என் சுயசரிதை
1.
என் இளம் பருவ சரித்திரம்

பம்மல் விசயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 1-ஆந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருடம் தை மாதம் 21ஆந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் சனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விசயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் எண் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்குச் சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய்ப் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விசயங்கள் நிச்சயமாய்க் கூறலாம், அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒருநாள் இறக்க வேண்டுமென்பதாம், ஆயினும் இவ்விரண்டு விசயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள் வேண்டும். இறந்ததைப் பற்றியும். மற்றவர்கள் பின் கூறவேண்டுமல்லவா?

————-
2. என் தாய் தந்தையர்

என் தகப்பனாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். மேற்குறித்த புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கும் சில குறிப்புகளை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவர் பிறந்தது. 1830-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 1-ஆந்தேதி உரோகிணி நட்சத்திரம். சிரீ கிருட்டிணன் பிறந்த உரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமென்று பயந்திருந்தார்களாம், ஆயினும் அப்படி ஒன்றும் கெடுதி நேரிட வில்லையென்று என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. (சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கவனிப்பார்களாக.)

1850ஆம் வருடம் அவருக்கு முதல் விவாகமானது. அதன் மூலமாக ஒரு புத்திரனும் இரண்டு புத்திரிகளும் பெற்றார். பிறகு அந்தத் தாரம் தப்பிப்போகவே 1860ஆம் வருடம் இரண்டாவது மனைவியாக மாணிக்கவேலு அம்மாள் என்னும் என் தாயாரை மணந்தார். இந்த விவாகத்தின் மூலமாக அவருக்கு நான்கு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறந்தார்கள். அந்த நான்கு புத்திரர்களில் கடைசிப் புத்திரன் நான். என் தகப்பனார் என் தாயாரை மணந்த சமயம் நேரிட்ட ஒரு சந்தர்ப்பம் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குச் சிறிது பலன் தரக்கூடிய விசயமாயிருப்பதால் அதை இங்கு எடுத்தெழுதுகிறேன், இரண்டாம் தாரத்தைத் தேடியபொழுது எனது தகப்பனாருக்கு வயது முப்பதானபடியால் இரண்டாம் தாரம் சிறு பெண்ணாயில்லாமல் கொஞ்சம் வயதான பெண்ணா யிருக்கவேண்டுமென்று கோரினார். என் தாயாருக்கு அப்போது வயது இருபதாயிருந்தது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். ஆகவே என் தாயாரையே மணக்க வேண்டுமென்று நிச்சயித்தனர். ஆனால் அக்கால வழக்கின்படி இருவருடைய சாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல சோசியர்களுக்குக் காட்டிய பொழுது அவர்கள் எல்லாரும் பெண் சாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமுமில்லை, கழுத்துப் பொருத்தமுமில்லை என்று கூறினார்களாம். அஃதாவது குழந்தைகள் பிறக்கமாட்டார்கள், அமங்கலியாய் போய்விடுவாள் என்று அருத்தம். அது எப்படியாயினும் ஆகுக. இந்தப் பெண்ணைத் தான் நான் மணம் புரிவேன் என்று என் தகப்பனார் ஒரே பிடிவாதமாய் என் தாயாரை மணம் புரிந்தார். சோசியர்கள் கூறியதற்கு நேர்விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள், வயிற்றுப் பொருத்தம் இல்லாமையின் பலன் இதுபோலும். இனி கழுத்துப் பொருத்தத்தைப்பற்றி கவனிக்குங்கால் என் தாயார் அமங்கலியாக ஆகாது என் தகப்பனாருக்கு 1890ஆம் வருடம் சசுட்டி பூர்த்தியானபோது ஒரு மங்கலியத்திற்கு இரண்டு மங்கலியங்களாக பெற்றபிறகே சுமங்கலியாக இறந்தார்கள். யாராவது என் தகப்பனாரிடம் சாதகங்களைப்பற்றி பேச வந்தால் மேற்சொன்ன கதையை அவர் அவர்களுக்குப் பன்முறை கூறியதை நான் நேராகக் கேட்டிருக்கிறேன், (சோசியத்திலும் சாதகத்திலும் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை யில்லாதிருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.)

என் தகப்பனார் சிறு வயதில் மாபூசுகான்தேவடியிலிருந்த ஒரு தெருப் பள்ளிக்கூடத்தில் முதலில் படித்தனராம். அப்பொழுது நடந்த ஒரு வேடிக்கையான சந்தர்ப்பத்தை அவர் எனக்குக் கூறியுள்ளார். அதை இங்கு எழுதுகிறேன். நான் இருக்கும் வீதியின் ஒரு புறத்திற்கு மாபூசுகான்தேவடி என்று பெயர். அது அக்காலம் தோட்டமாய் இருந்ததாம், அத் தோட்டத்திலிருந்த வீட்டிற்கு அந்த மாபூசுகான் என்பவர் எப்பொழுதாவது வருவதுண்டாம். ஒருமுறை அவர் பல்லக்கு பள்ளிக்கூடத்தருகில் வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் எல்லோரும் பெரும்கூச்சலிட மாபூசுகான் சாய்பு பல்லக்கை நிறுத்தி உபாத்தியாயரை அழைத்து பிள்ளைகள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்று கேட்க, அவர் பயந்து “தாங்கள் வருவதைக் கேள்விப்பட்டு பிள்ளைகள் சந்தோசத்தினால் கூடச்சலிடுகிறார்கள்” என்று பதில் சொல்ல சாயபு ஆனால் பிள்ளைகளுக்கு இன்று விடுமுறை கொடுத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாராம். இவ்வாறு ஒருநாள் விடுமுறை கிடைக்கவே பிள்ளைகளெல்லாம் பிற்பாடு மாபூசுகான் சாயபு பல்லக்கு வரும்போதெல்லாம் பெரும் கூச்சலிட்டு விடுமுறை பெற்றார்களாம்.

பிறகு என் தகப்பனாரும் அவர் தம்பியும் (அவர் பெயர் சோமசுந்தர முதலியார்) ஆங்கிலம் கற்கவேண்டி அப்பொழுது தான் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட பச்சையப்பன் பாடசாலையில் சம்பளமில்லாமல் இலவசமாய் மாணவர்களாகப் போய்ச் சேர்ந்தனர். அங்கு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது அரசு உயர் தரக் கலாசாலை (Presidency high School) பேராசிரியராயிருந்த திரு பவல்துரை, தன் வழக்கம்போல் வருடத்திற்கு ஒருமுறை அங்கு வந்து பிள்ளைகளைப் பரிட்சை செய்து நன்றாய் தேறினவர்களை அங்கிருந்து தன் கலாசாலைக்கு மாணவர்களாக அழைத்துக்கொண்டு போகிற வழக்கப்படி, என் தந்தையாரையும் அவர் தம்பியையும் தன் உயர் தரப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். அப்பாட சாலை அக்காலம் நுங்கம்பாக்கத்தில் தற்காலத்தில் ‘பழைய கல்லூரி’ (Old College) என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்ததாம். பிறகு மாகாண கல்லூரியாக (Presidency College) மாற்றப்பட்டு திருவல்லிக்கேணியில் தற்காலமிருக்கும் பெரிய கட்டடத்தில் மாற்றப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை