(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும்  5

 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணிற்குத் தெரிகிற ஏழை எளியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத மேட்டுக்குடி வடநாட்டார் இவர்கள் எல்லாரும் வெளியில் வருவதே இல்லை மகிழுந்தில் கூடக் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு போகிறார்கள் மேலங்கி முழு ஆடையோடு(கோட்டு சூட்டோடு) இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மக்களிடத்தில் வந்து பேச வேண்டிய தேவையே இல்லை. தமிழ் தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லை.  

நாங்கள் சிறையில் இருந்த போது சிறைத்துறை தலைவராக ஃகோண்டா(Honda) என்று ஒருவர் இருந்தார். இப்போதும் என்ன சட்டம் என்றால் சிறைத் துறையின் தலைமை அதிகாரி இ.கா.ப. ஆக இருக்க வேண்டும். இந்த இ.கா.ப.  என்பவர் பெரும்பாலும் வடநாட்டுக்காரராக இருப்பார். சிறையில் குறை கேட்க வருவார்கள். அரிசியில் கல் கலக்கிறார்கள்; மோரில் தண்ணீர் கலக்கிறார்கள்; விடுதலை செய்யவில்லை என்றெல்லாம் குறை சொன்னால் என்ன சொல்கிறார்கள் என்று உடன் வருகிற கண்காணிப்பாளரைக் கேட்பார்கள். அவர் மொழிபெயர்த்துத் தலைமை அதிகாரிக்குச் சொல்வார். எல்லாம் சொல்லியதற்குப் பிறகு இந்த ஃகோண்டா சொல்வார் “அச்சா அச்சா” என்று. அவ்வளவுதான், சென்று விடுவார் இந்த அச்சாவிற்கு என்ன மிச்சம், அந்தப் பச்சா இவர் போன பிறகு அடி வாங்குவார்.

 குறை  தீர்ப்பது இருக்கட்டும், குறை கேட்பதற்காகவாவது ஒரு மொழி வேண்டாமா? தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர் ஏதோ ஊழியராக மட்டும்  அல்ல, உயர் அதிகாரியாகக் கூட இருக்கக் கூடாது. எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. நீதிபதியாக இருக்கக் கூடாது. இதைக் கேட்பதில் என்ன குறை?

உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்று விட்டு இன்று மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் இரஞ்சன் கோகாய். அவர் அன்றைக்கு நீதிபதியாக உட்கார்ந்திருக்கிறார். உபியில் இருந்து ஒரு மாவட்ட நீதிபதி அவர் முன்பு வாதிட்டார். அவருக்கு ஆங்கிலம் சரியாக வராது. “இது உச்ச நீதிமன்றம்  என்று தெரியுமா தெரியாதா? எதற்காக நீங்கள் இந்தியில் பேசுகிறீர்கள்?”  “எனக்குச் சரளமாக ஆங்கிலம் வராது” என்று சொல்லிப் பார்த்தார்.  

அதெல்லாம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று சொன்னார் கோகோய்.

ஏன்? என்ன அவசியம் இருக்கிறது?

இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேசுவதற்குச் சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார்கள். ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எழுதுகிறார். ஒன்றும் நடைபெறவில்லை. மோதி மட்டும் ஊரூராகச் சென்று திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறார். நிதி அமைச்சர் ஔவையார் பாட்டெல்லாம் படிக்கிறார்கள். எங்களுக்கு உள்ளூரில் ஒன்றும் நடைபெறவில்லை. இப்படி நிறைய பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தமிழ்நாட்டின் இறைமை என்பதற்கு ஏதாவது பொருள் இருக்குமானால் அது தெளிவாகத் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பை,  தமிழ்நாட்டின் செல்வங்களைத் தமிழ்நாட்டின் இயற்கைச் சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டங்கள் இல்லாமல் செய்ய முடியாது.  

இதே அதானி எங்கே பார்த்தாலும் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். தரவு மையம் (Data Center) என்று சொல்லி இங்கே வந்து தமிழ்நாட்டு அரசோடு பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ஒப்பந்தம் போடுகிறார். துறைமுக ஒப்பந்தம், விமான நிலைய ஒப்பந்தம், இன்னும் பற்பல ஒப்பந்தங்கள்! நாங்கள் கேட்கிறோம்: தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நீக்கம் செய்ய வேண்டும், கிழித்தெறிய வேண்டும். தோழமைக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். அதானிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தில் அதானியை எதிர்த்து அருமையாகப்  பேசுகிறீர்கள்! கடுமையாகப் பேசுகிறீர்கள்! உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானியுடன் இருக்கும் ஒப்பந்தங்களைக் கிழித்தெறிய வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு இந்த உரிமை இருக்கிறது.

உபி மாநில அரசினர் நீக்கி விட்டார்கள், தெரியுமா? மின்சாரத்தை அளக்கத் திறன்மானி(Smart meter)  ஒப்பந்தம் போட்டு இருந்தார்கள். யோகி ஆதித்தியநாத்து அதை நீக்கி விட்டார். உன்னோடு ஒப்பந்தம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். 

 இப்போது நாம் தமிழ்நாட்டு மக்களுடைய தன்மானம், தமிழ்நாட்டு மக்களுடைய தன்னாட்சி, தமிழ்நாட்டு மக்களுடைய தன்னுரிமை  என்ற அடிப்படையில் அடிப்படைச் சட்டங்களுக்கான கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட வேண்டும். அது இல்லாமல் நாமாக இந்தச் சிக்கலை மேலெழுந்த வாரியாக, வடவர் வருகை என்று மட்டும் பார்த்துத் தீர்த்து விட முடியாது. வடவர் வருகை என்பது அவர்களை அடித்தளமாக கொண்டு ஓர் ஆதிக்கம், ஒரு விரிவாதிக்கம் செயல்படுவதைக் குறிக்கும். அது ஓர் ஆட்சியின் வன்பரவல். அதனை எதிர்த்துப் போராடுவதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உங்கள் அனைவரோடும் இணைந்து நிற்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்