(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5  தொடர்ச்சி)

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5

 தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து தலைப்புகளில் 46 குழந்தைப் பாடல்களைக் கொண்டுள்ளது. இது அன்பர் திரு. மு. அருணாசலம் அவர்கள் முயற்சியால் 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்குழந்தைப் பாடல்கள் 1954ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் பெயரோடு 58 பாடல்களைக் கொண்டு தனியே வெளியிடப்பட்டது. இக் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் நூலுக்கு 1957ஆம் ஆண்டு குழந்தை நூல்வரிசையில் சென்னை அரசாங்கக் கல்வித் துறையினர் பரிசு அளித்துப் பாராட்டினர்.

குழந்தை இலக்கிய வரலாறு’ என்னும் நூலினை எழுதிய நண்பர் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள் குழந்தைச் செல்வம் நூலில் உள்ள பாடல்களில் பாதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிப்பதற்கே ஏற்றவையாகும் என்று திறனாய்ந்து தெளிந்துள்ளார். [6] ‘குழந்தைகள் பயன் பெறுமாறு பாடிய கவி தேவி’ (தேசிக விநாயகம் பிள்ளை) என்றும், ‘தேவிக்குக் குழந்தை இல்லை, இருந்தால் குழந்தைப் பாசம் அவர்கள் அளவில் நின்றிருத்தலும் கூடும். உள்ளத்தே ஊறிச் சுரக்கும் அன்பை அழுதும் அரற்றியும் முரண்டுபிடித்தும் அக்குழந்தைகள் தடைப்படுத்தி இருக்கவும் செய்யலாம். இப்பொழுதோ தமிழகக் குழந்தைகள் அனைத்தும் அவர்கள் குழந்தைகளாகி விட்டன. அவர்களின்மீது அன்பையும் அருளையும் அள்ளிச் சொரிகின்றார்கள்.’[7] என்றும் திரு. செ. சதாசிவம் அவர்கள் கவிமணியின் குழந்தை உள்ளத்தை எடுத்து மொழிகின்றார்.

இனி, கவிமணியின் குழந்தைப் பாடல்களை வகைப் படுத்திக் காண்போமாக.

தாலாட்டு

தாலாட்டு என்ற இலக்கியவகை மிகப் பழமையானது. ‘நாக்குத்தான் குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக் கருவி’ என்று மொழி நூல் வல்லுநர் ஆட்டோ எசுபர்சன் கூறுகிறார்.[8] இந்த நாக்கு நல்ல சொற்களைச் சொல்ல முயலும் நாள்களைச் ‘செங்கீரைப் பருவம்’ என்று செப்பினர். கிலுகிலுப்பை ஒலியினைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையைப் பற்றிய குறிப்பு சிறு பாணாற்றுப்படையில் இடம் பெற்றிருக்கக் காணலாம். [9] தொட்டிலில் படுத்துக் கிடக்கும் குழந்தை, தன்னைப் பார்த்துத் தொட்டிலை ஆட்டிக் கொண்டு தாலாட்டுப் பாடும் தாயின் வாய் அசைவினை நோக்கித் தானும் வாய் அசைத்துப் பொருளற்ற மழலைச் சொற்களை உதிர்க்கத் தொடங்குகின்றது.

பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அகண்ட செவிகளும் நீண்ட நாக்குகளும் கொண்டனவாய்த் துலங்குகின்றன. எனவே தாலப் பருவம் என்பது பிள்ளைப் பருவங்களில் வரும் பத்துப் பருவங்களுள் ஒன்றாகும். ‘தாலோ தாலேலோ’, ‘ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ’ என்னும் சொற்கள் குழந்தையின் நெஞ்சில் கிளர்ச்சியை ஊட்டுவனவாகும். கவிமணி பாடிய குழந்தைத் தாலாட்டுப் பாடல்களில் சில பொறுக்கு மணிகளை இங்கே காண்போம்.

முல்லை நறுமலரோ?
முருகவிழ்க்குங் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
மருக்கொழுந்தோ சண்பகமோ?

★★★
நெஞ்சிற் கவலையெலாம்
நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
போற்றும் இளமதியோ?

★★★
கண்ணுறங்கு, கண்ணுறங்கு,
கண்மணியே! கண்ணுறங்கு :
ஆராரோ? ஆராரோ?
ஆரிவரோ? ஆராரோ?

இந்தப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனையும் பாட்டோட்டமும் பாராட்டத் தகுவனவாகும்.

குழந்தையாக இருக்கும்பொழுதே நல்ல பழக்க வழக்கங்களைப் புகட்டிவிடுதல் நல்லது என்ற நிலையைத் தான் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற ஒரு முதுமொழி குறிப்பிடுகின்றது. இந்த முறையில் ஒருவருக்கு அறிவுரை கூறவேண்டுமானால் அவர் மனம் மகிழ முன்னிலைப்படுத்தி அதன் பின்னரே கூற வந்த அறவுரையை அவர் மனம் கொள்ளும்படி குறிப்பின் வெளிப்படக் குறிப்பிட வேண்டும். இவ்வாறான போக்கினைப் புறநானூற்றுப் பாடல்களில் காணலாம், அரசர்களுக்கு அமரின் இடையே அஞ்சாது அறவுரை கூறத் துணிந்த புலவர் பெருமக்கள் முதற்கண் அரசனையும் அவன் பிறந்த மரபினையும் வாழ்த்தி தாம் கூறவந்த கருத்தை எடுத்து மொழிவது வழக்கம். அம். முறையில் குழந்தையினை வைகறையில் துயில்விட்டு எழுப்ப நினைக்கும் கவிமணி அவர்கள், குழந்தையின் மனப் பாங்கினைப் உணர்ந்து தம் பாடலைப் புனைந்துள்ளார்.

அப்பா!! எழுந்திரையா!
அரசே! எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று
கோழி அதோ கூவுது பார்!


கா கா கா என்று
காகம் பறக்குது பார்!
கிழங்கு வெளுக்குது பார்!
கிரணம் பரவுது பார்!

இந்தப் பாடல்களில் குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் காலையில் கண் மலரச் செய்யும் பக்குவத்தைக் காண்கின்றோம். மேலும் அவர் குழந்தை மகிழ்வோடும் வியப்போடும் கானும் கறவைப் பசுவினையும் கன்றுக் குட்டி யினையும் காட்டி. பின்னர், பால்குடிக்க, பழம் தின்ன வேண்டும் என்று மகிழ்ச்சியூட்டி ஊடேயே பாடங்கள் படிக்க வேண்டிய அவசியத்தினையும் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்லவேண்டிய பக்குவத்தினையும் நயம்பட உரைக்கின்றார்.

கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?
பாடங்கள் எல்லாம்
படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?
காலையும் ஆச்சுதையா!
கண்விழித்துப் பாரையா!
அப்பா!! எழுந்திரையா!
அரசே எழுந்திரையா!

அடுத்து, காலைப்பாட்டு என்ற தலைப்பில் அமைந்த பாடலிலும் இதே விரகினைக் கையாளுவதைக் காணலாம்.

பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று;
பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
பொன்னே! நீ எழுங் தோடி வாராய்!

காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
கனியுதிர் காவினைப் பாராய்!
கண்ணே! நீ எழுங் தோடி வாராய்

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

குறிப்புகள் :

[6]. குழந்தை இலக்கிய வரலாறு, ப. 27.
[7]. செ. சதாசிவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப. 118.
[8]. It has been well said for a long time, a child’s dearest toy is its tongue – Otto Jespersen : Language its Origin and development.
[9]. சிறுபாணாற்றுப்படை, 55-61
[10]. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப. 120.