(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி)

என் சரித்திரம்


37. எனக்குக் கிடைத்த பரிசு

பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை.

இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது மடத்திலிருந்து ஒருவர் வந்து என்னை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒடுக்கத்தின் மேல் மெத்தையில் ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார். அவர் அருகே பிள்ளையவர்களும் சில தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். நான் அங்கே சென்றவுடன் சுப்பிரமணிய தேசிகர், “போசனம் செய்தீரா?” என்று அன்புடன் வினவி உட்காரச் சொன்னார். நான் பிள்ளையவர்களுக்குப் பின்னே உட்கார்ந்தேன். அப்போது அங்கிருந்த தம்பிரான்கள் தங்கள் கைகளில் புத்தகங்களை வைத்திருந்தனர். அதைக் கவனித்த நான், “பிள்ளையவர்கள் பாடஞ் சொல்ல ஆரம்பித்து விட்டார்களோ?” என்று எண்ணி, “நாம் முன்பே வந்து கவனிக்கவில்லையே” என்று வருந்தினேன்.

சந்தேகம் தெளிதல்

அங்கிருந்த தம்பிரான்கள் எழுத்திலக்கணம் முதலியவற்றைச் சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் பாடங் கேட்டு முடித்தவர்கள். அந்நூல்களில் இடையிடையேயுள்ள உதாரணச் செய்யுட்களுள் சிலவற்றின் பொருள் தம்பிரான்களுக்கு விளங்கவில்லை. தேசிகர் பாடஞ் சொல்லும்பொழுது அத்தகைய இடங்கள் வந்தால், “பிள்ளையவர்கள் வரும்பொழுது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்; ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுவது வழக்கமாம். அச்சமயத்தில் தேசிகருடைய கட்டளையின்படியே தம்பிரான்கள், பிள்ளையவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு வந்தனர். பிள்ளையவர்கள் தட்டின்றி ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாக விடையளித்தனர். தம்பிரான்கள் மிகவும் ஆவலாகச் சந்தேகங்களைக் கேட்டனர். பிள்ளையவர்கள் பொருள்களை விளக்கும்பொழுது தம்பிரான்களைக் காட்டிலும் அதிக ஆவலாகச் சுப்பிரமணிய தேசிகர் கவனித்து வந்தார். சில சமயங்களில் தேசிகரே சந்தேகங்களுள்ள இடங்களைத் தம்பிரான்களுக்கு ஞாபக மூட்டினர்.

அந்த நிகழ்ச்சியை நான் கவனித்தபொழுது எனக்குப் பல புதிய செய்திகள் தெரிய வந்தன. பிள்ளையவர்கள் விளக்கிக் கூறும் செய்திகள் மட்டுமல்ல; ஆதீனத்துச் சம்பிரதாயங்களையும் அறிந்துகொண்டேன். தம்பிரான்கள் கேட்ட சந்தேகங்கள் சுப்பிரமணிய தேசிகருக்கும் விளங்காதனவே. ஆயினும் ஞானாசிரியராகிய அவர் நேரே பிள்ளையவர்களிடம் ஒரு மாணாக்கரைப் போலச் சந்தேகம் கேட்கவில்லை. தம்பிரான்களைக் கேட்கச் சொல்லித் தாம் அறிந்துகொண்டார்; அவர்களையும் அறிந்துகொள்ளச் செய்தார். அச்சந்தேகங்களைத் தெளிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் தேசிகருக்குத் தீவிரமாக இருந்ததையும் நான் அறிந்தேன். இல்லையென்றால் பிள்ளையவர்களிடம் தம்பிரான்களை அனுப்பிச் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாமல்லவா? பிள்ளையவர்கள் அவற்றை விளக்கும்போது தாமே நேரிலிருந்து கேட்க வேண்டுமென்பது அவரது ஆசை. அவர் ஞானாசிரியராகவும் பிள்ளையவர்கள் அவருடைய சீடராகவும் இருந்தனரென்பதில் ஐயமில்லை. ஆயினும் அச்சமயத்தில் தம் ஞானாசிரிய நிலையையும் ஆதீனத் தலைமையையும் பிற சிறப்புகளையும் மறந்து தேசிகர் என் ஆசிரியர் கூறியவற்றைக் கவனித்து வந்தார். அன்று காலையில் என் ஆசிரியர் தேசிகரைப் பணிந்த காட்சி தவத்தின் தலைமையை நினைவுறுத்தியது; பிற்பகலில் அப்புலவர் கோமான் தேசிகருக்கு முன் சந்தேகங்களை விளக்கிய காட்சி புலமையின் தலைமையைப் புலப்படுத்தியது.

தம்பிரான்கள் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்டு வந்தார்கள். சில சந்தேகங்கள் மிகவும் கடினமானவை. அப்பகுதிகளைப் பிள்ளையவர்கள் தெளிவிக்கும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கூர்ந்து கவனிப்பார். அவருக்கு விடயம் விளங்கினவுடன், “நன்றாயிருக்கிறது; மிகவும் பொருத்தமாயிருக்கிறது” என்று பாராட்டுவார். அவருடைய சந்தோசம் உச்ச நிலையை அடையும்பொழுது, “நல்லதையா!” என்ற வார்த்தைகள் வெளிவரும். பிள்ளையவர்கள் சாதாரணமாகச் சிறிதும் சிரமமின்றி அச்சிக்கல்களை விடுவித்துக்கொண்டே சென்றார்; பணிவோடு மெல்ல விளக்கி வந்தார்; லவலேசமாவது கர்வத்தின் சாயை அவரிடம் தோன்றவில்லை.

அட்ட நாகபந்தம்

தம்பிரான்கள் சில புத்தகங்களிலுள்ள சந்தேகங்களைக் கேட்ட பிறகு தண்டியலங்காரத்திலுள்ள ஐயங்களை வினவத் தொடங்கினார்கள். அதில் வரும் அட்ட நாகபந்தச் செய்யுளை நாகங்களைப் போட்டு அடக்கிக்காட்டும்வண்ணம் கேட்டார்கள். அட்ட நாகபந்தமென்பது சித்திர கவிகளுள் ஒன்று. எட்டு நாகங்கள் இணைந்திருப்பதாக அமைந்த சித்திரமொன்றில் செய்யுட்கள் அடங்கியிருக்கும். பிள்ளையவர்கள் காகிதமும் எழுதுகோலும் வருவித்துப் போடத் தொடங்கினர்.

என் அவசரம்

அவர் தொடங்கு முன் நான் ஒரு காகிதத்தில் அந்தச் சித்திரத்தை எழுதி அதற்குள் செய்யுட்களையும் அடக்கிக் காட்டினேன். நான் அவ்வாறு துணிந்து செய்தது தவறென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் தம்முடைய ஆற்றலைச் சமயங்களில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையிருப்பது மனிதர்களுக்கு இயல்புதானே! அந்த ஆசையால் தூண்டப்பெற்று நான் அட்ட நாக பந்தத்தை அமைத்தேன்.

அதை நான் போட்டு முடித்ததைப் பார்த்த ஆசிரியர், “நன்றாக இருக்கிறதே! இதை நீர் எங்கே கற்றுக்கொண்டீர்?” என்று கேட்டார். “செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் தெரிந்துகொண்டேன். இன்னும் இரதபந்தம் முதலிய சித்திரகவிகளையும் போடுவேன்” என்றேன்.

எல்லாம் கிடைக்கும்

நான் போட்ட அட்ட நாகபந்தத்தைத் தம்பிரான்கள் பார்த்தனர்; சுப்பிரமணிய தேசிகரும் பார்த்தார். “இவர் சுறுசுறுப்பாக இருக்கிறாரே. பல சங்கதிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாரே” என்று சுப்பிரமணிய தேசிகர் சந்தோசத்தோடு சொன்னார். என்னைப் பார்த்து, “பிள்ளையவர்களிடமிருந்து நன்றாகப் படித்துக்கொள்ளும். இளம்பிராயமாக இருக்கிறது. இவர்களிடம் எவ்வளவோ தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இங்கே வரும்பொழுது உடன் வாரும். உமக்கு வேண்டிய சௌகரியங்கள் கிடைக்கும். கல்யாணங்கூடச் செய்துவைப்போம்” என்று புன்னகையோடு சொன்னார். நான் சிறிது சிரித்தேன்.

“என்ன சிரிக்கிறீர்! கல்யாணம் என்றால் சந்தோசமாகத்தான் இருக்கும்” என்றார்.

பிள்ளையவர்கள் அப்போது, “இவருக்கு விவாகம் ஆகிவிட்டது” என்றார்.

“அப்படியா, அதுதான் சிரிக்கிறாரோ! ஆனாலென்ன? மற்றக் காரியங்களெல்லாம் நடக்க வேண்டாமா? எல்லாச் சௌகரியங்களையும் பண்ணிவைப்போம்” என்று தேசிகர் சொல்லிவிட்டு, “உமக்குப் படிப்பதற்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம்” என்றார்.

“சந்நிதானத்தின் கருணை இருந்தால் எல்லாம் கிடைக்கின்றன” என்று ஆசிரியர் கூறினார்.

புத்தகப் பரிசு

தேசிகர் உடனே எழுந்திருந்து பக்கத்திலிருந்த நெடும்பேழை(பீரோ) ஒன்றைத் திறக்கச் செய்தார். அதில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. அதிலிருந்து பல புத்தகங்களை எடுத்து வந்து, “கம்பரந்தாதி படித்திருக்கிறீரா? இந்தாரும் படியும். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் இவற்றையெல்லாம் இவர்களிடம் கேட்டுக்கொள்ளும். சிவஞான சுவாமிகள் வாக்கு அற்புதமாக இருக்கும்” என்று சொல்லிச் சில பிரபந்தங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பிரதிகளைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, “இவற்றில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொள்ளும்; மற்றவற்றை உடன்படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடும்” என்று சொன்னார். நான் மிக்க ஆவலோடு ஒவ்வொரு புத்தகத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். கை நிறையப் பணம் தந்தால் கூட எனக்கு அவ்வளவு ஆனந்தம் உண்டாயிராது.

“இந்தப் பிரபந்தங்களை எல்லாம் படியும். பின்பு பெரிய புத்தகங்கள் தருகிறோம்” என்று சுப்பிரமணிய தேசிகர் அன்போடு உரைத்தார். பிறகு, “எங்கே, தெரிந்த பாடல்களில் எவற்றையேனும் இசையுடன் சொல்லும்; கேட்போம்” என்றார். காலையில் நான் பைரவி இராகத்திற் பாடல்களைச் சொன்னேன். அப்பொழுது வேறு இராகங்களிலே சில செய்யுட்களைச் சொன்னேன். கேட்டு மகிழ்ந்த தேசிகர் ஆசிரியரை நோக்கி, “இவரைச் சங்கீத அப்பியாசமும் பண்ணிக்கொண்டு வரும்படி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறு சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புவைத்துப் பேசியதையும் புத்தகங்களைக் கொடுத்ததையும் கண்ட என் ஆசிரியருக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனை அவர் முகம் நன்கு புலப்படுத்தியது.

‘இங்கே வந்து விடவேண்டும்’

அப்பால் தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி, “இன்று நீங்கள் வந்தமையால் காலை முதல் தமிழ் சம்பந்தமான சம்பாசணையிலேயே பொழுதுபோயிற்று. நமக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. தம்பிரான்களுக்கும் அளவற்ற சந்தோசம். அவர்களெல்லோரும் தொடர்ந்து தமிழ் நூல்களைப் பாடங் கேட்க வேண்டுமென்ற ஆவலுடையவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரும் பாடங் கேட்கச் சித்தமாக இருக்கின்றனர் ஏதோ நமக்குத் தெரிந்ததை நாம் சொல்லி வருகிறோம். அதுவும் எப்போதும் செய்ய முடிவதில்லை. ஆதீன காரியங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரபுக்களும் வித்துவான்களும் அடிக்கடி வருகிறார்கள்; அவர்களோடு சம்பாசணை செய்து வேண்டியவற்றை விசாரித்து அனுப்புவதற்கே பொழுது சரியாகப் போய்விடுகிறது. ஆதலால் இவர்களுடைய தாகத்தைத் தணிப்பதற்கு நம்மால் முடிவதில்லை. நீங்கள் இங்கே வந்திருந்து பாடஞ் சொல்ல ஆரம்பித்தால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும். உங்களுடைய சல்லாபத்தால் நமக்கும் சந்தோசமுண்டாகும். தவிர இவ்விடம் வருவோர்களிற் பலர். ‘பிள்ளையவர்கள் எங்கே யிருக்கிறார்கள்?” என்று விசாரிக்கிறார்கள். நீங்கள் மாயூரத்தில் இருப்பதாகச் சொல்லுவதற்கு நமக்கு வாய் வருவதில்லை. இந்த ஆதீனத்துக்கே சிறப்பாக இருக்கும் உங்களை இங்கே இருந்து பாடஞ் சொல்லும்படி செய்வது நமது கடமையாக இருக்க, மாயூரத்திலிருக்கிறார்களென்று சொல்வது உசிதமாகத் தோற்றவில்லை. வருகிறவர்களில் மாயூரம் வரக்கூடியவர்கள் வந்து உங்களைப் பார்த்துச் செல்லுகிறார்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்கவில்லையே என்ற குறையுடன் சென்றுவிடுகிறார்கள். ஆகையால் நீங்கள் இனிமேல் உங்கள் மாணாக்கர்களுடன் இங்கேயே வந்துவிட வேண்டியதுதான்” என்றார்.

பிள்ளையவர்கள், “சந்நிதானத்தின் திருவுளப்பாங்கின்படியே நடப்பதுதான் அடியேனுடைய கடமை” என்று கூறினார்.

ஆறுமுகத்தா பிள்ளையின் அச்சம்

அப்போது பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்து வந்த ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று எழுந்தார்; பண்டார சந்நிதிகளை நமசுகாரஞ்செய்து எழுந்து நின்று வாய்புதைத்துக்கொண்டே, “ஐயா அவர்களைப் பட்டீச்சுரத்திற்கு அழைத்துக்கொண்டு சென்று சிலகாலம் வைத்திருந்து அனுப்பும்படி சந்நிதானத்தில் உத்தரவாக வேண்டும். அவர்களால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. அதனால்தான் அடியேன் மாயூரம் சென்று ஐயா அவர்களை அழைத்து வந்தேன்” என்றார். சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களிடம் பேசியவற்றைக் கேட்ட அவருக்கு, “நம் காரியம் கெட்டுப் போய்விட்டால் என்ன பண்ணுவது! பிள்ளையவர்கள் இங்கேயே தங்கிவிடப் போகிறார்களே!” என்ற பயம் பிடித்துக்கொண்டது.

சுப்பிரமணிய தேசிகர் அவர் கருத்தை உணர்ந்துகொண்டார். குறுநகையுடன், “அப்படியே செய்யலாம்; அதற்கென்ன தடை? பிள்ளையவர்கள் எல்லாருக்கும் சொந்தமல்லவோ?” என்று சொன்னார். அப்போதுதான் ஆறுமுகத்தா பிள்ளைக்கு ஆறுதல் உண்டாயிற்று.

விடையளித்தல்

“சரி. பட்டீச்சுரம் போய்ச் சில காலம் இருந்துவிட்டு இங்கே வந்துவிடலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களுக்கு விடைகொடுக்கவே என் ஆசிரியர் எழுந்து பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்று மடத்திற்கு வெளியே வந்தார்.

தம்பிரான்களும் வேறு சிலரும் அவருடன் வந்தார்கள். சிலர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “இதுதான் சாக்கு என்று ஐயா அவர்களை நீண்டகாலம் பட்டீச்சுரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாம்” என்றனர். அப்பால் பேசிக்கொண்டே சிறிது தூரம் யாவரும் வந்தனர். சிலர் என்னிடம் வந்து, “உம்முடைய ஊர் எது? என்ன என்ன புத்தகம் பாடம் கேட்டிருக்கின்றீர்?” என்று கேட்டனர். நான் தக்கவாறு பதில் உரைத்தேன். சிலர் நான் படித்த நூல்களில் சில சந்தேகங்கள் கேட்டனர். அன்று காலையிலிருந்து சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் என்னிடம் காட்டிய அன்பு எல்லாருடைய உள்ளத்திலும் என்பால் ஒரு மதிப்பை உண்டாக்கிவிட்டது. இல்லாவிடின் சிறு பையனாகிய என்னிடத்தில் தம்பிரான்கள் வந்து சந்தேகம் கேட்பார்களா! “நாம் படித்தது எவ்வளவு கொஞ்சம்? அதற்கு ஏற்படும் பெருமை எவ்வளவு அதிகம்? எல்லாம் இந்த மகானை அடுத்ததனால் வந்த கௌரவமல்லவா?” என்று எண்ணினேன். “நாம் இவர்களிடம் வந்து சில மாதங்களே ஆயின. தமிழ்க் கடலின் ஒரு மூலையைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இவர்களிடமிருந்து பாடங் கேட்டு நல்ல அறிவை அடைந்தால் நமக்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்” என்ற நினைவினால் “என்ன இன்னல் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்ற உறுதியை மேற்கொண்டேன்.

பஞ்சநதம் பிள்ளையின் செயல்

உடன் வந்தவர்கள் சிறிது தூரம் வந்து பிள்ளையவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்கள். எங்களுக்காக ஆறுமுகத்தா பிள்ளையவர்கள் கொணர்ந்திருந்த வண்டியில் அவரும் பிள்ளையவர்களும் ஏறிக்கொண்டனர். நான் ஏறப் போகும்பொழுது அங்கே நின்ற தவசிப் பிள்ளையாகிய பஞ்சநதம்பிள்ளை வெகுவேகமாக என்னிடம் வந்தார். என் கையிலிருந்த புதிய புத்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பிடுங்கினார். ‘எனக்கு வேண்டுமே’யென்று நான் சொன்னபொழுது, “இவ்வளவும் உமக்கு எதற்கு? ஒவ்வொன்று இருந்தால் போதாதோ?” என்று சொல்லி ஒவ்வொரு பிரதியை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை அவர் வைத்துக்கொண்டார். சுப்பிரமணிய தேசிகரிடம் நான் முதன்முதலாகப் பெற்ற பரிசல்லவா அவை? பஞ்சநாதம் பிள்ளை அவற்றைப் பறித்தபோது அவர் கன்னத்தில் இரண்டு அறை அறைய வேண்டுமென்ற ஆத்திரம் எனக்கு முதலில் உண்டாயிற்று. அவரிடம் சாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டுமென்று பிள்ளையவர்கள் எனக்கு எச்சரிக்கை செய்ததை நான் மறக்கவில்லை. ஆதலால் ஒன்றும் பேசாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு வண்டியில் ஏறினேன்.

காலை முதல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் தமிழறிவின்பால் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் முதல் தம்பிரான்கள் காரியத்தர்கள் வரையில் யாவரும் வைத்திருக்கும் மதிப்பையும் மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அறிந்து வியந்த நான், அவ்வளவு பேர்களுக்கு இடையில் சிறிதேனும் மரியாதை தெரியாமலும் தமிழருமையை அறியாமலும் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பஞ்சநதம் பிள்ளையினது இயற்கையைக் கண்டபோது, “ஆயிரம் வருடங்கள் நல்லவர்களோடு பழகினாலும் தம் இயல்பை விடாதவர்களும் உலகில் இருந்துதான் வருகிறார்கள்” என்று சமாதானம் செய்துகொண்டேன்.

இரட்டைமாடு பூட்டிய அந்த வண்டி சாலையில் வேகமாகப் போகத் தொடங்கியது.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.