(உ.வே.சா.வின் என் சரித்திரம் 27 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 16 தொடர்ச்சி

தானிய வருவாய்

நாங்கள் குன்னத்திற்குச் சென்ற காலம் அறுவடை நாள். அவ்வூரிலுள்ளவர்கள் நவதானியங்களுள் கம்பு, சோளம், சாமை, கேழ்வரகு, தினை முதலியவற்றைத் தங்கள் தங்களால் இயன்றவளவு கொணர்ந்து எங்களுக்கு அளித்தார்கள். அவற்றில் உபயோகப்படுவன போக மிகுந்தவற்றை நாங்கள் விற்று நெல்லாக மாற்றி வைத்துக்கொண்டோம்.

இராமாயணப் பிரசங்கம்

குன்னத்தில் நாட்டாண்மைக்காரர்கள் நான்கு பேர் இருந்தனர். அவர்களும் சிதம்பரம் பிள்ளையும் சேர்ந்து யோசித்து என் தந்தையாரைக் கொண்டு அருணாசலகவி இராமாயணத்தை இரவிற் பிரசங்கம் செய்வித்து செய்வித்துக் கேட்க விரும்பினார்கள் அவ்வாறே பிரசங்கம் தொடங்கப் பெற்றது தினந்தோறும் இரவில் சிதம்பரம் பிள்ளையின் வீட்டுத் திண்ணையில் அது நடைபெற்றது. அக்காலத்தில் என் சிறிய தகப்பனாரும் உத்தமதானபுரத்திலிருந்து வந்திருந்தார்.

இராமாயணப் பிரசங்கம் நன்றாக நடந்தது. ஊராருடைய ஆதரவு அதிகமாக இருந்தமையால் என் தந்தையாருக்கு மிக்க ஊக்கம் உண்டாயிற்று. அவரோடு சிறிய தந்தையாரும் சேர்ந்து கொண்டார். நானும் இடையிடையே பாடி வந்தேன். என் சாரீரம் பழக்கத்தால் வன்மை பெற்று வந்தது. அதனால் வரவர இராமாயணப் பிரசங்கத்தில் அதிகமாகப் பாடிவந்தேன். என் பாட்டைக் கேட்டவர்கள், “சிறு பையன் இப்படிப் பாடுகிறானே” என்று ஆச்சரியமடைந்தார்கள். அதனால் எனக்கும் ஊக்கம் உண்டாயிற்று. பிரசங்கத்திடையே என் தந்தையார் கம்பராமாயணத்திலிருந்து உசிதமான செய்யுட்களை இசையோடு சொல்லுவார். அக்காலத்தே சாதாரண சனங்களுக்கும் கம்பராமாயணத்திலே சுவை இருந்தமையால் அவருடைய பிரசங்கம் சபையோருடைய மனத்தை மிகவும் கவர்ந்தது. குன்னத்திலுள்ளோரும் அயலூரினரும் கூட்டமாக வந்து கூடினர். தந்தையார் சந்தோசத்தின் உச்சியிலிருந்து கதையை நடத்தி வந்தார். ஒவ்வொரு நாளும் சனங்களுக்கு உண்டான திருப்தி அதிகமாயிற்று.

இரண்டு மாத காலமாக இராமயணப் பிரசங்கம் நிகழ்ந்து வந்தது. யுத்த காண்டம் நடைபெறுகையில் ஒரு நாள். அனுமார் சஞ்சீவி மலையைக் கொணர்ந்து, பிரம்மாசுத்திரத்தால் கட்டுண்டு கிடந்த இலட்சுமணர் முதலியோரை எழுப்பின கட்டம் வந்தது. இலட்சுமணர் பிரம்மாசுத்திரத்தாற் கட்டுண்டு வீழ்ந்தது கண்டு இராமர் அடைந்த சோகத்தையும், அவர் சோகத்தால் மூர்ச்சையுற்றுக் கிடந்ததையும் கேட்டவர்கள் உருகினார்கள். தம்முடைய அநுபவத்தில் எவ்வளவோ துன்பங்களை உணர்ந்து புண்பட்டவராகிய என் தந்தையார் அந்தச் சோக இரசத்தைத் தாமும் அநுபவித்துப் பிறரும் அநுபவிக்கச் செய்தார். சோகம் நிரம்பிய அச்சமயத்தில் ‘அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தார்; அதன் காற்றுப் பட்ட மாத்திரத்திலே இலட்சுமணர் முதலியோர் உயிர்த்து எழுந்தனர்’ என்ற விசயம் வரும்போது சோகக் கடலில் ஆழ்ந்திருந்த சனங்கள் அனைவரும் சந்தோச ஆரவாரம் செய்தனர். அவர்கள் இராமாயணக் கதையைக் கேட்பவர்களாகத் தோற்றவில்லை. போர்க்களத்தில் இருந்து இராம இலட்சுமணர் சோகத்தைக் கண்டு துயருற்றும் அனுமாரது வீரத்தைக் கண்டு சந்தோ சமடைந்தும் நிற்பவர்களைப்போல இருந்தனர். என் தந்தையாருக்கோ அரியிலூரைவிட்டுப் பிரிந்ததனால் உண்டான துயரம் பிரம்மாசுத்திரம் போல இருந்தது; குன்னத்திற் பெற்ற ஆதரவு சஞ்சீவி மலையைப் போலாயிற்று. இவ்வாறு துன்பமும் அதனைப் போக்கி நிற்கும் இன்பமும் அநுபவத்திலே ஒரு யுத்தக்காண்டத்தை உண்டாக்கினமையால் என் தந்தையார் அந்த அநுபவத்தைக் கொண்டு மிகவும் இரசமாகப் பிரசங்கம் செய்தார். சோகரசம் உள்ள இடங்களில் தாமே சோகமுற்றும் சந்தோசச் செய்தி வருமிடங்களில் தாமே மகிழ்ச்சியுற்றும் அவர் செய்த கதாப்பிரசங்கம் கேட்டவர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

அன்று கதை முடிந்தவுடன் எல்லாரும் என் தந்தையாரைப் பற்றிப் பாராட்டிப் பேசியதற்கு அளவில்லை. சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள், “இந்த இராமாயணம் இன்னும் சில நாட்களிற் பூர்த்தியாகிவிடும். இதை ஒரு தடவை கேட்ட மாத்திரத்தில் நமக்குத் திருப்தி யுண்டாகாது; பலமுறை கேட்க வேண்டும்” என்று ஆலோசித்தார்கள். ‘இவர்களை இந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்கும்படி செய்ய வேண்டும்’ என்று எண்ணி அதற்குரிய ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார்கள். பிறகு சிதம்பரம் பிள்ளை முதலிய பன்னிரண்டு பேர்கள் மாதத்திற்கு ஒருவராக ஐந்தைந்து ரூபாய் கொடுப்பதென்று தீர்மானித்து அந்த விசயத்தை ஒரு பனை ஓலையில் எழுதி அப்பன்னிருவரும் கையெழுத்திட்டார்கள். அதை என் தந்தையாரிடம் கொடுத்து, “நாங்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டை அங்கீகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்கள். தந்தையார் ஏற்றுக்கொண்டு நன்றியறிவு புலப்படும் வார்த்தைகளைக் கூறிப் பாராட்டினார்.


அது முதல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவர்கள் உதவி கிடைத்து வந்தது. வேறு வகையில் கிடைத்த வரும்படிகளும் சேர்ந்தமையின் எங்கள் வாழ்க்கை சுகமாக நடைபெறலாயிற்று.

இராமாயண பட்டாபிசேகம் நடந்தபோது அவ்வூரினரும் பிறரும் பொதுவில் இருபது வராகன் (70 உரூபாய்) சேர்த்துக் கொடுத்தார்கள். குன்னத்திலேயே சுப்பராய படையாட்சி என்ற செல்வர் ஒருவர் இருந்தார். சிலருடைய முயற்சியால் அவர் வீட்டிலும் இராமாயணப் பிரசங்கம் நடைபெற்றது. பட்டாபிசேகக் காலத்தில் அவரிடமிருந்து என் தகப்பனாருக்கு இருபது வராகன் சம்மானம் கிடைத்தது. அவற்றைக் கொண்டு குடும்பக் கடனில் ஒரு பகுதியைத் தீர்த்துக் கொள்ளலாமென்று எந்தையார் எண்ணினார்.

ஆபரணம் பெற்ற அன்னையார்

என் பாட்டனாரது சிராத்தம் நடத்த எங்களை அழைத்துக்கொண்டு என் பிதா உத்தமதானபுரம் சென்றனர். தாம் கொணர்ந்திருந்த தொகையைக்கொண்டு தாம் நினைத்தவாறே குடும்பக் கடனில் ஒரு பகுதியை அடைக்க முயலும்போது பந்துக்களில் முதியவர்களாகிய சிலர் அவ்வாறு செய்வதைத் தடுத்தார்கள்; “இப்போதுதான் நீ ஏதோ சம்பாதித்துக்கொண்டு வந்திருக்கிறாய். உன் மனைவிக்கு ஒரு நகை கூட இதுவரையிற் பண்ணிப் போடவில்லை. முதலில் அவளுக்கு ஏதாவது தங்கத்தில் பண்ணிப் போடு. இவ்வளவு நாள் இருந்த கடனுக்கு இப்போது என்ன அவசரம்? இனிமேல் நீ சம்பாதிக்கப் போவதில்லையா? கடன் அடைபடாமலே நின்றுவிடப் போகிறதா? சரியான காலத்தில் திரீகளுக்கு நகை பண்ணிப் போட்டால்தானே அழகு? பிராயம் ஆன பிறகு போட்டு என்ன பயன்? நகை பண்ணிப் போட்ட பிறகு மிகுந்ததைக் கடனுக்குக் கொடு” என்று சொன்னார்கள்.

என் தாயாருக்கு அக்காலத்தில் திருமங்கலியம் ஒன்றுதான் தங்கத்தில் இருந்தது. மற்றவை எல்லாம் பித்தளையே. என் தந்தையார் உறவினர் கூறியதைக் கேட்டு அவ்வாறே அத்தொகையைக் கொண்டு காது ஓலை, குடைக் கடுக்கன், பஞ்ச கலசவாளி ஆகியவற்றைத் தங்கத்தாற் செய்வித்து என் தாயாருக்கு அணிவித்தார். என் தாயார் அவற்றை அணிந்துகொண்ட போது அடைந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்ல முடியுமா? அரியிலூர்ப் பெருமாள் கோவில் வாசலில் நடந்த தீபாராதனையை அவரும் மறக்கவில்லை. அவர் காதிற் பொன்னகையும் முகத்திற் புன்னகையும் விளங்க நின்ற கோலம் என் கண்முன் நிற்கிறது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.