(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-1/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 2/6

காங்கிரசு மாநாடுகள்

எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் (இ)ரெளலட்டு சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத் துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன் முதல் அண்ணல் காந்தியைத் தென் கோடித் தமிழகத்திற்கு வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்த பெருமை நம் நாவலரையே சாரும். இரு நாள்கள் தூத்துக்குடியில் தங்கிய காந்தியார் நாவலர் வீட்டிற்கும் வந்து போனார். (இ)ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் ஒருவராக நாவலர் அஞ்சாநெஞ்சத்துடன் கையெழுத்திட்டார்.

அடுத்து. நாவலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், காந்தியடிகள் தம் காங்கிரசு கட்சி வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்கத் தென்னகச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். காந்தியடிகளை அண்ணாமலை நகருக்கு வருமாறு நாவலர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பலரும் காணிக்கை வழங்கிய கூட்டத்தில், மற்றவர்களுக்குத்தான் முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் மகள்களான மீனாட்சி, இலலிதா ஆகிய இருவரும் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் இலலிதா பாரதி எனும் இளைய மகள் மேடைக்குச் சென்று காந்தியடிகளிடம் தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்து மேடைக்குச் சென்ற மூத்த மகள் மீனாட்சி பாரதி தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மேடை யினின்று கீழே இறங்கிய பின்னர்த் தன் கையிலிருக்கும் வளையல்களையும் கழற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் மீதூரவும், மீண்டும் மேடையேறிச் சென்று தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்றிக் காந்தியாரிடம் தந்தார், “யாருடைய மகள் இச் சிறுமி?” என்று தம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து வினவிக் கொண்டே, தம்மிடமிருந்த கதர் மாலை ஒன்றையெடுத்து மீனாட்சி பாரதி கழுத்தில் போட்டார் காந்தியார். அருகிருந்தோர் அடுத்திருந்த நாவலரைச் சுட்டிக்காட்ட, “பாரதியாரின் குழந்தையா! அப்படியானால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை” என்று காந்தியார் கூறினாராம். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற நாவலர், தாம் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றித் தரவேண்டும் என்று மட்டும் கூறியிருந்த அளவில், கை வளையல்களையுங் கழற்றித் தந்த தம் மகள் மீனாட்சியைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.

காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகிச் சிலர் சுயராச்சியக் கட்சி என்றதொரு புதிய கட்சியை உருவாக்கினர். பண்டித மோதிலால் நேருவும் சி.ஆர். தாசும் இந்தியர் ஒத்துழையாமை இயக்கத்தை விட்டு விட்டுச் சட்டமன்றங்களுக்குச் சென்று அங்கே போராடி உரிமைகளைப் பெறவேண்டும் என்றனர். 1926ஆம் ஆண்டில் சி. ஆர். தாசை மதுரைக்கு அழைத்துப் பொதுக்கூட்டத்தில் பேசச் செய்ததோடு, அவர்தம் பேச்சையும் நாவலர் தமிழில் மொழிபெயர்த்தார். சைமன் கமிசனை எதிர்த்து 1930ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் நாடெங்கும் நடைபெற்ற ‘உரிமை நோக்க நாள்’ பின்னாளில் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கும், உப்புச் சத்தியாகிரகத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாகத் தலைவர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நாடெங்கும் நடந்த இக் கிளர்ச்சிக்குப் பணம் தேவைப்பட்டது. தென்னாட்டில் ஒரு திரளான நன்கொடை திரட்டித் தந்தவர்களில் நாவலர் குறிப்பிடத்தக்கவராவர். இம்மட்டோடன்றித் தாமும் தம் வருவாயிலிருந்து திங்கள்தோறும் நூறு உரூபாய் நன்கொடை அனுப்பி உதவினார். மேலும் நாவலர் குடும்பமே நாட்டுப் பணியில் தலைநின்றது எனலாம். காரணம் நாவலர் தம் இரண்டாவது மகன் இலட்சுமிரதன் பாரதி, மகள் இலக்குமி பாரதி, மருகர் கிருட்டிணசாமி பாரதி ஆகிய மூவரையும் காங்கிரசு தொண்டர்களாக்கி. அவர்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிப்பு


“தாழ்த்தப்பட்டோருக்குத் திருக்கோயிலில் நுழையும் உரிமை இல்லை” எனும் இழிநிலையை எதிர்த்துக் காந்தியடிகள் 1933 மேத் திங்கள் 3ஆம் நாள் உண்ணா நோன்பு தொடங்கினார். இருபத்தொரு நாள்கள் நீடித்த இவ்வுண்ணா நோன்பின் விளைவாக அண்ணல் காந்தியடிகளால் அரிசனங்கள் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மக்கள் கோயில் உள் நுழையும் உரிமை கோரினர். இயல்பிலேயே தாழ்த்தப்பட்டோரிடம் தாயன்பும் தனியன்பும் காட்டி வந்த நாவலர் அவர்கள் மாடமதுரையில் கோயில் நுழைவு இயக்கத்தைத் தொடங்கி, மதுரை மாவட்டத்தின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முதல் தலைவராக விளங்கினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்