இந்தியை எதிர்ப்போர் தென்னாட்டில் இலரா?
– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் வடநாடு சென்று திரும்பிவந்ததும் செய்தியாளர்களிடையே, ‘‘தென்னாட்டில் இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று கூறிவிட்டு ‘‘இந்தியை எதிர்ப்பவர்களும் அரசியல் நோக்கம் கொண்டுதான் எதிர்க்கின்றார்கள்’’ என உரைத்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.
இந்திமட்டும் இந்தியக் கூட்டரசின் மொழியாக ஆவதையும், அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாளும் எதிர்த்துவருகின்றார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும். அங்ஙனமிருந்தும் நம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் இட்லரின் முறையைப் பின்பற்றி ‘‘இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று உண்மை நிலைக்கு மாறாகக் கூறிவருவது மக்களாட்சி முறை நெறிக்கு மாறானதாகும் என்பதை முதிர்ந்த அரசியல் தலைவராகும் அவர்க்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதன்று.
இன்றுள்ள சூழ்நிலையில் ‘‘இந்தி படித்தால்தான் நடுவிட அரசின் பதவி கிட்டும்’’ என்றும் ‘‘வட நாட்டில் பணிபுரியும் வாய்ப்புக்கிட்டும்’’ என்றும் கூறிச் சிலர் இந்தியைக் கற்குமாறு மக்களைத் தூண்டுகின்றனர்.
இந்தியக் கூட்டரசின் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இந்தி மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றவரையில் ‘‘இந்தி படித்தால் தான் வாழ்வு உண்டு’’ என்று கருதுவது உண்மை நிலையோடு பொருந்தியதாகத்தான் தோன்றும், வாழ்வு மட்டும் பெரிது என்றால் ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றிடப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டாமே. ‘‘ஆங்கிலம் கற்றால் உலகம் முழுதும் வேலை தேடலாமே’’ என்று கூறி ஆங்கிலத்தை இந்நாட்டு மொழியாக என்றும் நிலைக்கச் செய்திருக்கலாமே. செய்தோம் இலையே! அங்ஙனம் செய்திருந்தால் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானம் ஆகியவற்றுக்கு மாறுபட்டதாகி மற்றையோரால் இகழப்படும் நிலையை அடைந்திருப்போம் அன்றோ? ஆகவே ஆங்கிலத்தை அயல்மொழியாகக் கருதுவதுபோலவே இந்தியையும் இந்தி வழங்காத மாநிலத்தார் அயல்மொழி எனக்கருதுவதில் தவறு இன்று அன்றோ? ஆனால் பதின்கு தேசீய மொழிகளுள் ஒன்றாக இந்தியும் இருப்பதனால் ஆங்கிலத்தினும் இந்தியை நம் மொழியெனக் கூறிக்கொண்டு கற்பதற்கு உரிமை இருக்கின்றது. அதேபோன்று இந்தி மொழியாளரும் ஏனைய மொழிகளுள் ஒன்றையோ பலவற்றையோ கற்க உரிமையும் உறவும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இன்றைய நடைமுறையில் இந்தி மட்டுமே இந்தியக் கூட்டரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் காரணமாக இந்தியக் கூட்டரசு, மக்கள் அனைவரும் இந்தி கற்றல் வேண்டுமென வெளிப்படையகவும், மறைமுகமாகவும் கட்டாயப்படுத்தி வருகின்றது. தேசியமொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்தையும் ஒப்பக்கருதாமல் இந்திக்கே முதன்மையளித்து வருவது மட்டுமின்றிக் கூட்டரசின் ஒற்றை மொழியாகக் கொண்டுள்ளமை அண்மை நிகழ்ச்சியால் வெளிப்பட்டு விட்டது. அவ்வண்மை நிகழ்ச்சியாவது, கூட்டரசுத் தலைவர் இந்தியைத் தவிர ஏனைய தேசிய மொழிகளில் கூட்டரசுப் பாராளுமன்றில் உரை நிகழ்த்தலாகாது என உரைக்கப்பட்டதாகும். ஆகவே இந்திமொழிக்கு அளிக்கும் தனிமுதன்மையை ஏனையதேசிய மொழியாளர்கள் தடுத்துநிறுத்த கடமைப்பட்டவர்களாகின்றனர்.
ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களில் (காங்கிரசுக்குள்) இந்தி முதன்மையை விரும்பாதவர்கள் உளர். ஆனால் கட்சிக்கட்டுப்பாட்டினால் உண்மையை வெளிப்படையாக உரைக்க அஞ்சுகின்றனர்.
பொது உடைமைக் கட்சியினர் உருசிய நாட்டை முன்மாதிரியாகக் காட்டி ஆங்கு ஏனைய தேசிய மொழிகளிலும் உருசிய மொழி ஒன்றுக்கே முதன்மை என்று கூறி அதேபோன்று இங்கும் இந்திக்கே முதன்மை என்று கூறிவருகின்றனர். ஆனால் உருசிய மொழியோடு இந்தியை ஒப்பிட முடியாது என்பதை மறந்துவிட்டனர். உருசிய மொழியை நம் நாட்டு மக்கள் கூட வாய்ப்பும் வசதியும் இருப்பின் கற்றல் வேண்டுமென்பது நமது கருத்து. இன்று உலக அரங்கில் ஆங்கிலத்தையும் வென்று முன்னேறி வருகின்றது உருசிய மொழி. உருசிய மொழி வழியாக உலகில் வளர்ந்துவரும் அறிவியல் செல்வங்களைப் பெற்றுவிடல் முடியும். ஆகவே சோவியத் நாட்டினர் மட்டுமின்றிப் பிற நாட்டினரும் கற்க வேண்டிய தகுதிப்பாடுடைய உருசிய மொழியோடு இந்தியை ஒப்பிட்டு இந்திக்கு ஏனைய தேசிய மொழிகளை விட முதன்மை கொடுக்க வேண்டுமென்று கூறுவதும் அதை அனைவரும் கற்க வேண்டுஎமன்று வற்புறுத்தி வருவதும் மாநிலங்களின் தன் ஆட்சி உரிமைக் கொள்கைக்கு மாறுபட்டது என்றே கருதுகின்றோம். அன்றியும் உருசியாவில் அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் அளிக்கும் உரிமையும் வாய்ப்பும் இந்தியக் கூட்டரசில் அதன் தேசியமொழிகட்கு அளிக்கப்படவில்லை என்பதை மறுத்தல் இயலாது; மறைத்தல் கூடாது.
பரதகண்டமாம் இப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள கூட்டரசின் மொழியாக ஒன்றைமட்டும் ஏற்றுக் கொள்வது, அதுவும் எவ்வகையாலும் வளர்ச்சி பெறாத வளமற்ற இந்தியை மட்டும் ஏற்றுக் கொள்வது என்பது இந்தி மொழிச் செல்வாக்குக்கும், ஏனைய தேசிய மொழிகளின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் அடிகோலுவதாகும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.
ஆகவே நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் உடையோர் அனைவரும் தம் மாநிலத்திற்கும் மொழிக்கும் வர இருக்கும் தீங்கைக் கருதிக் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டுமென்று உள்ளன்போடு வேண்டுகின்றோம்.
நாம் எவ்வித அரசியல் நோக்கமுமின்றி இந்தி முதன்மையைத்தான் எதிர்க்கின்றோம். ஆனால் விரும்பி இந்தி படிப்பதையன்று என்பதைத் தெளிவாகக் கூறுகின்றோம்.
‘‘வேலை வாய்ப்புக்கென இந்தி படியுங்கள்’’எனச் சிலர் கூறிவருவதும் பொருந்தாது. அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கட்கே இடம் என்ற கோட்பாடு வலுப்பெற்று வருகிறது. தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவர்க்கு எங்கும் வேலை என்பது நடைமுறையில் ஒத்துவராது. அதற்கு இந்தி வேண்டும் என்பதும் பொருந்தாது. எந்த மாநிலத்திற்குச் செல்ல விரும்புகின்றோமோ அந்த மாநில மொழியைக் கற்றல்தான் தகும். ஆகவே வேலை வாய்ப்பின் பேரால் இந்தி படிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மை நிலையை உணர்ந்து இந்தி முதன்மையைத் தடுக்க முன்வருவார்களாக.
இந்தி மட்டும் முதன்மைபெறும் நிலை உறுதிப்படாது தடுக்க ஆவன செய்ய மடிதற்று முந்துறவேண்டும். இன்றேல் தமிழின் நிலையும் தமிழ்நாட்டு நிலையும் என்னாகுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
ஆங்கில முதன்மையால் தமிழ் அடைந்த இழி நிலையை நாம் அறிவோம். ஆங்கிலமாவது அறிவு வளத்திற்கும் உரிமை உணர்வுக்கும் உரன் ஊட்டியது. அத்தகைய ஆங்கிலத்தை -இன்னும் பல ஆண்டுகட்குக் கற்றுத் தீர வேண்டிய ஆங்கிலத்தை- அகற்றி அதன் செல்வாக்கிலிருந்து விடுதலை பெறப் போராடிக் கொண்டிருக்கும்போது அதன் இடத்திலே அமர்ந்து நம்மை அடிமைப்படுத்தும் நிலையை எத்தகுதியும் இல்லாத இந்திக்கு எவ்வாறு கொடுக்க முடியும்?
‘‘இந்திக்கு அடிமையாகி இறப்பதை விட இப்பொழுதே இறந்துவிடுவது மேல்’’ என எண்ணி எரியில் மூழ்கி இறந்த செம்மல் சின்னச்சாமியின் வீரச் செயல்கூடத் தமிழ் மக்களைத் தட்டி, எழுப்பிலதே. என்னே கொடுமை! உண்பதும், உடுப்பதும், பதவிகளைப் பெறுவதும்தான் வாழ்வா? விழியினும் இனிய மொழியை இழந்து வாழ்வது எற்றுக்கு? தமிழ்மொழி அழிந்தபின்னர் தமிழர் என்ற பெயர் நமக்கு ஏது? நமக்குப் பெயர் மட்டும் இருந்தாலும் ‘‘நாமமது தமிழர் எனக் கொண்டிருந்த வாழ்ந்திடுதல் நன்றோ?’’ ஆகவே இந்தி முதன்மையைத் தடுத்துத் தமிழைக் காக்க ஒன்றுபடுவீர்களாக. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே.
நம் அருமை முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் அரசியல் நோக்கமின்றி, அரசியலைச் சாராது இந்தி முதன்மையை எதிர்ப்போர் உளர் என்பதை இனியேனும் அறிந்து, எதிர்ப்போர் கூறும் காரணங்களைக் கேட்டு ஆவன செய்து தமிழைப் போற்றித் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்றிக்கு உரியராக வேண்டுகின்றோம்.
சேக்கிழார் மரபில் வந்துள்ள நம் முதல் அமைச்சர்க்குச் செந்தமிழைக் காக்கும் சீரிய கடனும் உண்டு என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
”அசைவில் செழும் தமிழ் வழக்கே
அயல் வழக்கின் துறை வெல்ல’’
எனும் சேக்கிழார் பெருமானின் திருவிருப்பம் நிறைவேறப் பணிபுரிதல் அவர்க்கும் ஏனையோர்க்கும் தலையாய கடனாகும்.
– குறள்நெறி மாசி 18. 1995 / 01.03.1964
Leave a Reply