உ.வே.சா.வின் என் சரித்திரம் 10
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 9 இன் தொடர்ச்சி)
அத்தியாயம் 6
என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி)
என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று, கனம் கிருட்டிணையர் மனோதைரியமும் பிரபுத்துவமும் உடையவர். என் தந்தையாரை அவர் மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார். ஆனாலும் அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வசுத்திரம் துவைத்துப் போடுவார்; வெந்நீர் வைத்துக் கொடுப்பார்.
அந்த சமசுதான சமீன்தாராகிய கச்சிக் கல்யாணரங்கர், கிருட்டிணையரையும் ஒரு சமீன்தாரைப் போலவே நடத்திவந்தார். அவருக்கு எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துக் கொடுத்தார். கனம் கிருட்டிணையர் குதிரையின் மேல் சவாரி செய்வதுண்டு. சமீன்தார் அவருக்கு ஓர் அழகிய குதிரை வாங்கித் தந்திருந்தார்; பல்லக்கும் கொடுத்திருந்தார். “எங்கள் மாமாவுக்கு இராசயோகம். அவருடைய மேனியழகும் எடுப்பான பார்வையும் இராசச சுபாவமும் இராசாவாகப் பிறக்க வேண்டியவர் தவறிப் பிராமணராகப் பிறந்து விட்டார் என்றே தோற்றச் செய்யும்” என்று தந்தையார் கூறுவார்.
தம்முடைய ஆசிரியர் குதிரையில் ஏறிச் செல்லும்போது சில சமயங்களில் என் தந்தையார் அக்குதிரையின் இலகானைப் பிடித்துச் செல்வதுண்டாம். இளைய பிரம்மசாரியாகிய என் தந்தையார் இத்தகைய வேலைகளில் கிருட்டிணையர் தம்மை ஏவுவது குறித்துச் சில சமயங்களில் மனம் வருந்துவார்; ‘சொந்தக்காரர்; மரியாதையாக நடத்துவார்’ என்று தாம் எண்ணியதற்கு மாறாக இருப்பதை நினைந்து வெறுப்படைவார். ஆனால் அந்த வருத்தமும் கோபமும் அடுத்த கணத்திலே மறைந்து விடும். உணவு விசயத்திலும் மற்றச் சௌகரியங்களிலும் என் தந்தையாருக்கு ஒருவிதமான குறைவும் நேரவில்லை. தம் மாணாக்கரின் உடம்பு புசுட்டிப்படுவதற்காக இத்தகைய ஏவல்களை அவர் இட்டனரென்றே எனக்கு இப்போது தோற்றுகின்றது. முறையாக என் பிதா தம் ஆசிரியரிடம் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் எழுந்து உடையார்பாளையம் காண்டீப தீர்த்தத்தின் தென்கரையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் சாதகம் செய்வது வழக்கம். கிருஷ்ணையருடைய கீர்த்தனங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவ்வப்போது அப்பெரியார் இயற்றும் சாகித்தியங்களையும் பாடம் பண்ணி சமீன்தாருக்கும் அந்த சமசுதானத்துக்கு வரும் வித்துவான்களுக்கும் பாடிக் காட்டுவார். பல பழைய சங்கீத வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்கள் அவருக்குப் பாடமாயின. கனம் கிருட்டிணையரையன்றி வேறு யாருக்கும் தெரியாத சக்கரதானத்தையும் கற்றுக்கொண்டார்.
இவ்வாறு இரவும் பகலும் குருவின் பணிவிடையிலும் சங்கீதப் பயிற்சியிலும் என் தந்தையார் சோம்பலின்றி ஈடுபட்டிருந்தார். பன்னிரண்டு வருட காலம் இந்தக் குருகுல வாசம் நடைபெற்றது.
கனம் கிருட்டிணையருக்கு வரவர என் தந்தையாரிடத்தில் அன்பு அதிகமாயிற்று. வேறு சிசுயர் சிலர் சில நாள் இருப்பினும் யாரும் அவரிடம் நிலையாக இருந்ததில்லை. அதனால் என் தந்தையாரிடத்தில் இருந்த அன்பு வன்மை பெற்றது. முதலில் உள்ளத்துள் இருந்த அது நாளடைவில் விரிந்து வெளிப்படலாயிற்று. அவர்தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம் மாணாக்காரை அழைத்துச் சென்றார். சமீன்தாரிடத்திலும் அடிக்கடி அழைத்துச் சென்று பழக்கம் செய்து வைத்தார்.
சமீன்தாருக்கு என் தகப்பனாரிடத்தில் அன்பு உண்டாயிற்று; “வேங்கட சுப்பு” என்று பிரியமாக அழைத்துப் பேசி மகிழ்வார். பிறகு மாதச் சம்பளமும் அவருக்கு ஏற்படுத்தினார்.
கனம் கிருட்டிணையர் வித்துவான்கள் கூடிய சபையில் பாடும் போது என் தந்தையாரையும் உடன் பாடச் சொல்வார். சில சந்தர்ப்பங்களில் அவரைத் தனியே பாடச் செய்து கேட்டு மகிழ்வார். இத்தகைய அன்புச் செயல்களால் என் தந்தையாருக்கு ஊக்கமும் சங்கீதத்தில் திறமையும் அதிகமாகிக் கொண்டே வந்தன.
என் பிதா அவர்கள் உடையார்பாளையம் சென்ற சில வருடங்களுக்குப் பின் என் சிறிய தந்தையாராகிய சின்னசாமி ஐயரும் அங்கே சென்று கனம் கிருட்டிணையரிடம் சங்கீத அப்பியாசம் செய்யத் தொடங்கினர்.
என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விசயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம்; ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விசயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலைகொள்ள மாட்டார்கள்.
தம்முடைய குமாரருக்கு விவாகம் செய்விக்க வேண்டுமென்னும் கவலை என் பாட்டியாருக்கு உண்டாயிற்று. பாட்டனார் தம்முடைய சீவனத்துக்குப் போதுமான வருவாயை மாத்திரம் சம்பாதித்து வந்தார். நிலங்களெல்லாம் போக்கியத்தில் இருந்தன. கடன் வாங்குவதற்கும் மார்க்கம் இல்லை. இந்த நிலையில் விவாகச் செலவுக்கு என்ன செய்வதென்ற யோசனை பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் உண்டாயிற்று. “மாமாதான் வழிவிட வேண்டும். சாமி இப்போது நமக்குப் பிள்ளையாக இல்லை. அவருக்குத்தான் பிள்ளையாக வாழ்ந்து வருகிறான். அவர் முயற்சி பண்ணினால் கலியாணம் நிறைவேறும்” என்று அவர் நினைத்தார்.
இடையிடையே என் தந்தையாரைப் பார்க்கும் வியாசத்தால் என் பாட்டனாரும் பாட்டியாரும் உடையார்பாளையம் வந்து சில நாள் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம். அங்ஙனம் ஒரு முறை வந்திருந்தபோது என் பாட்டியாராகிய செல்லத்தம்மாள் தன் அருமை அம்மானிடம் தம் குமாரருடைய சங்கீதத் திறமையைப் பற்றி விசாரித்தார்.
கனம் கிருட்டிணையர், “நல்லபிள்ளை; எல்லாருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுகிறான். எனக்கு எவ்வளவோ சகாயம் செய்து வருகிறான்.சமீன்தாருக்கும் அவனிடம் பிரீதி உண்டு” என்றார்.
அதுதான் தம்முடைய விருப்பத்தை வெளியிடுவதற்கு ஏற்ற சமயமென்று துணிந்த செல்லத்தம்மாள், “எல்லாம் உங்கள் ஆசீர்வாத விசேடந்தான். உத்தமதானபுரத்தில் இருந்தால் வீணாய்ப் போய்விடுவானென்று உங்களிடம் ஒப்பித்தேன். உங்களுடைய கிருபைதான் அவனுக்கு எல்லாப் பெருமையும் உண்டாவதற்குக் காரணம். நீங்கள் வைத்த மரம். எனக்கு ஒரு குறை மாத்திரம் இருக்கிறது” என்று பேச்சைத் தொடங்கினார்.
“என்ன குறை?”
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply