(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 351 – 362 இன் தொடர்ச்சி)

363. ஏதியல்

Aetiology, Aitiology, Etiology (பின்னிரண்டும் அமெரிக்க ஒலிப்பு)- ஏதியல், நோய்க் காரண ஆய்வு, ஏதுவியல், நோய்க் காரணவியல், நோய்க்  காரணவியல்,  காரண காரிய ஆராய்ச்சி, காரண காரிய ஆராய்ச்சித் துறை, காரண விளக்கம், காரண காரியவியல், காரணவியல், காரணி, நோய் ஏதியல், நோய்வழித் தோற்றம், நோயாய்வியல், நோய் முதலியல்,  நோய் முதல், நோய் வழித் தோற்றவியல்,  நோய்க் காரண ஆய்வு, நோய்க்காரணவியல், காரண விளக்கம், காரணி, நோய்க்காரணம், காரணகாரிய வியல், நோய்க் காரணி, நோய்க்காரண ஆய்வு, நோய்க் காரணம், வைநிறவியல், நிதானம், காரணவியல் எனப் பலவகையாகக் கூறப்படு கின்றன. இவற்றுள் வைநிற வியல், நிதானம் ஆகிய இரண்டும் இத்துறை குறிததன வல்ல. அகராதி ஒன்றிலும் அதனைக் கையாளும் ஐரோப்பிய அகராதியிலும் நாய்த்தாற்றியல் எனத் தட்டச்சுப் பிழையுடன் உள்ளது. பிற இணைய அகராதிகளும் அவ்வாறே கையாளுகின்றன. நோய்த் தோற்றவியல் எனத் திருத்திப் படிக்க வேண்டும். மொத்தத்தில் சுருக்கமாக, நோய் ஏதியல் என்பதைக் குறிக்கும் வகையில்

ஏதியல் –  Etiology/ Aetiology/ Aitiology எனலாம்.

Aetiology, Aitiology, Etiology

364. ஏம அங்கவியல்

நோய்எதிர் அங்க இயல்  என்பதையே முதலில் குறிப் பிட்டிருந்தேன். ஆனால், Immuno என்பதற்கு ஏமம் என வரையறுத் துள்ளதால் ஏம அங்கவியல் எனச் சுருக்கமாகக் குறித்துள்ளேன்.

Immunohematology

365. ஏம நோயியல்

Immunopathology

366. ஏம மரபியல்

Immunogenetics

367. ஏமவியல்           

Immunology – ஏமவியல், எதிரூக்கி யியல், நோய் எதிர்ப்பியல், நோய்த் தடுப்பியல்,  நோய்த் தடைக் காப்பியல், நோய்த் திசுப்பாற் றியல், நோய்த் தடுப்புத் திறனியல், தடுப்புத் திறனியல், நோய்த் தடுப்பாற்றலியல், நிர்பீடன வியல், நோயெதிர் சத்தியியல் எனப் பலவாறாகப் பயன்படுத்துகின்றனர்.

இவற்றுள் நிர்பீடனம் என்பது இலங்கையில் பயன்படுத்தப் படுவது. பீடனம் என்றால் வருத்து, துன்புறுத்து எனப் பொருள். எனவே, துன்புறுத்தும் நோயைக் குறிக்கின்றது. அதனை அழிப்பது என்பதற்காக நிர்பீடனம் என்கின்றனர். ஆனால்,  இது தமிழ்ச் சொல்லன்று. எனவே, கைவிடலாம். சத்தி என்பதும் தமிழல்ல. எனவே, நோயெதிர் சத்தியியல் என்பதையும் விட்டுவிடலாம். திசுப்பாற்றியல் என்பது ஒலி பெயர்ப்புச் சொல்லான திசு என்பதுடன் இணைக்கப்பட்ட  சொல். எனவே, இதனையும் நாம் பயன்படுத்தத் தேவையில்லை. நோயைத் தடுப்பது அல்லது எதிர்ப்பது என்னும் பொருள் கொண்ட பிற யாவும் பொருளடிப்படையில் சரிதான். ஏமம் என்பது பாதுகாப்பது என்னும் பொருளில் இங்கே பயன்படுத்தப் படுகிறது. நோயை எதிர்ப்பதன் மூலம் அதன் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதாகத்தானே பொருள். எனவே, சுருங்கிய சொல்லான ஏமவியல் என்பதே இங்கே எடுத்தாளப்படுகிறது.

Immunology

368. ஏமவுயிரியல்

Immunobiology

369. ஏரண வெறுப்பியல்

Misology அறிவாராய்ச்சி வெறுப்பு, ஆராய்ச்சி யறிவின் மீது வெறுப்பு, கல்வியறிவு வெறுப்பு, ஏரண வெறுப்பு, வாதுரைகள் மீதான வெறுப்பு எனப்படுகின்றது. இவை யாவும் சரியே. 

ஏரணம் என்பது காரணங் காட்டி மெய்ப்பிக்கும் அறிவியல். எனவே, மேற்குறித்தவற்றின் பொதுச்சொல் இதுவே.

miso என்பதன் கிரேக்க மூலப்பொருள் வெறுக்கிறேன் என்பதாகும்.

எனவே, நாம் ஏரண வெறுப்பியல் misology எனலாம்.

Misology

370. ஏரணத்தொடரியல்

Logical Syntax –  தருக்கத் தொடரியல், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மையியல் எனப் படுகின்றது.

syntax என்பது சொற்றொடரியல், சொற்றொட ரிலக்கணம், தொடரியல், தொடரமைப்பு, வரியியல் எனப்படுகின்றது.

syntaxe என்னும் பிரெஞ்சுச் சொல்லுக்கும்  syntaxis, என்னும் இலத்தீன் சொல்லிற்கும் ஒன்று சேர்த்தல், ஏற்பாடு செய்தல் எனப் பொருள்கள்.

பலர்  semantics, syntax ஆகிய இரண்டிற்கும் ஒரே பொருள் விளக்கம் தந்துள்ளனர்.

semantics என்பது சொற்களின் பொருண்மை பற்றியது.  syntax என்பது சொற்றொடரின் அமைப்பு பற்றியது. சொற்கள் இணைந்து அமைவதுதானே தொடர். எனவே, ஏரணச் சொல்லமைப்பியல் என்பதன் சுருக்கமாக ஏரணத் தொடரியல் எனலாம்.

Logical Syntax

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000