(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 1/4


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.


வாழ்க்கை வரலாறு


பிறப்பும் வளர்ப்பும்


1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமத்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.


தொழில்

மு. இராகவையங்கார் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையிலேயே தம் வளர்ப்புத் தந்தை பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியப் பணி புரிந்தார். 1904ஆம் ஆண்டில், பாண்டித்துரைத் தேவர் அவர்களால் 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை இரண்டையும் உடன் அமைத்துத் தொடங்கப் பெற்ற செந்தமிழ் என்ற இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் செந்தமிழ் இதழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தே இவர் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு அளித்த கொடை அளவிடற்கரியது. 1913 முதல் 1939 வரை ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் ஒருவராக, தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமைந்து, தமிழ்ப் பேரகராதி ஒன்று உருப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரண மாக அரசாங்கத்தார். இவருக்கு ‘இராவ் சாகிப்’ என்னும் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். 1944ஆம் ஆண்டு இலயோலாக் கல்லூரியில் பி.ஓ.எல். வகுப்புகள் தொடங்கப் பெற்றபோது, இக்கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பு ஏற்றார். 1945ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் அழகப்ப வள்ளல் அவர்கள் நன்கொடையால் தோற்றம் பெற்ற தமிழ் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் பதவியை முதன் முதலில் அணி செய்த பெருமை இவரையே சாரும். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் பத்பநாப சுவாமி கோவிலின் அருகில் உள்ள ஒரு வீட்டில் தம் மனையாளுடன் தங்கி இருந்தார். இறை வழிபாட்டில் ஈடுபாடுடைய இவர் திருவிதாங்கூர் மன்னரின் அன்பைப் பெற்றவர். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது இவருக்கு உதவியாளராக இருந்தவர் திரு. கிருட்டிண ஐயங்கார் அவர்கள் ஆவர். 1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து அக்காப்பியத்திற்கு உரை விளக்கமும், பாடபேத ஆராய்ச்சியும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். பதினெட்டு அகவையில் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கிய . இவர் தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காக உழைத்துத் தமிழுக்காக வாழ்ந்து தம் எண்பத்திரண்டாம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

தமிழ்த் தொண்டு

மு. இராகவையங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும்போது, அவர் வாழ்நாள் முழுமையும் தமிழ்த்தாயை அணி செய்வதிலேயே கழிந்தமை வெள்ளிடை மலையாகிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் மு. இராகவையங்கார் அவர்களின் அருஞ்செயல்களை இனிக் காண்போம்.


ஆராய்ச்சி வேந்தர் மு. இராகவையங்கார்

மு. இராகவையங்கார் அவர்களை ஆராய்ச்சி உலக முன்னோடி என்று அறிஞர்கள் ஏத்துவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இவருடைய கைவண்ணத்தால் உருப் பெற்றன. அவற்றுள் பதினான்கு நூல்கள் ஆராய்ச்சி நூல்கள். இவற்றுள் கால/வரலாற்று ஆராய்ச்சி பற்றியன சில; இலக்கிய ஆராய்ச்சி தொடர்பானவை பல; இலக்கண ஆராய்ச்சி பற்றியன சில.


கால வரலாற்று ஆராய்ச்சி பற்றியன

மு. இராகவையங்கார் அவர்களின் முயற்சியில் வெளி வந்த முதல் நான்கு நூல்களுமே கால / வரலாற்று ஆராய்ச்சிகளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்