seeman02

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

  திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:

  நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

   இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன கட்சிதான் அது. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் காங்கிரசைத் தோற்கடிக்கப் பரப்புரை செய்ய வேண்டி இருக்கும்.

   பாசகவைப் பொருத்தவரை எந்தவகையிலும் அது காங்கிரசு கட்சிக்கு மாற்றானது அல்ல. இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்றபோது பாசகவினரும்கூட  எதுவும் சொல்லவில்லை. இப்போதும், ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு என்ன செய்வோம் என்று உறுதியான எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

   பல முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால், தமிழர்களைப் பற்றிய எந்த கருத்தையும் அவரது பேச்சில் குறிப்பிடவே இல்லை. எப்படி அவர்களை நம்புவது? வைகோ எந்த அடிப்படையில் சேர்ந்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

   சாஞ்சிக்குச் சென்று போராட்டம் நடத்தினார். அது யாரை எதிர்த்து என அவரைத்தான் கேட்க வேண்டும். சாதியையும் மதத்தையும் வைத்து நடத்தும் அரசியலை ஏற்க முடியாது.

   இப்போது கடல் தாமரை போராட்டத்தை நடத்துபவர்கள் கடந்த ஆண்டு எங்கே இருந்தார்கள் அரசியல் தேவைக்காக, வாக்குகளை அறுவடை செய்வதற்காக நடைபெறும் முயற்சி இது. அவர்களை நம்ப முடியவில்லை.

   இலங்கைக் கடற்படை நம் மீனவர்களைத் தாக்குகிறது. ஆனால், இலங்கை மீனவர்களையும், தமிழ் மீனவர்களையும் வைத்து அழைத்து ஏன் பேச்சு நடத்த வேண்டும் கச்சத்தீவைப் பெறாமல் இதற்கான தீர்வு கிடைக்காது.

  திமுகவில் நடைபெறும் குடும்பச் சண்டை குறித்து எதுவும் சொல்ல முடியாது. தேர்தலுக்குள் அது சரியாகிவிடும். ஏற்கெனவே இதுபோல பல முறை நடந்திருக்கிறது என்றார் சீமான்.

  செவ்வியின்போது, திருச்சி மாநகர ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.