(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி)

இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம் சாற்றி அவர்கள் மீது தடை விதித்துள்ளது முறையா?

தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக இன்றும் பரிந்து உரிமைக்குரல் கொடுக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர் இலங்கைத்தமிழர்க்கு எவ்வகை உதவியும் செய்யக் கூடாதென்று தடைசெய்வது முறையாகுமா?  வடவர்க்கிருக்கும் இனப்பற்று தமிழர்க்கு இருக்கக் கூடாதா? கருநாடகத்திலும்,  பம்பாயிலும் தமிழினம் கொடுமைப்படுத்தப்பட்டதை இந்திய அரசே, கேட்டாயா? உலகம் முழுவதும் ஓடி வாழும் தமிழினத்திற்கு என்ன உதவி செய்கிறாய்? இந்திய அரசே! தமிழினத்தை அழிக்க முற்படாதே! பழிக்குப் பழி வாங்கப்படுவாய்! எச்சரிக்கை!

கன்னியாகுமரியில் ஒரு பார்ப்பானுக்குத் தேள் கொட்டியது என்றால், காசுமீர் பார்ப்பானுக்கு அண்டை கட்டுகிறது.  தென்னாப்பிரிக்காவில் அந்நாட்டு வெள்ளையர் ஆட்சியில் வடநாட்டார் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பும் வடவர் இலங்கையில் தமிழினம் சிங்களர்களால் கொல்லப்படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் ஏன்? இரக்கங்காட்டாமல் இராசீவு காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கைத் தமிழர்களாகிய விடுதலைப் புலிகள்தாம் காரணமென்று கற்பனை செய்து அவர்களுக்குத் தடைவிதித்துள்ளது இந்திய ஆரிய அரசு.

ஈழத்தமிழர்கட்கும், தமிழர்கட்கும் பண்டு தொட்டு உறவுண்டு. யாழ்ப்பாணத்தார் பன்னூற்றுவர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இலங்கை முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட, பாடுபடுகிற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்களே. அவர்களை வெளியேற்ற இந்திய அரசு இலங்கையரசுடன் ஒப்பந்தஞ் செய்து கொண்டது. 

ஆரியர் அரசு. உறவினர் இலங்கையில் இருக்கும் போழ்து தொடர்பில்லாமல் இருக்கவியலுமா? தொழிலமைச்சர் தொண்டைமான் தமிழ்நாட்டவர்தாமே? விடுதலைப் புலிகட்குத் தமிழ்நாட்டில் உறவினர் பலருளர். சிங்களர் கொடுமை தாங்காமல் ஓடி வந்து தமிழ்நாட்டில் ஏதிலிகளாயிருப்பவர்கள் யாவரும் விடுதலைப்புலிகளின் உறவினர்களே. தொடர்பு வைத்திருப்பவர் என்று சிறையிடுவது முறையாகாது.

(தொடரும்)