(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3 – சி. பா. தொடர்ச்சி)

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5


மனிதன் வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர்,

“பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”
(குறள். 70)

என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும். இதனையே திருவள்ளுவர்,

தம் பொருள் என்ப தம்மக்கள்” (குறள். 63)

என்று குறிப்பிட்டுள்ளார், ‘செல்வமற்ற ஏழைகளின் செல்வம் குழந்தைகளே’ (Children are poor Men’s riches)என்றும் ‘துறக்க உலகத்தின் திறவுகோல் குழந்தைகளே, (Children are the key of paradise) என்றும் குழந்தைச் செல்வத்தின் மேன்மை குறிக்கப் பெறுகின்றன. நல்ல குழந்தைகளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் அன்றியும் மறு உலகிலும் புகழினைப் பெறுவர் என்று அகநானூறும், தவழ்ந்து விளையாடும் குழந்தைச் செல்வத்தினைக் குறைவறப் பெறாதவர்கள் படைப்பு பல படைத்திருப்பினும், பலரோடு உண்ணும் செல்வ வளம் சிறக்கப் பெற்றிருப்பினும் பயன் இல்லை என்று புறநானூறும் [1] குறிப்பிடுகின்றன.

குழந்தை இலக்கியத்தின் தொன்மை

தொல்காப்பியம் ‘பிசி’ என்ற இலக்கிய வகையினைக் குறிப்பிடுகின்றது.

“ஒப்போடு புணர்ந்த வுவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவி னாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
(தொல். பொருள்: 488)


தன்கண் உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருவதும், உவமப்பொருள் ஒன்று சொல்ல ஒன்று தோன்றும் துணிவினதாகவும் பிசி இருவகைப்படும் என்று சொல்கிறது தொல்காப்பியம். இக் குறிப்புக்கொண்டு பிசி என்பது விடுகதையினைக் குறித்து நிற்கின்றது என அறியலாம். பிசி, செவிலியர்க்கு உரியது என்று பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார். குழந்தைகளை வளர்க்கும் தாய் சங்கக் காலத்தில் செவிலி என வழங்கப் பெற்றாள். செவிலியர் குழந்தைகளை நன்கு வளர்த்து, அவர்களை மகிழ்விக்க விடுகதைகளையும், வேடிக்கைக் கதைகளையும் கூறினர். பேராசிரியர் ‘பிசி’ என்பதற்குத் தந்துள்ள உதாரணங்களில் ஒன்று கீழ்வரும் பாட்டாகும்.

நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடில்
ஊராடு நீரில்காக் கை
” [2]

குளிக்காத பார்ப்பனன்; அவன் நிறமோ சிவப்பு, அவன் நீரில் குளித்தெழுந்தால் காக்கையின் கரிய நிறம் கொண்டு விடுவானாம் என்ற குறிப்பு இப் பாட்டில் அமைந்துள்ளது. இப்பாட்டு பிசி; நெருப்பைக் குறிக்கின்றது. மேலும் அகநானுாற்றில் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடிய பாடல் ஒன்றில் வானத்தில் பவனிவரும் கோல நிலவைக் காட்டித் தன் கைக்குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் ஒருத்தியைக் காட்டுகின்றார். “நிலவு எரிக்கும் முதிராத இளந் திங்களே! பொன்னாலான ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு நீ இங்கு விளையாட வந்தால் உனக்கும் பால் தருவேன்” என்று குழந்தைக்கு நிலவை வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டு கின்றாள்.

முகிழ்கிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பால் என
விலங் கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
” [3]

என்பது அப் பாடற்பகுதி. இது பிற்காலத்திலே பல நிலாப் பாடல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது என்று நம்பலாம்.

குழந்தைக் கவிஞர் கவிமணி

தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு’ என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் இரசிகமணி டி.கே சி. இக்காலக் கவிஞர் ஒருவர்,

பகைவரென ஒருவருமே இல்லாப் பண்பு
பாலித்த கவிமணியார், நமது பிள்ளை
முகைகளெல்லாம் நலம்பெருகி மலரப் பாட்டு
மொழிந்திருந்தது இக்காலம் நமது, காலம்
!”

என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் அரும்பெரும் நூல்கள் பல உண்டு; கன்னித் தமிழ் ஆட்சிமொழியாய் மாட்சியுற்றிருந்த காலத்தே எழுந்த இலக்கியங்களில் பல இற்றைச் சிறுவர்க்கு எளிதில் விளங்குவதேயில்லை. ஆத்திசூடியும். கொன்றைவேந்தனும் அன்றையக் குழந்தைகட்கு எளிய இனிய நூல்கள். வேற்று மொழியின் ஆதிக்கத்தால் அத்தகைய தமிழறிவைப் பலர் இழந்துவிட்டனர். இந்நிலையில் குழந்தை இலக்கியம் இன்றியமையாததாயிற்று. அக்குறையை நீக்கிக் குழந்தைகள் உளங் குளிர்ந்து பாடுவதற்கு ஏற்ற எளிய கவிதைகள் பலவற்றைத் தந்தவர் கவிமணி [4] என்று சொல்லின் செல்வர் இரா.பி. சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் கவிமணியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ‘கவிமணியின் பாடல்களிற் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மறித்துச் சுரக்கின்றன’ என்று கூறியுள்ளார். [5]

குழந்தை உள்ளம்

கவிமணி அவர்கள் குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். தம் வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் பலவற்றின் படங்களைத் தொங்கவிட்டிருப்பார். அவர் வாழ்வில் அவருக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஊரில் உள்ள குழந்தைகளையெல்லாம் தம் குழந்தையாக எண்ணினார். குழந்தைகள் நெஞ்சம் உருகி நைந்தால் இவரும் உள்ளம் உருகிக் கரைவார். குழந்தைகள் அழுவதைக் காண மனம் பொறுக்க மாட்டார். எனவே குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெரும்பங்கு கொண்டார். ‘மலரும் மாலையும்’ என்னும் தம் கவிதைத் தொகுதியை,

செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே

என்று தம்முடைய கவிதை நூலையே தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு உரிமையாக்கினர்.

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்

குறிப்புகள்:

[1]. அகநானூறு, 66, 1-4.[2]; புறநானூறு, 188
[3]. அகநானூறு, 54: 17-20 [4]; சுடர், கவிமணி மலர், பக்கம் 35.
[5]. தமிழ்ச்சுடர் மணிகள், பக்கம் 423.