(உ.வே.சா.வின் என் சரித்திரம் 28 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 17
தருமம் வளர்த்த குன்னம்

உத்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என் தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள் கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 உரூபாய் (20 வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு பழக்கமாகி விட்டது பாபநாசத்திற் பெற்ற தொகையைக்கொண்டு அவர் இடையிடையே தாம் வாங்கிய கடன்களைத் தீர்த்து வந்தார்.

குன்னம் சென்றது

மறுபடியும் நாங்கள் குன்னம் சென்று இராமையங்கார் வீட்டில் இருந்து வரலானோம். சிதம்பரம் பிள்ளை முதலிய செல்வர் பன்னிருவரும் தாங்கள் எழுதிக் கொடுத்தபடி மாதந்தோறும் பத்து உரூபாய் வீதம்* அளித்து வந்தனர். என் தந்தையாருக்கு வரவர என் விசயத்திற் கவனம் அதிகமாயிற்று. குடும்பப் பாதுகாப்பைப் பற்றிய கவலை குன்னத்தில் அவருக்குப் பெரும்பாலும் இல்லை. அவருடைய கதாப்பிரசங்கத்திற்கு மதிப்பு உயரஉயர அன்பர்களது ஆதரவு விரிவு பெற்றது. நான் சுறுசுறுப்புள்ளவனாகவும் கல்வியில்  விருப்ப முள்ளவனாகவும் இருப்பதை உணர்ந்த அவருக்கு என் கல்வி யபிவிருத்தியில் ஊக்கமும் கவலையும் இருந்தன. சங்கீதத் துறையில் எனக்குப் பழக்கம் மிகுதியாகி வந்தாலும் தமிழில் தனி விருப்பம் இருப்பதை அவர் அறிந்து கொண்டாரென்றே தோற்றியது அதனால் தம்முடைய கதாப்பிரசங்கங்களுக்கு என்னை உதவியாக வைத்துக்கொண்டதோடு தமிழ் நூல்களை நான் கற்றுவருவதற்குரிய ஏற்பாடும் செய்யத் தொடங்கினார்.

சிதம்பரம் பிள்ளையிடம் பாடம் கேட்டது

சிதம்பரம் பிள்ளையின் நட்பு எங்களுக்கு உண்டானதில் பல இலாபங்கள் கிடைத்தன. அவர் தமிழிற் பயிற்சியுடையவர்; சில பிரபந்தங்களிலும் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களிலும் சிறந்த பழக்கத்தைப் பெற்றிருந்தார். அவரிடம் நான் பாடம் கேட்கத் தொடங்கினேன். முதலிற் சில சிறு நூல்களைக் கேட்டுவிட்டுப் பிறகு திருவிளையாடற் புராணத்தை முறையாகக் கேட்டு வரலானேன். அவ்வூரிலிருந்த முத்தப் பிள்ளை என்ற அன்பர் நான் கேட்டுக்கொண்டபடி திருவிளையாடற் புராணப் புத்தகம் ஒன்றும் குறள் மூலமும் எனக்கு அளித்தார்; குறள் தெளிபொருள் விளக்கவுரைப் புத்தகம் ஒன்றையும் சில காலம் படித்துவிட்டுத் தரும்படி கொடுத்தார். அதை வைத்துக் குறளைப் படித்து வந்தேன்.

உதவிக் கணக்கு

என் வாழ்க்கையில் எனக்கு சீவனத்திற்கு ஏற்ற வழிகள் சில தெரிந்திருக்க வேண்டுமென்பது என் தகப்பனார் விருப்பம். “நாலு வித்தை தெரிந்திருந்தால் சமயம்போல் ஏதாவது ஒன்றைக்கொண்டு பிழைக்காலம்” என்பது அவர் எண்ணம். சங்கீதமும் தமிழும் ஒருகால் என் சீவனத்துக்கு உபயோகப் படாவிட்டால் வேறொரு தொழில் இருந்தால் நல்லதென்று அவர் நினைத்தார் போலும்! அக்காலத்தில் கிராமக் கணக்குப் பிள்ளைக்கு இருந்த கௌரவமும் செல்வாக்கும் மிக அதிகம். கணக்குப் பிள்ளையே ஒரு கிராமத்தில் பிரதான புருசர். அவர் வைத்தது சட்டம். அவருக்கு அபசாரம் பண்ணினவன் தப்ப முடியாது. ஆதலால் இங்கிலீசு படிக்காத எனக்கு ஒரு கணக்குப்பிள்ளை வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என் தந்தையார் மனோபாவம் அப்படியெல்லாம் விரிந்து சென்றது.

அரியிலூரிலேயே நான் ஒருவரிடம் கணக்குப் பழக்கம் செய்து வந்தேனல்லவா? அப்பழக்கத்தை விட்டுவிடாமல் குன்னத்திலும் சிதம்பரம் பிள்ளையிடம் இருந்து கணக்கு வேலை பழகி வந்தேன். என் தகப்பனார் எனக்குக் கணக்கு வேலை பழக்கி வைக்க வேண்டுமென்று மிக்க ஆவலாக அவரிடம் கேட்டுக் கொண்டார்.

நான் சிதம்பரம்பிள்ளையிடம் உதவிக் கணக்கு உத்தியோகத்தை வகிக்கலானேன். கிராமக் கணக்கு வகைகளைப் பதிவதற்குத் தனித் தனியே அச்சிட்ட ‘நமூனா’க்கள் வரும். அவற்றில் ஒழுங்காக ‘ரூல்’ போடுவது முதல் கணக்குகளைப் பதிவு செய்வது வரையில் எல்லா வேலைகளையும் நான் செய்து வந்தேன்.

இயற்கை தந்த இன்பம்

சிதம்பரம் பிள்ளை தினந்தோறும் கிராமத்திலுள்ள புன்செய்க் காடுகளுக்குச் சென்று வருவார்; கணக்குப் பிள்ளை உத்தியோக முறையில் நிலங்களிற் செய்யப்படும் சாகுபடி முதலியவற்றைக் கவனிப்பதற்குச் செல்வார். அச்சமயங்களில் நானும் அவருடன் செல்வேன். அவர் வழக்கப்படி காரியங்களைக் கவனிப்பார். அக்காடுகளின் தோற்றம் எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பயிர்கள் வகை வகையாகக் கொல்லைகளில் விளைந்து கதிர்விட்டிருப்பதும், அங்கங்கே புன்செய் நிலங்களில் இடையிடையே மொச்சை, துவரை முதலியவை வளர்ந்திருப்பதும் என் கண்களைக் கவரும். எவருடைய பாதுகாப்பையும் வேண்டாமல் இயற்கையாகப் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிகளும் துளசியும், நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் வில்வம், வன்னி முதலிய மரங்களும், மலர்ந்திருக்கும் அலரியும் பிறவும் இயற்கைத் தேவியின் எழிலைப் புலப்படுத்திக்கொண்டு விளங்கும். கம்பு விளையும் நிலத்தருகே கரைகளில் துளசி படர்ந்திருக்கும். கணக்குப்பிள்ளை கம்புப் பயிரை மாத்திரம் கண்டு மகிழ்வார்; அதனால் உண்டாகும் வருவாய்க் கணக்கில் அவர் கருத்துச் செல்லும். நான் அவரோடு பழகியும் அத்தகைய கணக்கிலே என் மனம் செல்வதில்லை. கம்பங் கதிர் தலை வளைந்து நிற்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன்; துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் கதிர்விட்டிருக்கும் கோலத்திலும் அழகைக் கண்டேன். “கம்பிலே தான் காசு வரும்; துளசியிலே என்னவரும்?” என்ற வியவகார புத்தி எனக்கு இல்லை. இரண்டும் என் கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியை அளித்தன. வில்வமரமும் வன்னிமரமும் எனக்கு இயற்கைத் தாயின் எழில் வடிவத்தின் ஒரு பகுதியாகவே தோற்றின. மனிதன் வேண்டுமென்று வளர்க்காமல் தாமே எழுந்த அவற்றில் இயற்கையின் அழகு அதிகமாகவே விளங்கியது. அங்கங்கே நீரோடைகள் உண்டு. அவற்றின் கரையிலே படர்ந்திருக்கும் பசுஞ்செடிகளின் காட்சியில் நான் ஊன்றி நிற்பேன். தினந்தோறும் காலையில் எழுந்து அவ்விடங்களுக்குச் சென்று பத்திர புட்பங்களை எடுத்து வந்து என் தந்தையார் பூசைக்குச் சேர்ப்பிப்பேன்!

குன்னத்தில் என் மனத்திற்கு உத்சாகம் உண்டாவதற்கு மேலே கூறிய நிகழ்ச்சிகள் காரணமாயின. அடிக்கடி அவ்வூருக்கு வருவோர்களுடைய பழக்கத்தாலும் எனக்கு நன்மை உண்டாயிற்று.

தருமங்கள்

திருவையாறு முதலிய இடங்களிலுள்ள வைதிக பிராமணர் சிலருக்குக் குன்னத்தில் மான்யங்கள் இருந்தன. வருசந்தோறும் அவர்கள் வந்து சில தினம் அங்கே தங்கிக் குத்தகைக்காரர்களிடமிருந்து தமக்குரிய தொகையைப் பெற்றுச் செல்வார்கள். அவர்களுக்கு ஊரினரும் பொருள் உதவி செய்வதுண்டு.

நாட்டாண்மைக்காரரிடம் ஊரின் பொதுப்பணம் இருக்கும். ஊரினர் தங்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேடங்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்களுக்குரிய பங்கை உதவுவார்கள். அத்தொகைகளெல்லாம் பொதுப்பணமாக இருக்கும். வெளியூர்களிலிருந்து வரும் வித்துவான்களையும் பெரியோர்களையும் ஆதரிப்பதற்கும், ஊரின் பொதுச் செலவுகளுக்கும் அப்பணம் உபயோகமாகும்.

கிராமத்தில் தருமம் பொதுச்சொத்தாக இருக்கும்போது அங்கே பொருளுதவி பெற வருபவர்களுக்குக் குறைவு ஏது? மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்து அழைப்பாரும் வேண்டுமோ?

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

  • முன் அத்தியாயத்தில் 5 உரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.