(உ.வே.சா.வின் என் சரித்திரம் 30 தொடர்ச்சி)

சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று உரூபாய் கொடுத்தார்.


அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர்.

“நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? இராசாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர் படபடத்துப் பேசினர்.

தைரியசாலியாகிய சிதம்பரம் பிள்ளை புன்னகை செய்துகொண்டே அவரைத் தனியே அழைத்துச் சென்றார். “இம்மாதிரி என்னை மருட்டிவிடலாமென்று எண்ண வேண்டா. உம்முடைய கல்வியின் ஆழம் இவ்வளவென்று எனக்குத் தெரிந்து விட்டது. இந்த மூன்று உரூபாயும் உம்மேல் இரக்கத்தால் கொடுப்பதேயன்றி உமது புலமைக்காக அன்று. அது வேண்டாமென்று பிடிவாதம் செய்தால் இதுவும் இல்லாமல் பட்டினியோடு வந்த வழியே போகவேண்டியதுதான். உம்முடைய ஆடம்பரத்தைக் கண்டு மயங்குவேனென்றும், வீண் வார்த்தைகளைக் கேட்டு அஞ்சுவேனென்றும் நினைக்க வேண்டா” என்று எச்சரித்தார். பாவம்! அந்தப் புலவர் அடங்கினார்; அந்த மூன்று உரூபாயை வாங்கிக்கொண்டு தம் கூட்டத்துடன் திரும்பிப் போய்விட்டார்.

———-

என் சரித்திரம்

அத்தியாயம் 18
குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி

குன்னத்திற்கு அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள். அவர்களுள் கதிர்வேற் கவிராய ரென்பவர் ஒருவர். அவர் மூலமாக நான் பல விசயங்களை அறிந்துகொண்டேன். சேலத்தைச் சார்ந்த சார்வாய் என்னும் ஊரிலே குமாரசாமிக் கவிராயர் என்ற தமிழ் வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் அரியிலூரிலும் உடையார்பாளையத்திலும் சில காலம் சமத்தான வித்துவானாக விளங்கினார். அவருடைய மாணாக்கரே கதிர்வேற் கவிராயர். குன்னத்தில் அவரை நான் பார்த்த போது அவருக்கு எழுபது பிராயம் இருக்கும். அம்முதுமையிலும் அவர் தமிழ்ச் செய்யுட்களைச் சொன்ன முறை கேட்பதற்கு இனிமையாகவே இருந்தது. கம்பராமாயணம், முதலிய இலக்கியங்களிலும் நன்னூல் முதலிய இலக்கணங்களிலும் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. நூற்றுக்கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக இருந்தன; பழைய தனிப்பாடல்கள் பலவற்றை அவர் தடையின்றிச் சொல்லி வருவார்; செய்யுள் இயற்றும் பழக்கமும் உடையவர்; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் ஏதேனும் செய்யுளைப் புதிதாக எழுதிக்கொண்டிருப்பார்.

அக்கவிராயர் ஒருமுறை குன்னத்துக்கு வந்து கணக்குப் பிள்ளை வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்தார். அவருடைய பழக்கத்தாற் பல தமிழ்நூற் பெயர்களை நான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நூலைப்பற்றியும் அவர் சொல்லும்போது எனக்குப் புதிய புதிய இன்பம் உண்டாகும். “இவ்வளவு நூல்கள் தமிழில் உள்ளனவா!” என்று ஆச்சரியமடைவேன்.


தனிப்பாடல்களை அவர் சொல்லும்போது ஒவ்வொரு பாடலையும் இயற்றிய புலவரைப் பற்றிய வரலாறு, அதைப் பாடியதற்குக் காரணம் முதலிய விசயங்களை மிகவும் சுவைபடச் சொல்லுவார். அப்போது வாயில் ஈப்புகுவதுகூடத் தெரியாமல் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அத்தனிப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கற்கண்டுக் கட்டிபோல் இருக்கும். ‘பாடம் செய்து’ என்ற முயற்சியில்லாமலே பல பாடல்கள் என் மனத்தில் தாமே பதிந்தன. அம்முதியவர் அவ்வளவு பாடல்களைச் சலிப்பின்றிச் சொல்வதைக் கேட்டு, அவ்வளவையும் மனத்திற் பதித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. கவிராயர் பின்னும் ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ தங்கியிருந்தால் நான் ஒருவாறு அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருப்பேன். அவரோ சில தினங்களே குன்னத்தில் இருந்து தம் ஊருக்குப் போய் விட்டனர்.


வித்துவானோ, கவிராயரோ, பரதேசிகளோ யார் வந்தாலும் “அவர்கள் ஏதாவது தமிழ் சம்பந்தமான செய்தியைச் சொல்ல மாட்டார்களா?” என்று ஆவலோடு எதிர்பார்ப்பது எனக்கு வழக்கமாகி விட்டது. புதிய புதிய பாடல்களையும் புதிய புதிய செய்திகளையும் கேட்கும்போது எனக்கு உண்டாகும் மன நிறைவு வேறு எதிலும் உண்டாவதில்லை.


பரதேசிகள்

விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மாடுவெட்டிமங்கலம் என்னும் ஊரில் ஒரு மடம் கட்டிக்கொண்டு சில பரதேசிகள் இருந்தனர். அவர்கள் வருடந்தோறும் திருவையாற்றில் நடைபெறும் சப்தத்தான உற்சவ தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் குன்னத்திற்கு வந்து கணக்குப் பிள்ளையின் உதவியைப் பெற்றுச் செல்வது வழக்கம். அவர்களில் ஒருவர் ஆசிரியர்; மற்றவர்கள் மாணாக்கர்கள். யாவரும் தமிழ் இலக்கியங்களிலும் அடிப்படையான இலக்கண நூல்களிலும் பயிற்சியுடையவர்கள்; தமிழிலுள்ள வேதாந்த சாத்திரங்களில் நல்ல திறமையைப் பெற்றிருந்தார்கள். ஞானவாசிட்ம், குமார தேவர் சாத்திரம், கைவல்ய நவநீதம், சசிவர்ண போதம், வைராக்கிய சதகம் முதலிய நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறுவார்கள். அந்தச் சாத்திரப் பயிற்சியை இலட்சியமாகக்கொண்டே முதலில் இலக்கிய இலக்கணங்களை அவர்கள் பயின்றார்கள்.

அவர்களுடைய வேதாந்த சாத்திர ஞானமும் அடக்கமும் சாத்துவிக இயல்பும் சீலமும் தெய்வ பக்தியும் அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு அலங்காரமாக விளங்கின. அவர்களாலே நான் சில விசயங்களைத் தெரிந்துகொண்டேன்.

குன்னத்தில் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்த ஒருவர் முன்னே குறிப்பிட்ட சார்வாய்க் குமாரசாமிக் கவிராயருடைய மாணாக்கர்; தமிழ்நூற் பயிற்சியும் கவித்துவ சக்தியும் உள்ளவர்; மிக்க தைரியசாலி. அவர் எங்கள் வீட்டிற்கு வேண்டிய நெய்யை மாதந்தோறும் தம் செலவில் வாங்கிக் கொடுத்து உதவி வந்தார். அவரிடமும் சில தமிழ்ச் செய்யுட்களை நான் பாடங் கேட்டேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.