(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 1. தொடர்ச்சி)

3. ஏழைக் குடும்பம்

என் தகப்பனார் அந்தக் கல்லூரியில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயக்கடையில் குமாசுத்தாவாக சொல்பச் சம்பளம் பெற்று, குடும்பத்தைச் சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கட்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்தக் கல்லூரியில் படிக்கச் செய்தராம். இந்த நிலையில்தான் என் தகப்பனார் கட்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்குக் கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம் மத்தியான சாப்பாட்டிற்காக ஒரு பாத்திரத்தில் கூழ் எடுத்துக்கொண்டுபோய், அதற்கு வியஞ்சனமாக வெங்காயப் புரையை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தனராம்.

சென்னை சருவகலாசாலையின் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது அச்சிட்ட ஒரு புத்தகத்தில் என் தகப்பனாரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு மொழி பெயர்க்கிறேன். பி. விசயரங்க முதலியார் 1851 ஆம் வருடம் திறன் (Proficient) பரிட்சையில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வருடம் இராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலைத் தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். மேற்கண்ட திறன் பட்டம் தற்காலத்தில் பி.ஏ. பட்டத்திற்குச் சமானமாகும். அந்தப் பரிட்சையில் தேறுபவர்களுக்குக் கலாசாலையார் தங்கள் செலவில் ஒரு பொன் மோதிரம் அக் காலம் அளித்துவந்தனர். அப்படி என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொன் மோதிரம் சற்றேறக்குறைய தன் அறுபதாம் ஆண்டு வரையில் அவர் விரலில் அணிந்திருந்தார். அவர் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது. அக்கலாசாலையில் படிக்கும்போது என் தகப்பனாரும் அவர் தம்பியாகிய சோமசுந்தர முதலியாரும் பெற்ற சில பரிசுப் புத்தகங்கள் அவர்கள் பெயருடன் என் வசம் இன்னும் இருக்கின்றன.

மேற்கண்ட பரிட்சையில் தேறின உடனே அவர் அக் கலாசாலையிலேயே சீக்கிரம் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டதாக என் தகப்பனார் எனக்குத் தெரிவித்திருக்கிறார். பிறகு அந்த தானத்திலிருந்து மதுரை சில்லாவில் பள்ளிக்கூடங்களுக்கு துணை ஆய்வாளராக (Deputy Inspector of Schools) ஆக கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் உரூபாய் 250 சம்பளம். பிற்பாடு பள்ளி உதவி ஆய்வாளர் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் உரூபாய் 400. இவ் வேலையிலிருந்து தன் அறுபதாம் ஆண்டில் 1890ஆம் வருடம் உபகாரச் சம்பளம் (பென்சன்) வாங்கிக்கொண்டு விலகினார்.

என் தகப்பனார் தன் ஆயுள் பரியந்தம் பெரும் உழைப்பாளி யாயிருந்தார் என்றே நான் சொல்லவேண்டும். அவர் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் ஒரு முக்கிய அங்கத்தினராக உழைத்தார். அதற்காகப் பல புத்தகங்களைத் தமிழில் எழுதிப் பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் திராவிட பாசையில் நூதனப் புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட பள்ளிப்புத்தகங்கள், நாட்டுமொழி இலக்கியச் சங்கம் (School books and Vernacular Literature Society) என்னும் சபையில் தன் ஆயுள் பரியந்தம் அங்கத்தினராக இருந்தார். இச்சமயத்திலும் சில தமிழ்ப் புத்தகங்களை அவர் வெளியிட்டார். அவற்றுள் பம்மல் விசயரங்க முதலியாருடைய மூன்றாவது வகுப்பு வாசக புத்தகம் என்னும் நூலை அவர் எழுதிப் பதிப்பித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. சென்னையில் அக்காலம் பார்க்கு பேர் {Park Fair) வருடா வருடம் நடத்தப்பட்ட வேடிக்கையின் காரியதரிசியாக 1881-ஆம் வருடம் முதல் 1886-ஆம் வருடம் வரையில் அவர் இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. சென்னையில் விசய நகரம் மகாராசா அவர்கள் அக்காலம் ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்குக் காரியதரிசியாயிருந்தார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) உறுப்பினராகத் தன் ஆயுள் பரியந்தம் இருந்தார். மேற்படி யூனிவர்சிடியாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் பரீட்சகர்களின் போர்ட்டுக்கு (Board of Examiners for Tamil) பல வருடங்களில் சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார். சுருக்கி சொல்லுமிடத்து அவர் அக்காலத்தில் சென்னையில் சேர்ந்திராத பொதுக் கூட்டமாவது கிளப் (Club) ஆவது இல்லையென்றே ஒருவாறு கூறலாம். பச்சையப்பன் கலாசாலையில் டிரசுட்டியாக (Trustee of the Patchiappan’s charities) தன் ஆயுட் பரியந்தம் இருந்தார்.

இதுவரையில் அவரது லெளகீக வியவகாரங்களைப்பற்றி எழுதினேன். இனி அவரது வைதீக வியவகாரங்களைப்பற்றி சிறிது எழுதுகிறேன்.

1872-ஆம் வருடம் மதுரை திருஞானசம்பந்தசுவாமிகள் மடத்தில் அவர் சிவதீட்சை பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கவேண்டியிருக்கிறது. அதன் பிறகு நான் உடனே பிறந்தபடியால் எனக்குத் திருஞானசம்பந்தம் என்று அந்த மடத்து பண்டார சந்நதி அவர்கள் பெயரையே வைத்ததாக என் தகப்பனர் எனக்குக் கூறியிருக்கிறார். அவர் எழுதி வைத்த சிறு புத்தகத்தில் என் பெயர் திருஞானசம்பந்தம் என்றே எழுதியிருக்கிறது. (என் சிறுவயதில் P. T. (ப. தி.) சம்பந்தம் என்றே என் பெயர் எழுதப்பட்டது. பிறகு நான் புத்தி அறிந்தவுடன் நமக்கு ஞானம் எங்கிருந்து வந்ததென்று அப்பெயரை சம்பந்தம் என்றே குறுக்கிக் கொண்டேன்.)

மேற் சொன்னபடி அவர் சிவதீட்சை பெற்ற பிறகு தன் மரணகாலம் சமீபித்தபோது படுக்கையாய்ப் படுத்த வரையில் அவர் தினம் சிவபூசையைச் செய்துவந்தார். வெளியூர்களுக்குப் பிரயாணம் போனதும் அச்சிவபூசைக்குரிய சாமான்களை தன்னுடன் எடுத்துச்செல்வார்.

அவர் மதுரையில் இருந்தபோது அங்குள்ள பிராம்மணர்களுக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்து பண்டார சந்நதிக்கும். ஏதோ விவாதம் நடந்ததாகவும் என் தகப்பனுர் மடத்துகட்சிக்கு உதவி அதன் பொருட்டு கவர்மெண்டாருக்கு அனுப்பிய ஒரு பெட்டிசன் (Petition) என்னிடம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அக்காலத்திலேயே பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார் என்கிற கட்சி உண்டாயிற்று போலும். (நான் எந்த கட்சியையும் சேர்வதில்லை என்பதை இங்கு சுருக்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்).

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை