை அவரிடம் கொடுத்து அவர் விருப்பப்படியே செல்லும்படிக் கூறினர்.

கிருட்டிண சாசுதிரிகள் அத்தொகையில் செலவுக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு எஞ்சியதைக் காவிரியின் வடபாலுள்ள கோட்டூரென்னும் ஊரில் இருந்த தம் முதல் மைத்துனி குமாரர்களுக்கு அனுப்பிவிட்டு ஆரணப்பட்டியை விட்டுப் புறப்பட்டார். தம்முடைய பூசையுடன் மனைவியாரை அழைத்துக்கொண்டு சோழ நாட்டை நோக்கி வருகையில் இடையிடையே பல ஊர்களில் தங்கினர். சிவ பூசையும் வைதிக ஒழுக்கமும் உடைய அவரை அங்கங்கே உள்ளவர்கள் ஆதரித்து உபசரித்தனர்.

அக்கிரகாரங்களில் அத்தகைய பக்தரைக் கண்டுவிட்டால் சிவகணத்தைச் சேர்ந்த ஒருவரே வந்ததாகக் கருதி அவரை உபசரித்துப் பாராட்டுதல் அக்காலத்து வழக்கம். தெய்வ பக்தியும் உபகார சிந்தையும் உடையவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தனர். எல்லா வகை வருணத்தினரும் பக்தியுடையவர்களிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆதலின் கிருஷ்ண சாஸ்திரிகளுக்குப் பிரயாணத்தில் எந்தவிதமான இடையூறும் நேரவில்லை.

அவருக்கு உலக வியாபாரம் ஒன்றும் தெரியாது. செல்வம், அதிகாரம், கல்வி முதலியன அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சிவபக்தி நிறைந்த மனமும், கவலையின் தோற்றம் இல்லாமல் கடவுள் திருவருளையே நம்பியிருக்கும் தெளிவைக் காட்டும் முகமும், சாந்த நடையும் அவருக்கு மதிப்பை உண்டாக்கின. அவர் ஒரு முயற்சியும் செய்யாமலே பெருமையை அடைந்தார்; அவருடைய மௌனமே புலவர் பேச்சைவிடக் கவர்ச்சி தந்தது; அலங்காரமற்ற அவரது உருவத்தின் தூய்மையே அவருக்கு மிக்க அழகை அளித்தது.

இடையிடையே சில தலங்களைத் தரிசித்துக்கொண்டு கிருட்டிண சாசுதிரிகள் உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். அங்கே அப்பொழுது கச்சிக் கலியாணரங்கப்ப உடையார் சமசுதானாதிபதியாக இருந்தார். தானாதிகாரியாக இருந்த சிரீ சுப்பராய சாசுதிரிகளென்பவர் என் மாதாமகருடைய இயல்பை அறிந்து அவரைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அப்பால் அந்த சமசுதானத்தைச் சார்ந்த இடத்தில் அவரைச் சௌக்கியமாக இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணிய தானாதிகாரி அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருட்டிண சாசுதிரிகள், “பரமசிவனது கைங்கரியம் கிடைத்தது ஈசுவர கிருபையே” என்று எண்ணி அங்கே இருந்து வரலானார்.

கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயம் இராசேந்திரனென்னும் சோழ சக்கரவர்த்தியால் அமைக்கப் பெற்றது. அந்த ஆலயத்தின் பெயர் கங்கைகொண்ட சோழீச்சுரமென்பது. கோயில் மிகப் பெரியது. அந்தப் பெரிய கோவிலுக்கு ஏற்றபடி சிவலிங்கப் பெருமானும் மிகப்பெரிய திருவுருவத்தை உடையவர். அங்கே சாரத்தில் ஏறித்தான் அபிசேகம் முதலியன செய்வார்கள். அரிய சிற்பத் திறன் அமைந்த அவ்வாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. வடநாட்டுக்குச் சென்று வெற்றிகொண்ட இராசேந்திரசோழன் வடநாட்டு அரசர்கள் தலையில் கங்கா சலத்தை ஏற்றிக் கொணர்ந்தானென்றும் அதனால் அவனுக்குக் கங்கைகொண்ட சோழனென்னும் சிறப்புப் பெயர் வந்ததென்றும் சொல்வர். தனது வடநாட்டு வெற்றிக்குப் பின் அச்சக்கரவர்த்தி கங்கைகொண்ட சோழபுரத்தை நிருமாணம் செய்து அங்கே சிவாலயத்தையும் அரண்மனையையும் அமைத்தான். பழைய காலத்தில் சோழ இராசதானியாக இருந்த அந்நகரம் இப்போது சிற்றூராக இருக்கிறது. ஆலயம் பழைய நிலை மாறிப் பல இடங்களில் குலைந்து காணப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் சிங்கக் கிணறு என்ற ஒரு தீர்த்தம் உண்டு. சிங்கத்தின் வாய்க்குள் புகுந்து செல்வதுபோல அதன் படிகள் அமைந்துள்ளன. வட நாட்டு அரசர்களால் எடுப்பித்து வந்த கங்கா சலத்தை அந்தக் கிணற்றில் விடும்படி அரசன் கட்டளையிட்டான். அதனால் அதனைக் கங்கையென்றே கூறுவார்கள். பிற்காலத்தில் கங்கை அதில் ஆவிர்ப்பவித்தாக ஓர் ஐதிகம் ஏற்பட்டு விட்டது.

கிருட்டிண சாசுதிரிகள் தமக்கு அளிக்கப் பெற்ற ஒரு வீட்டில் இருந்து தமக்குரிய வருவாயைப் பெற்றுத் திருப்தியுற்றார். தம்முடைய நித்திய கருமங்களைத் தவறாமல் முடித்துக்கொண்டும், ஆலயத்திற்குச் சென்று தம்முடைய கடமையைச் செய்துகொண்டும் வாழ்ந்து வந்தார். சிங்கக் கிணற்றில் விடியற் காலம் ஸ்நானம் செய்வது அவர் வழக்கம். ஆலயத்தின் தேவகோட்டத்தைச் சூழ்ந்து சுவரில் அமைந்துள்ள சிவபெருமானுடைய அறுபத்து நான்கு மூர்த்தங்களையும் தரிசித்து இன்புறுவர். தேவகோட்டத்தின் முன்பு தெற்கும் வடக்கு முள்ள வாயில்களில் கீழ்ப் பக்கத்துச் சுவரில் மேற்கு முகமாக மிகப் பெரியனவாகவும் அழகுடையனவாகவும் இலட்சுமி வடிவமும், சரசுவதி வடிவமும் உள்ளன. அவ்விரண்டு தேவிகளிடத்தும் அவருக்கு அன்பும் ஈடுபாடும் அதிகம்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.