(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 2/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5


மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர்

தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் இரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன.முனைவர்மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் இரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.
“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம் முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50ஐ 50,000 ஆக்கித் தந்தவர் ஆவர்.”

– பூ. சா. கோ. கலைக்கல்லூரி மலர் 1958, பக். 58

இப்போற்றியுரை இரா. பி. சே. அவர்களின் பொழிவாற்றும் திறனை-உரனை விளக்கி நிற்கின்றது. நெல்லையில் வழக்கறிஞர் சேதுப்பிள்ளையாக இருந்தபோதும், அண்ணாமலையில் தமிழ்ப் பணியாற்றியபோதும் இவர் ஆற்றிய பொழிவுகள் பல. என்றாலும் சென்னையில் இவர் ஆற்றிய பொழிவுகளே மிகுதி. ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கம்பராமாயணச் சொற் பொழிவாற்றினார். இதன் விளைவாகச் சென்னையில் ‘கம்பன் கழகம்’ ஒன்று தோற்றம் பெற்றது, அதன் தலைவராகச் சேதுப்பிள்ளையே விளங்கினார், கோகலே மன்றத்தில் ஞாயிறுதோறும் என மூன்று ஆண்டுகள் சிலப்பதிகாரப் பிழிவினைப் பொழிவாக்கினார். தங்கசாலைத் தமிழ்மன்றத்தில் வாரத்திற்கு ஒருநாள் என ஐந்து ஆண்டுகள் திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தி னார், கம்பரையும் கச்சியப்பரையும் இணைத்துப் பொழி வாக்கிய இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இப்பொழி வினை நிகழ்த்தினார். இதன் பயனாகக் ‘கந்தபுராணத் திரட்டு’ என்னும் நூல் பதிப்பிக்கப்பெற்றது, ‘வேலின் வெற்றி’, ‘வேலும் வில்லும்’ போன்ற நூல்கள் உருவாக்கப் பெற்றன. மேலும் புறநானூற்று மாநாடு, திருக்குறள் மாநாடு தமிழாசிரியர் மாநாடு போன்ற இலக்கிய மாநாடுகளில் தலைமை உரையும் ஆற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாவில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை யில் ‘குறளும் குறளாசிரியர்களும்’ என்ற தலைமையில் அரியதொரு சொற்பொழிவாற்றினார்.

நூலாசிரியர்

இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள் பல. இவை பதிப்பு நூல்கள், வரலாற்று நூல்கள். ஆராய்ச்சி நூல்கள் என்னும் முப்பெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன. ஆராய்ச்சி நூல்களுள் ஆய்வாக மலர்ந்தவை சில; கட்டுரை களின் தொகுப்புகளாக அமைந்தவை சில: பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை சில. இவையே அன்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன.

பதிப்பு நூல்கள்

இவர் பதிப்பித்த முதல் நூல் ‘கந்தபுராணத் திரட்டு’ என்பது 1944இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சென்னையில் கந்தகோட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் விளைவால் உருப்பெற்றது. கந்தபுராணத்தினின்றும் ஆயிரத்தைந்நூறு பாடல்கள் திரட்டிப் பொழிப்புரையுடன் எழுதப்பட்ட இந் நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது.

1957ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களில் சிறந்தன என்று இவரால் கருதப்பட்ட பாடல்கள் சிலவற்றின் தொகுப்பே ‘பாரதியார் இன் கவித்திரட்டு’ என்பது. இது சாகிததிய அகாதெமியின் வெளியீடு ஆகும்.

இதே ஆண்டில் வெளிவந்த ‘செஞ்சொற் கவிக்கோவை’ சங்கக்காலம் முதல் பாரதியார் காலம் ஈறாக உள்ள இலக்கியங்களின் சுவைமிக்க பாக்களின் தொகுப்பு நூல். 1960இல் பதிப்பிக்கப் பெற்ற ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலும், ‘செஞ்சொற்  கவிக்கோவை’யைப் போன்றே சுவைமிகக தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். இவையே அன்றி, எல்லீசர் திருக்குறளுக்கு வரைந்த உரையையும் பதிப்பித்துள்ளார்.

வரலாற்று நூல்கள்

வாழ்க்கை வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா நிலையில், அத்துறையிலும் நூல்கள் பல உருவாவதற்கு வழிகோலியவர் இரா.பி. சே. ஆவர். ‘தமிழ்நாட்டு நவமணிகள்,’ ‘கால்டுவெல் ஐயர் சரிதம்,’ ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்ற மூன்றும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகும். இவற்றுள் முதன் முதலில் வெளிவந்த நூல் ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் (உ)லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார்,  மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல். இந்நூலின் சிறப்பினை,

“பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிறார்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டுதொட்டுச் சரித்திரவாயிலாகவும், பனுவல்கள் வாயிலாகவும் அறியக் கிடக்கும் நம் நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களும் காண அரியவாயினவே என்று நெடுநாளாகக் கருதியிருந்த ஒரு பெருங் குறையை இந்நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார்”

என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் அமைச்சர் தி. நெ. சிவஞானம் பிள்ளை பாராட்டி யுரைக்கின்றார்.

1936இல் வெளிவந்த ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ கால்டுவெல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவது.

1946இல் வெளியிடப்பெற்ற ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல் வீரமாமுனிவர், போப்பையர். கால்டுவெல், எல்லீசர். இக்னேசியசு ஐயர், வேதநாயகம் பிள்ளை, கிருட்டிணபிள்ளை போன்ற கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளின் விளக்கமாக அமைந்துள்ளது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்