Valve

 வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.

 அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1)

மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை : 218.5)

இதன் அடிப்படையில் பிற சொற்களைக் காட்டிலும் ஓரதர் என்பது வால்வு (valve) என்பதற்கு நெருங்கி வருகின்றது. எனினும் ஓரதர், ஈரதர் எனில், எண்ணிக்கையைக் குறிப்பதாக அமையும். எனவே அதரி என்றும் இருமுக அதரி என்றும் குறிப்பிடலாம்.

அதரி-valve

இருமுக அதரி-two port valve

இருமுனை அதரி-bicuspid valve

காப்பதரி-safety valve

குண்டதரி-ball valve

கோண அதரி-angle valve

போக்கதரி-exhaust valve

மாற்றதரி-by valve

மும்முக அதரி-three port valve

மும்முனை அதரி-tricuspid valve

வளிதொடுப்பதரி-air starting valve

வளியதரி-air valve

வளிவிடுஅதரி-air release valve

விழிப்பொலி அதரி-alarm valve

இவ்வாறு 400 வகையான அதரிகளையும் குறிப்பிடலாம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்