(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20 இன் தொடர்ச்சி)

21. அண்டஆண்டியல்

 

அண்டநேரவியல், அண்டக் காலவியல் என்றும் குறிக்கின்றனர். நேரம் என்பது இந்த இடத்தில் பொருந்தாது.  காலம் என்பதும் பொதுவாகப் பருவகாலத்தையே குறிப்பதால் அண்டத்திலுள்ள விண்மீன் முதலான உறுப்புகளின் ஆண்டுக் காலத்தைக் குறிப்பதால் ஆண்டியல் எனப் படுகிறது.

    Cosmochronology

22. அண்ட மின்னியங்கியல்

Cosmic electrodynamics

23. அண்டப் பயணவியல்

Cosmonautics

24. அண்டவியல்

 

Universology அண்ட கோளங்கள், அண்ட கோளங்கள் பற்றிய ஆய்வு, படைப்பாய்வு நூல், மன்னல ஆய்வு நூல் எனப்படுகிறது. மண்ணல ஆய்வு நூல் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் தட்டச்சுப்பிழையாக மன்னல ஆய்வு நூல் என இடம் பெற்றுப் பிற இடங்களில் பகிரப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. அல்லது மன்பதை நலம் என்பதன் சுருக்கமாக மன்னலம் எனக் குறிக்கப் பெற்றுள்ளதா என்றும் எனக்குத் தெரியவில்லை.

cosmology அண்டவியல், காயவியல், அண்டப் பிறப்பியல், அண்டவியல், இயலுலகவியல்,  பிரபஞ்சவியல், ஞாலவியல், பேரண்ட இயல், பேரண்டவியல், விண்ணியல் எனப்படுகிறது. இவற்றுள் பிரபஞ்ச இயல்/ பிரபஞ்சவியல் நற்றமிழ்ச் சொற்களன்று.

 kosmos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உலகம்.

இரண்டும் ஒன்றைத்தான் குறிக்கின்றன. எனவே, சுருக்கமான அண்டவியல் – Universology / Cosmology என்பதைப் பயன்படுத்துவோம்.

cosmo என்பது பழங் கிரேக்கத்தில் இருந்து உருவான இலத்தீன் சொல். universe என்பது இதே பொருளுடைய univers என்னும் பிரேஞ்சுச் சொல்லில் இருந்து உருவான ஆங்கிலச்சொல். இவற்றைத் தனித்தனித் துறைகளாகக் கருதுவது தவறு.

காயம் என்பது அடி முதலிய பட்டதனாலான புண்ணை மட்டுமல்ல, ஆகாயம்/விண்வெளி எனவும்  குறிக்கும். அந்தப்பொருளில் காயவியல் எனக் கூறுகின்றனர்.

“விண் என வரூஉம் காயப்பெயர்” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம் 1-8-10).

காயம் என்பது ஏற்ற சொல்லாக இருப்பினும் உடற்காயம் எனத் தவறாகக் கருதக் கூடும். எனவே,  காயவியல் என்பதை இங்கே பயன்படுத்தவில்லை.

“காயமே இது பொய்யடா” என்ற சித்தர் பாடலில்  ‘காயம்’ உடலைக் குறிக்கும்.

Cosmology /  Universology

25. அண்மையியல்

Proximics/Proxemics

26. அந்துஇயல்

 

பழங் கிரேக்கத்தில் lepís  என்றால் செதில் என்றும் pterón என்றால் சிறகு என்றும் பொருள். இங்கே அந்துப்பூச்சிகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் குறிக்கிறது. எனவே, பொதுவாக அந்து இயல் எனப்படுகிறது.

Lepidopterology

27. அமைதியியல்

 

பழங் கிரேக்கத்தில் eirḗnē  என்றால் அமைதி எனப் பொருள். அமைதிபற்றிய இயல் அமைதி யியல் எனப்படுகிறது. 

Irenology

28. அமைப்பிலியியல்

 

அமைப்பாக இல்லா தனவற்றைக் குறிக்கும் இயல். எனவே, அமைப்பிலியியல்.

Hylology

29. அமைப்புக் கிளைமொழியியல்

Structural Dialectology

30. அமைப்புப் பொறியியல்

Structural Engineering

31. முறைமை  வளைசலியல்

 

Systems Ecologyஅமைப்புச் சூழலியல், கூட்டணுகுமுறைசார் சூழ்நிலையியல் எனப்படுகின்றது.

Ecology வளைசலியல் என வகைப்படுத்தியுள்ளோம். எனவே,

முறைமை வளைசலியல் –  Systems Ecology எனலாம்.

Systems, Structural இரண்டும் அமைப்பு என்றே குறிக்கப்படுகின்றன. Structure என்பது கட்டமைப்பு என்றாலும் சுருக்கமாக அமைப்பு என்பதையே பயன்படுத்து கிறோம். எனவே, System என்பதற்குப் பொருத்தமான சொல்லான முறைமை எனப் பயன்படுத்துகிறேன்.

Systems Ecology

 

32. ஒப்பமைவியல்

Homology – அமைப்பொப்பியல், உறுப்பு ஒற்றுமை, ஒத்தமைப்பு, சமவமைப்பு, உடனொத்திசை, அமைப்பு ஒப்புமை இயல், செயல் ஒப்புமை, படிவொப்புமை, ஓர்மைத் தன்மை, ஓரகநிலை, ஓர்மை, உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை எனப் பொருள்கள்.

ஓர்மை அடிப்படையில் சுருக்கமாக ஓர்மையியல்  என்று முதலில் குறித்திருந்தேன். ஓர்மம், மனஉறுதி, மனத்திட்பம் என்னும் பொருள்கள் கொண்டது. அமைப்புஒப்பு என்பதைக் கருதிப் பார்த்துப் பயன்படுத்தினேன். ஆனால், Organization என்பது அமைப்பு எனப்படுவதால் குழப்பம் வரலாம். எனவே, ஒப்புமை அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும்  ஒப்பமை வியல் எனக் குறிக்கப்பட்டது.

Homology

33. அயலெச்சத் தொல்லியல்

Exoarcheology(1)

34. அயற்புவியர் இயல்

 

xenos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அயல், திரிபவர், அகதி, வெளியார், அயலார் எனப் பல பொருள்கள் உள்ளன. இங்கே புவிக்கு வெளியே உள்ள பிற கோள்களில் இருப்பவர் களைக் குறிக்கிறது. எனவே, அயற்புவியர் எனலாம். அயற்புவியர் பண்பாடு குறித்த கற்பனை அறிவியல்.

அயலர்  இயல் என்றால் புவியில் உள்ள அயலவரைக் குறிக்கும் என்பதால் அயற் புவியர் எனப்பட்டது.

Xenology

35. அயற்புவியர் தொல்லியல்

archeology தொல்லியல். இங்கே தொன்மை நிலையில் உள்ளஅயற்புவியரைக் குறிக்கிறது. அயற்புவியர் தொன்மையைக் குறிப்பதால் அயற்புவியர் தொல்லியல்.

காண்க அயற்புவியர் இயல் –   Xenology

Xenoarcheology

 

36. அரசறிவியல்

Politicology /  Politology /  Political Science

37. அரசியல் குமுகவியல்

Political Sociology

38. அரசிலி ஆட்சியியல்

Anarcheology

39. அருங்காட்சியியல்

mūsēum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்  நூலகம். நூல்கள் தொகுப்பாக வைக்கப் படுவதுபோல் அரிய காட்சிப்பொருள்கள் தொகுப்பாக வைக்கப்படும் காட்சியகமும் mūsēum எனப்பட்டது. 

Museology

40. அருஞ்சொல்லியல்

glôssa என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் நாக்கு / நாக்கால் மொழியப் படும் மொழி என்பன ஆகும். எனவே, நேர் பொருள் மொழியியல் என்பதுதான். எனினும், மொழியப்படும் சொற்களைப்பற்றிய இயல் என்னும்  பொருளில் கையாளப்படுகிறது. பொதுவாக எளிய சொற்களை விட்டுவிட்டு அரிய சொற்களையே படிப்பதால் அருஞ்சொல்லியல் எனப்பட்டது.

காண்க : நாக்கியல் – Glossology(2)

Glossology(1)

41. அருளரியல்

hagios என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் புனிதர், தூயர் என்பன. தூய அருளாளர் குறித்த இயல் என்பதால் அருளரியல் எனப்பட்டது. அருளர், முனிவர் முதலியோர் குறித்த இலக்கியம் என்னும் பொருளில் hagiography என்றும் அழைக்கப் பெறுகிறது.

Hagiology /  Hagiography

42. அலைஇயக்க இயல்

kymatics/cymatics என்றால் அலை இயக்கம் என்று பொருள்.

Kymatology

43. அலைபேசியியல்

mobile என்றால் பழம் பிரெஞ்சிலும் இலத்தீனிலும் நகரக்கூடிய எனப் பொருள். ஓரிடத்தில் நிலையாக உள்ள தொலைபேசி போல் அல்லாமல் நாம் எங்கு நகர்ந்து சென்றாலும் அலைந்து திரிந்தாலும் அலைவழி இணைப்பு கிடைக்கக் கூடிய அலைபேசி யையே (mobile phone) இங்கே  சுருக்கமாகக் குறிக்கிறது. எனவே, அலைபேசி யியல் என்கிறோம்.

Mociology என்பது mobile +‎ sociology என்னும் இரு சொற்களின் பகுதிக்கூட்டுச் சொல். கருவியில்லாத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதை இங்கே குறிக்கிறது. கம்பி யில்லாத் தொழில் நுட்பத்தில் அலைபேசி இயங்குவதால் Mociology என்பதும் அலைபேசி யியல் என்பதைக் குறிக்கிறது.

Mobilology / Mociology

(தொடரும்)

அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 நூலில் இருந்து