உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி
என் சரித்திரம்
அத்தியாயம்-51
சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்
சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்
முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற
ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்
பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர
காண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்
ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது
கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத
தேசிகரென்பவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். அவ்விருவரும்
இசையில் வல்லவர்கள்.
குமாரபுரிப் படலம்
கந்தபுராணத்தின் முதற் காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு
பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே
தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த தலமும்
அதுவே.
முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த
தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து
வந்து வருத்தத்தை ஆற்ற மாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல்
புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும்
இந்திரனது மயல் நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.
சாமிநாத பிள்ளை
சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ்
படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும்
சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப்
பழைய மாணாக்கர்கள் சிலர் பாடம் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித்
தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.
சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வா சிரமத்தில்
உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடம் கேட்டு வந்தார். ஒரு நாள் இரவு
பத்து மணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடம் கேட்டனர். பிறகு
தம்பிரான் சயனித்துக் கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத்
துயின்றேன்.
‘சேய்ஞலூர் இந்திரன்’
குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து
பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலேதூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்த படியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்கு முறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த
தம்பிரான், “இவர் ஏதோ மன வருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்!
அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று
முடிவு செய்தனர்.
தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு
குளிக்கப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும்
சாமிநாதபிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “இராத்திரி
முழுவதும் குத்த வச்சுக் கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம்
வந்துவிட்டது?” என்று கேட்டார்.
அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து,
“அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.
அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்து
வந்தவர் அந்த விசயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாதபிள்ளையின்
வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொண்டார்.
நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே,
“சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம்
தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விசயம் ஞாபகம்
இருக்கிறதோ?”
“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில்
அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.
“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல்
இந்திராணியை நினைத்துக் கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத
பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்”என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.
பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விசயத்தை விளக்கின போது
நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம் மாணாக்கரை நாங்கள்
‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.
சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி
என் ஆசிரியருக்குச் சிதம்பரம்பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார்.
அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள்
நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமிபிள்ளை என்பவருடைய பெண்ணை
நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. சிரீ
சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும்
வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண
ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும் பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச்
சென்றார். நானும் உடன் சென்றேன்.
சிரீ நமச்சிவாய தேசிகர்
அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை
அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன.
ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல்
ஆசிரியர் வழக்கம். அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே.
கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாக இருந்த சிரீ நமச்சிவாய
தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விசயமாக ஐந்து
பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய
இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-
“சிரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வட
மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடம் சொல்லுபவர்.
இலௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல
சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது
உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோசிப்பார்.”
“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக்
காரணம் என்ன?” என்று நான் கேட்டேன் .திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி சில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply