உ.வே.சா.வின் என் சரித்திரம் 19
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 18 தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 11
விளையாட்டும் விந்தையும்
விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல் விளையாடுவேன். கண்டால் அடித்துவிடுவா ரென்ற பயம் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டு மென்பது அவரது நினைவு.
என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர் நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்பிப்பதுண்டு; அவர் வார்த்தைகளால் கடிந்துகொண்டு போதிப்பார்; சில சமயம் அடிப்பார். என் தந்தையாரோ கற்பிக்கும் போதெல்லாம் அடிப்பார்; வைவார்; அவரிடம் கற்றுக்கொள்வதைவிட அடிபடுவதுதான் அதிகமாக இருக்கும். அப்பொழுது என் தாயார் வந்து, “குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்? அடிக்க வேண்டாம்” என்று கூறுவார். அந்த வேண்டுகோள் என் தந்தையாருக்குப் பின்னும் கோபத்தையே உண்டாக்கும்.
பிள்ளைகளோடு பிள்ளையார் பந்து, கிட்டுப்புள், பாண்டி, பட்டம் விடுதல் முதலிய விளையாட்டுக்களை விளையாடுவேன். வீட்டிலிருந்தபடியே ஒட்டி, பல்லாங்குழி, பதினைந்தாம் புள்ளி முதலிய ஆட்டங்களும் ஆடுவேன்.
சலகண்டம்
எனக்கு நீச்சல் தெரியாது. வாய்க்காலிலும் குளத்திலும் என் தோழர்கள் நீந்தி விளையாடுவதைப் பார்க்கும்போது எனக்கு அவர்களிடம் பொறாமை உண்டாகும். அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்ப்பதோடு நிற்பேன். ஆயினும் ஒருமுறை பிள்ளைகளோடு சேர்ந்து எங்கள் ஊர்க் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது ஆழத்திற்குச் சென்று மூழ்கி விட்டேன். ஒருவர் வந்து என்னை எடுத்தார். என் தாயார் என் சாதகத்தில் எனக்கு மூன்று சலகண்டங்கள் ஏற்படுமென்று இருப்பதாகச் சொல்வார். அன்று நான் மூழ்கியதே முதற் கண்டம். பிறகு பட்டீச்சுரத்திலும், அவிநாசியிலும் இரண்டுமுறை நான் சலகண்டத்திற்கு உட்பட்டு மீண்டேன்.
சங்கீத அப்பியாசம்
எனக்கு ஆறாம் பிராயம் நடக்கும்போதே சங்கீதத்தில் பிரியம் உண்டாயிற்று. எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான அந்த வித்தையில் இயல்பாகவே எனக்கு விருப்பம் இருப்பதை அறிந்து என் சிறிய தந்தையார் சரளி வரிசை சொல்லித் தந்தார் அவரும் என் தந்தையாரும் பாடுவதைக் கேட்டுக் கேட்டு அவ்வாறே பாட முயன்று பார்ப்பேன்.
சித்திரப் பழக்கம்
சித்திரம் எழுதுவதிலும் எனக்கு இயற்கையாகவே ஒரு முயற்சி இருந்து வந்தது. காகிதங்களைப் பலவிதமான பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கமும் உண்டாயிற்று. பலவகையான மிருகங்களையும் பறவைகளையும் போல எழுதுவேன்; அன்னபட்சி போலவும் யானை போலவும் வரைவேன். சில தெய்வங்களின் படங்களையும் எழுதுவேன். எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கேயுள்ள சித்திரங்களில் என் கருத்துச் செல்லும். ஒவ்வொன்றையும் கவனித்து ஆராய்வேன்.
இராத்திரி காலங்களில் எங்கள் ஊரில் நடைபெறும் புராணக் கதைகளைக் கேட்பதனாலும், என் சிறிய தகப்பனாரது போதனையினாலும் எனக்குச் சில புராண வரலாறுகள் தெரிந்தன. அந்த அறிவினால் கோயிலிலுள்ள சித்திரங்களைக் கண்டு தெளிந்து இன்புறும் உணர்ச்சி ஏற்பட்டது.
ஒரு சமயம் என் தந்தையார் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு சுவாமிமலைக்குப் போனார். அங்கே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். கோயிலில் பாவு கல்லிலே பல சித்திரங்கள் அழகாக எழுதப் பெற்றிருந்தன. நானும் தந்தையாரும் பிறரும் அவற்றைக் கவனித்து வந்தோம். ஒரு சித்திரத்தில் ஒரு பெரியவர் கை கட்டி வாய் புதைத்து வணக்கக் குறிப்புடன் நின்றிருந்தார். அருகில் ஒரு குழந்தை ஆசனத்தில் உட்கார்ந்திருந்தது. ‘இந்தப் படம் எதைக் குறிக்கின்றது?’ என்று என் தகப்பனார் யோசித்தபடியே அதை உற்றுக் கவனித்தார். நான், ‘சுப்பிரமணிய சுவாமி பரமசிவனுக்கு உபதேம் செய்ததாக இருக்கலாமோ?” என்று சொன்னேன். என் தகப்பனார் முகத்தில் சந்தோசம் பொங்கியது; என்னை எடுத்து அணைத்துக் கொண்டார். முருகக் கடவுள் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த அவசரமே சுவாமி மலையில் உள்ள ஐதியம்.
உத்தமதானபுரத்தில் இரண்டு நந்தவனங்கள் இருந்தன. நானும் வேறு சில பிள்ளைகளும் அங்கே சென்று எங்கள் வீட்டுப் பூசைக்குவேண்டிய பத்திர புட்பங்களை எடுத்துவந்து கொடுப்போம்.
மாதாமகர் உபதேசம்
இடையிடையே என் தாயார் தம்முடைய பிறந்தகமாகிய சூரியமூலைக்கு என்னை அழைத்துச் சென்று வருவார். அப்போது இடைவழியில் என் பெரியதாயார் இருந்த தியாகசமுத்திரத்திலும், சிறியதாயார் இருந்த கோட்டூரிலும் தங்கிச் செல்வோம். சூரியமூலையில் என் மாதாமகருடைய நித்திய கருமானுசுட்டானங்களையும் சிவ பூசையையும் சாந்தமான இயல்பையும் கவனித்தபோது எனக்கு அவரிடத்தில் பக்தி உண்டாயிற்று. அவர் பூசையை முடித்துக்கொண்டு பகல் இரண்டு மணிக்கு உண்பார்; அப்போது அவரோடு நானும் உண்பேன். அவ்வாறு உண்ணும்போது எனக்கு ஒருவித இன்பம் உண்டாகும்; உடம்பில் ஒரு புதிய வேறுபாடு தோற்றும். தெய்வப் பிரசாதத்தை உண்ணுகிறோமென்ற நினைவே அதற்குக் காரணம். அவருடைய தூய்மை என் உள்ளத்தைக் குளிரச் செய்தது.
விடியற்காலத்திலும் பிற்பகலிலும் இரவிலும் அவர் செய்து வந்த சிவநாம சிமரணை என் காதில் விழும்; அது மெல்ல மெல்ல என் உள்ளத்திலும் இடங்கொண்டது. நானும் அதில் ஈடுபட்டு ஓய்ந்த நேரங்களில் சிவ நாமத்தைச் சொல்லி வரலானேன்.
ஒரு நாள் நான் சிவ நாமம் சொல்லிக்கொண்டிருந்தபோது என் மாதாமகராகிய கிருட்டிண சாத்திரிகள் அதனை அறிந்து வியந்தார். அப்போது என்னிடத்தில் அவருக்குக் கருணை பிறந்தது. உடனே மிருத்தியுஞ்சய தோத்திர சுலோகங்கள் பதினாறையும் எனக்கு உபதேசித்தார்; மார்க்கண்டேயர் அந்த மந்திரத்தால் சிரஞ்சீவியாக வாழலானாரென்ற புராண வரலாற்றையும் கூறி, “அப்பா, இந்த மந்திரங்களைத் தினந்தோறும் சூரியாத்தமனத்திற்குப் பின்பு ஒவ்வொரு சுலோகமாகச் சொல்லி ஈசுவரத் தியானம் செய்து நமசுகாரம் செய்வாயானால் நல்ல சௌக்கியம் ஏற்படும்; ஆயுர் விருத்தியும் உண்டாகும்” என்று கட்டளையிட்டார். அப்படியே நாள்தோறும் செய்யத் தொடங்கினேன் சில வருடங்களுக்கு முன்பு வரையில் நமசுகாரம் செய்ய முடிந்தது. சில காலமாகச் சுலோகத்தை மாத்திரம் சொல்லி வருகிறேன்.
இங்கிலீசு எழுத்துகள்
என் இளமைக் காலத்தில் கிராமங்களுக்கு இங்கிலீசு படிப்பு வரவில்லை, நகரங்களில் சில பள்ளிக்கூடங்களில் இங்கிலீசு கற்றுத் தந்தார்கள். இங்கிலீசு தெரிந்தவர்களுக்கு அளவற்ற மதிப்பு இருந்தது. அரைகுறையாகத் தெரிந்துகொண்டவர்களுக்குக்கூட எளிதில் ஏதேனும் வேலை கிடைக்கும்.
கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கத்தில் இருந்தன. நான் இளமையில் அவற்றையே கற்றுக் கொண்டேன்.
உத்தமதானபுரத்தில் நாங்கள் இருந்தபோது எனக்கு உபாத்தியாயராக இருந்த சாமிநாதையர் வீட்டிற்கு அவருடைய பந்து ஒருவர் அடிக்கடி வருவார். அவருக்குச் சிவசுவாமி ஐயரென்று பெயர். அவர் இங்கிலீசு படித்தவர். அவர் வந்த காலத்தில் என் உபாத்தியாயர் அவரிடம் சொல்லி எனக்கு இங்கிலீசு எழுத்துகளை கற்பிக்கும்படி கூறினர். அப்படியே அவர் கற்பிக்க நான் அவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிலீசு எண்களையும் (1, 2 முதலியவற்றையும்) அவரிடமே தெரிந்து கொண்டேன்.
இங்கிலீசு எழுத்துகளைத் தெரிந்துகொண்ட போது எனக்குள் இருந்த பெருமிதம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்த எழுத்துக்கு அவ்வளவு பிரபாவம் இருந்தது. வெறும் எழுத்துகளைத் தெரிந்து கொண்ட மாத்திரத்தில் பெருமை பாராட்டுவதும், கையெழுத்து மாத்திரம் இங்கிலீசில்போடத் தெரிந்து திருப்தியடைவதும் அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன.
எனக்கு இங்கிலீசு எழுத்துகளைச் சொல்லித் தந்த சிவசுவாமி ஐயர் பிற்காலத்தில் திருவனந்தபுரம் சமசுதானத்தில் தக்க உத்தியோகத்தைப் பெற்று வாழ்ந்தனர்.
பாட்டியார் பாட்டனார் பிரிவு
எனக்கு ஆறாம் பிராயம் நடந்தபோது என் பாட்டியார் மிக்க அசௌக்கியத்தை அடைந்தார். ரௌத்திரி வருடம் வைகாசி மாதம் (1860) அவர் தேக வியோகமானார். அதற்குச் சரியாக ஒரு வருடத்திற்குப்பின், அதாவது துன்மதி வருடம் வைகாசியில் (1861) என் பாட்டனார் உலக வாழ்வை நீத்தார். பாட்டனார் பாட்டியார் இருவரும் முதுமையும் தளர்ச்சியும் உடையவர்களாகவே இருந்தனர். பெரும்பாலும் பாட்டனாரே முந்தி இறந்துவிடுவார் என்று எண்ணினோம். நல்ல வேளையாகப் பாட்டியார் முந்திக்கொண்டார். சுமங்கலியாக இறந்து போவதைப் பெரும்பேறாகக் கருதுவது நம் நாட்டு வழக்கம் அல்லவா? என் பாட்டியாரது மரணம் அவருக்கு ஒரு புகழை உண்டாக்கியது; “கொடுத்து வைத்த மகராசி; தாலியோடும் மஞ்சள் குங்குமத்தோடும் போனாள்” என்று ஊரினர் சொல்லிக் கொண்டனர்.
பாட்டனார் இறந்தபோது அபரக் கிரியைகளெல்லாம் முறையாக என் தந்தையார் செய்தார். தாய் தந்தை இருவருடைய மரணத்தாலும் அவருக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. “அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தாற், சொன்ன விசாரந் தொலையா விசாரம்” என்று பட்டினத்தார் கூறியிருக்கிறார். என் தந்தையார் நிலை அப்படித்தான் இருந்தது. குடும்ப சம்ரட்சணைக்கு வேண்டிய பொருளைத் தேடும் முயற்சிக்கு இடையிடையே விசேசஷச் செலவுகள் வந்துவிடுவதனால் கவலைக்கு உள்ளானார். தம் பெற்றோர்கள் ஊரில் இருக்கவேண்டுமென்று விரும்பியது காரணமாகவே உத்தமதானபுரம் வந்தவராதலின், அவ்விருவருடைய காலமும் ஆனபிறகு, “இனி நாம் பழையபடியே அரியிலூருக்குப் போய்க் காலட்சேபம் செய்தால் தான் ஒருவாறு இன்னல் நீங்கும்” என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.
அரியிலூர்ப் பிரயாணம்
உறவினர்களெல்லாம் அவரிடம் பற்றுடையவர்கள். ஊரைவிட்டு அவர் செல்லுவதில் அவர்களுக்கு மனமில்லை. “மாதம் மாதம் செய்ய வேண்டிய கிரியைகளை இங்கே இருந்து நடத்தி ஆப்திக சிராத்தத்தையும் செய்துவிட்டுப் பிறகு போகலாமே” என்று சிலர் சொன்னார்கள்.
“அவை கிரமமாக நிறைவேற வேண்டுமானால் பணம் வேண்டாமா? அங்கே போனால் பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறி எந்தையார் தம் தம்பியாரை மட்டும் உத்தமதானபுரத்தில் வைத்து விட்டு என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அரியிலூரை நோக்கிப் புறப்பட்டனர்.
குடமுருட்டி நதியைக் கடந்து வடக்கே செல்லுகையில் எதிரே எங்கள் பந்துவாகிய முதியவர் ஒருவர் வந்தார். என் தந்தையார் ஊரைவிட்டுச் செல்வதைக் காண அவர் மனம் சகிக்கவில்லை. “நீ உங்கள் வீட்டைத் தம்பி கையில் ஒப்பித்துவிட்டுப் போவது சிரீ இராமன் இராச்சியத்தைவிட்டு அயோத்தியிலிருந்து சீதையோடும் இலட்சுமணனோடும் போனதைப் போல இருக்கிறது” என்று அவர் சொல்லி வருத்தமடைந்தார். என் தந்தையாருடைய இராமாயணப் பிரசங்கத்தில் அவர் ஈடுபட்டவர். அவருக்கு இராமாயணச் செய்தியே உபமானமாகத் தோன்றியது.
பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை இருந்தமையால் அங்கே நாங்கள் சில நாட்கள் தங்கினோம். அப்பால் துன்மதி வருடம் ஐப்பசி மாதம் (1861) அரியிலூர் போய்ச் சேர்ந்தோம்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply