(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-5/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6


தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும்


தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக, தொல் காப்பியம் – பொருட்படலமும் புதிய உரையும்’ எனும் நூல் எழுதினார். இந்நூலில் அகத்திணையியல், புறத்தினையியல், மெய்ப்பாட்டியல் என்னும் மூன்றியல்களின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் புதியவுரையின் சிறப்பினைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், “நாவலர் இப்புத்துரை செய்ததன் வாயிலாகத் தமிழுக்கும் தமிழர்க்கும் எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார். தக்க மேற்கோளுடன் எவரும் மறுக்க முடியாத வகையில் பொருள் கூறித் தமிழர் பெருமையைக் காத்துள்ளார். அப் புத்துரையைப் பாராட்டி மக்களனை வரும் அதையே படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில நூல்கள்

மேற்கண்ட நூல்களைத் தவிர, இவர் அவ்வப்போது இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளும், வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றன. அவ்வாறு வெளிவந்த நூல்கள் ‘நற்றமிழ்’, ‘பழந்தமிழ் நாடு’ என்பனவாகும். இவர்தம் ஆங்கிலக் கட்டுரைகள் ‘தமிழ் இலக்கியங்களும் தமிழகமும்’ (Tamil Classic and Tamīlaham)பெயரில் நூலாக அமைந்தது.

மேலும் இவர் கரிகாலனும் திருமாவளவனும் ஒருவரே என்ற கருத்தை மறுத்தும், பட்டினப்பாலையின் தலைவன் கரிகாலனல்லன் திருமாவளவனே என்றும், இத்திருமாவளவன் கரிகாலனுக்கு மகன் என்றும் ஆராய்ந்து கூறியுள்ளார்.


சீத்தலைச் சாத்தனாரும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் வெவ்வேறு புலவர் என்றும், மணிமேகலை பாடிய புலவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் ஆவர் என்றும், இவரின் வேறான புரவலரைப் போற்றி அவரால் பேணப்பட்டு வாழ்ந்தவரே சங்ககாலச் சீத்தலைச் சாத்தனா ரென்றும் முடிவு கட்டினார்.

மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் மொழி பெயர்ப்பு நூலன்று, அது செந்தமிழில் எழுந்த முதல் நூல் என்றும், உருத்திரனும், சிவனும் ஒருவரல்லர், வெவ்வே றானவர் என்றும், உருத்திரன் அழிக்கும் கடவுள், தமிழரின் சிவன் எல்லாம் வல்ல இறைவன் என்றும் தக்க ஏதுக்கள் காட்டி எடுத்துரைத்தார்.

இவ்வாறாகமுனைவர்நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் இலக்கிய எழுஞாயிறாய் – இருபதாம் நூற்றாண்டு நக்கீரராய் இலங்கினார். நாட்டுப்பற்றில் வேர் ஊன்றி, தமிழ்ப்பற்றில் கிளைவிட்டுப் படர்ந்து, தமிழன மேம்பாட்டிற்குச் செழித்து விளங்கியது நாவலர் என்னும் நற்பயன் மரம் என்று கூறலாம்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்