comet01

kalaicho,_thelivoam01

32 :புகைக்கொடிcomet

  இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(டு) (komete) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர்.

  இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே வால் போல் அல்லது முடி போல் தெரியும் பகுதி உண்மையில் வால் அல்ல என்பதை உணர்ந்தனர். இதன் முன்பக்கம் உள்ள காற்றும் பிற துகள்களும் அழுத்தம் மிகுந்த சூரியக் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. இவ்வாறு தள்ளப்பட்டுப் புகையாகச் செல்லும் பகுதியே நமக்கு வால் போல் காட்சியளிக்கிறது.

  ஆனால், பழந்தமிழர்கள் வெறும் தோற்றத்தின் அடிப்படையில் பிறர் போல் வால் நட்சத்திரம் என்று சொல்லவில்லை. வால் நட்சத்திரம் என்பது இக்காலத்தில் தவறாக வந்த சொல்லாட்சி. மேலும் இது நட்சத்திர வகைப்பாட்டிற்குள்ளும் வராது. கழிவுப் பொருள்கள் எரிந்து தள்ளப்படும் இயல்பை உணர்ந்து புகைக்கொடி என்றே அழைத்தனர். தூமம் என்றால் புகை எனப்பொருள். பின்னர் இதனைத் தூமகேது என்றும் குறிப்பிட்டனர்.

          கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

           விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்       (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)

 

என்று இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

  மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

               தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்           (புறநானூறு 117: 1-2)

எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.

 

  மிகச் சிறந்த விண்ணியல் அறிவு இருந்தாலன்றி வெறும் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல்-விண்ணிலுள்ள ஒளிரும் இப் பொருள் நட்சத்திரம் அல்ல என்பதை உணர்ந்து-அதன் அறிவியல் தன்மையை அறிந்து புகைக்கொடி என்று நம் முன்னோர் பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள். (http://thiru-padaippugal.blogspot.com/2011/02/comet-is-not-star-andre-sonnaargal-18.html)

எனவே, சங்கச் சொல் அடிப்படையிலேயே இதைப் பின்வருமாறு குறிக்கலாம்.

புகைக்கொடி- comet