கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff
43 : வாட்டூன்-roasted mutton/chicken; பொதிபொரி-puff
பொரித்தலும் வறுத்தலும்
(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching (வேளா., பயி., மனை., கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறு வகைக்குக் குறிப்பிடுகின்றனர்.
சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்த கறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர்.
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு (நற்றிணை : 367.3)
[கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளை]
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி (புறநானூறு : 395.37)
… … … உண்
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, (புறநானூறு :398.23-24)
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப (பொருநராற்றுப்படை:115)
பொரி்த்த கறி வகை போல் மற்றோர் உணவுவகை அணலில் வாட்டி உண்பதாகும்.
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் (பெரும்பாண் ஆற்றுப்படை : 256) [மனையின்கண்வாழும் பெட்டைக்கோழியின் இறைச்சி]
இவற்றின் அடிப்படையில் அனலில் வாட்டித்தரப்படும் இறைச்சியை வாட்டூன் எனலாம். வறுக்கப்படும் மரக்கறிவகைகளை பொரிக்கறி, வறுகறி என்றும் இறைச்சி வகைகளை வாட்டூன், சூட்டூன் என்றும் வேறுபடுத்தலாம்.
குஞ்சு பொரித்தல்-hatch/hatching
கருனை-fry/frying
கருனைச் சோறு-fried rice
கருனை மீன்-fried fish
கருனைக் கோழி-fried chicken
நிணக் கருனை-shallow fat frying
வாட்டூன்-roasted mutton/chicken
பொதிபொரி-puff
வறுகறி-roasted foods
வறுவல்-chips
பொரிக்கறி-frying vegetables
சூட்டூன்-broiled food
Leave a Reply