(உ.வே.சா.வின் என் சரித்திரம் 24 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 15


குன்னம் சிதம்பரம் பிள்ளை

அரியிலூரில் இருக்கையில் எனக்குக் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட்டதோடு விளையாட்டிலும் ஊக்கம் அதிகரித்தது. பிராயத்திற்கு ஏற்றபடி விளையாட்டிலும் மாறுதல் உண்டாயிற்று. அரியிலூரிலுள்ள பெருமாள் கோயில் வாசலிலும் உள்ளிடங்களிலும் நண்பர்களோடு விளையாடுவேன். படத்தை (காற்றாடியை)ப் பறக்கவிட்டு அதன் கயிற்றை ஆலயத்திற்கு வெளியேயுள்ள கருடதம்பத்திலே கட்டி அது வான வெளியில் பறப்பதைக் கண்டு குதித்து மகிழ்வேன். கோபுரத்தின் மேல் ஏறி அங்கும் படத்தின் கயிற்றைக் கட்டுவேன். தோழர்களும் நானும் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுவோம். கோயிலிலுள்ள மூலைமுடுக்குகளி லெல்லாம் போய் நான் பதுங்குவேன்.

தசாவதார மண்டபத்தில் வாமன மூர்த்திக்கு மேல் புறத்தில் ஓர் இடுக்கு உண்டு. அதில் நான் ஒரு முறை ஒளிந்துகொண்டேன். அந்த இடம் மிகவும் குறுகலானது. என் நண்பர்கள் நெடுநேரம் என்னைத் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. பிறகு வேறிடத்தில் தேடப் போனார்கள். அப்போது நான் வெளியில் வந்து நின்று அவர்களை அழைத்தேன். என்னை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை யென்பதில் எனக்கு ஒரு சிறிது பெருமை உண்டாயிற்று. “எங்கே ஒளிந்திருந்தாய்?” என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் இடத்தைக் கூறவில்லை. அந்த இம் நான் ஒளிந்து கொள்வதற்காக அமைந்ததென்று தோற்றியது.

சில வருடங்களுக்கு முன் நான் அரியிலூருக்கு ஒரு முறை போயிருந்தேன். அப்போது நான் இளமையிற் பழகிய  இடங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். என்னுடன் சில கனவான்கள் வந்திருந்தார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு தசாவதார மண்டபத்திற்குப் போனேன். அங்கே வாமன மூர்த்திக்கு அருகில் நான் இளமையில் ஒளிந்திருக்கும் இடத்தை உற்றுக் கவனித்தேன். அப்போது, “இந்தக் குறுகிய இடத்தில் நாம் எப்படி இருந்தோமோ?” என்று எனக்கு வியப்பும் அச்சமும் உண்டாயின.

உடன் வந்த அன்பர்களில் ஒருவர், “அங்கே என்ன விசேடம்? அவ்வளவு கவனமாகப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

பார்த்த இடத்தில் சிற்பம் ஒன்றும் இல்லை; கட்டிட விசேடமும் இல்லை. அங்கே அவர்கள் கண்ணுக்கு ஒரு புதுமையும் தோன்றவில்லை. எனக்கோ அப்படி அன்று. நான் அங்கே என்னையே கண்டேன்; என் இளமைப் பருவத்தின் விளையாட்டைக் கண்டேன். அவர்களுக்கு விசயத்தை எடுத்துக் கூறிய பிறகு அவர்களும் அந்த இடத்தைப் பார்த்தார்கள்.


தந்தையார் கவலை

 
எனக்கு ஏழாம் பிராயம் நடந்தது. என் தந்தையார் மாதந்தோறும் என் பாட்டனாருக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்தார். வருட் முடிவில் செய்யவேண்டிய ஆப்திக சிராத்தம் நெருங்கியது. அதற்கு வேண்டிய பொருளைச் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்டம் உண்டாயிற்று. அந்தக் கவலையோடு மற்றொரு செலவைப் பற்றிய கவலையும் சேர்ந்தது.

எனக்கு உபநயனம் செய்யவேண்டிய பிராயம் வந்துவிட்டமையால் அதற்குரிய முயற்சிகளும் செய்யவேண்டியிருந்தன. எல்லாம் பணத்தினால் நடைபெற வேண்டியவை. “எப்படியாவது ஆப்திக சிராத்தத்தை நடத்திவிடலாம்” என்ற தைரியம் என் தந்தையாருக்கு இருந்தது. “உபநயனம் செய்யவேண்டும்; அதற்கு என்ன செய்வது?” என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்தார். சாணேற முழம் சறுக்கும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் மனம் தத்தளித்து நின்றது.

குமரபிள்ளை

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவராகிய கொத்தவாசற் குமரபிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்; அப்போது என் தந்தையாருடைய சேமலாபங்களை விசாரித்தார். பேசிவருகையில் என் உபநயனத்தைப்பற்றி அவர் கவலை யடைந்திருப்பதை யறிந்து, “அது விசயமான கவலை தங்களுக்கு வேண்டாம். உபநயனத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் தங்களுக்குப் பணம் கிடைக்கும்” என்று வாக்களித்தார். துந்துபி வருடம் வைகாசி மாதம் (1862, சூன்) என் பாட்டனாருக்கு ஆப்திக சிராத்தம் வந்தது. அதன் பொருட்டு உத்தமதானபுரம் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. குமரபிள்ளை பொருளுதவி செய்வதாகச் சொல்லியிருப்பதை நம்பி ஆப்திகம் ஆன பிறகு ஆனி மாதமே என் உபநயனத்தை உத்தமதானபுரத்தில் நடத்தி விட எந்தையார் நிச்சயித்தார்.

உபநயனம்


நாங்கள் உத்தமாதானபுரத்திற்குச் சென்றோம். என் பாட்டனாரது சிராத்தம் நடைபெற்றது. அப்பால் எனக்கு உபநயனம் செய்வதற்குரிய முயற்சிகள் ஆரம்பமாயின. என் பிதா இன்ன தினத்தில் முகூர்த்தம் வைத்திருக்கிறதென்று குறிப்பிட்டுக் கொத்தவாசற் குமர பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். முகூர்த்தத்திற்கு நான்கு தினங்கள் முன்னதாக அந்த உபகாரி இரண்டு வேளாளப் பிள்ளைகளை வேண்டிய தொகையுடன் அனுப்பினார். அவர்கள் வந்து பணத்தை என் தந்தையார் கையிலே கொடுத்தார்கள். அதை வாங்கும்போது என் தந்தையாரும் அருகிலிருந்த சிறிய தந்தையாரும் கண்ணீர் விட்டு உருகினார்கள்.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் எனக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு அரியிலூர், மாயூரம், கும்பகோணம், தியாக சமுத்திரம், சுவாமிமலை, கோட்டூர், சூரியமூலை, திருக்குன்றம், கணபதி அக்கிரகாரம். திருவையாற்றுக்குடி, திருவையாறு திருப்பழனம், பாபநாசம், சுரைக்காவூர், பொன்வேய்ந்தநல்லூர், தேவராயன் பேட்டை, அச்சுதேசுவரபுரம், உள்ளிக்கடை, ஊற்றுக்காடு, உடையாளூர், நல்லூர் என்னும் இடங்களிலிருந்து பந்துக்களும் அன்பர்களும் வந்திருந்தார்கள்.

உபநயன காலங்களில் நடைபெறும் ஊர்வலம் விநோதமானது. பெரும்பாலும் வாகனங்களில் அது நடைபெறாது. உபநயனப் பையன் தன் அம்மான் தோளில் ஏறிக்கொள்வான் பெண்களும் ஆண்களும் புடைசூழ வாத்திய கோசத்துடன் ஊர்வலம் செல்லும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அம்மான் நிற்பார். வீட்டிலுள்ள பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த தாம்பாளத்தில், ஊர்வலத்துடன் செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டுசெல்லும் பட்சியங்களையும் தாம்பூலத்தையும் வைத்துப் போவார்கள் இப்படி ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும். இவ்வூர்வலம் என் உபநயனத்திலும் நடந்தது.


எங்கள் குடும்ப வழக்கப்படி உபநயன காலத்தில் எனக்கு ‘வேங்கடராம சர்மன்’ என்று நாமகரணம் செய்யப்பட்டது. அந்தப் பெயரே நன்றாக உள்ளதென்று என் தகப்பனாரும் பிறரும் எண்ணினர். அது முதல் எனக்கு வேங்கடராமனென்ற பெயரே பலரால் வழங்கப்பட்டு வந்தது.

உபநயன காலத்தில் நான் யசூர் வேதத்தை அத்தியயனம் செய்வதற்கு உரியவ னென்றும், வாதூல கோத்திரத்தின னென்றும், ஆபத்தம்ப சூத்திரத்தைக் கடைப்பிடிப்பவ னென்றும் உணர்ந்தேன்.

பூணூல் அணிந்து துவிசனாகிய புதிதில் எனக்கு என் அம்மான் சிவராமையர் மந்திரங்களை யெல்லாம் கற்பித்தனர். சந்தியா வந்தனங்களைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துவந்தேன். மந்திரசபம் செய்வதில் எனக்கு இயல்பாகவே விருப்பம் உண்டு.


கௌரீ மந்திரம்

உபநயனம் ஆனபிறகு மீண்டும் நாங்கள் அரியிலூர் வந்து சேர்ந்தோம். நான் தமிழ்க் கல்வியிற் சுவை கண்டேனாதலால் சடகோபையங்காரை விடாமற் பற்றிக்கொண்டேன்.

ஒரு சமயம் என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எங்களைப் பார்ப்பதற்காக அரியிலூருக்கு வந்தார். சிலர் கேட்டுக்கொண்டபடி சில தினங்கள் நாங்கள் இருந்த வீட்டில் ஆலாசிய மாகாத்துமியம் வாசித்துப் பொருள் சொல்லி வந்தார். நான் தினந்தோறும் அதைக் கேட்டு வந்தேன். சிரீ சோமசுந்தரகக் கடவுள் கௌரி என்னும் பெண்ணுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் ஒன்று அந்த மாகாத்மியத்தில் இருக்கிறது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.