கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்
48 : மது வகைகள்
பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது என்ற வகையில் அறவே நீக்கப்பட வேண்டியவைதாம். எனினும், இப்போது விற்பனையில் பல்வகை மதுவகைகள் உள்ளன என்பதால் அவற்றைத் தமிழில் குறிக்க வேண்டி உள்ளது. அதனடிப்படையில் சிலவற்றைப் பார்ப்போம்.
அரியல், நறவு, மது, கள், மதுசாரம், சாறாயம், சாராயம், தேறல், அரக்கு, அரிட்டம், முதல்வடி, மதுச்சாறு, கொதிகருப்பநீர், அரியல், அடுநறா, மானிகை, மாதுரி, வெறிநீர், ஆனம், கந்தாரம், நறவம், மட்டம், கஞறம் எனப் பலவகையாகப் போதைதரும் குடிவகைகள் உள்ளன. Alcohol, arrack, beer, brandy, ethanol, gin, liquor, rum, spirit, toddy, vodka, whiskey, wine எனப் பலவகையான மதுவகைகள் இப்போது உள்ளமைபோல் பழந்தமிழகத்திலும் இவ்வாறு பலவகைகள் இருந்துள்ளன. எனவே, அவற்றின் அடிப்படையிலேயே இப்போதைய மது வகைகளைக் குறிக்கலாம்.
தேன் தேறல், இன் கடுங்கள், இரு மடைக்கள், தீம் கள், வேப்புநனை யன்ன நெடுங்கள், தோப்பிக் கள், முதலான அடைமொழியுடன் கூடிய சிறப்புப் பெயர்களும் அக்காலத்தில் இருந்த மதுவகைகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
கஞல்(4), கஞல(4), கஞலி(2), கஞலிய(1), கஞன்ற(1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. பூக்களின் செறிவைக் குறிப்பிடும் பொழுது பூக்கஞல் எனப் பல இடங்களில் புலவர்கள் கையாண்டுள்ளனர். கஞல் என்னும் சொல்லின் அடிப்படையிலான கஞறம் என்பது மது வகையில் ஒன்றைக் குறிக்கின்றது. அன்றைய சொற்கள் சில இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன; சில சொற்கள் மறு பயன்பாட்டிற்கு உதவுகின்றன. எனவே, பின்வருமாறு சங்கச் சொற்கள் அடிப்படையில் மது வகைகளைக் குறிப்பிடலாம்.
(இ)டாடி (toddy)-கள் என ஆட்சியியல், பயிரியல் ஆகியவற்றில் கையாளப்படுகின்றது.
அராக்கு(arrack)-சாராயம் என ஆட்சியியலிலும், பட்டைச் சாராயம் என வேளாணியலிலும், நாட்டுச் சாராயம் என மனையியலிலும் குறிக்கப்படுகின்றது.
ஆல்கஃகால் உயிரியலிலும் (Biology) மனையியலிலும் சாராயம் எனப்படுகின்றது; ஆட்சியியலில் வெறியம், மது, சாராயம் என மூவகையாகவும், வேளாணியலில் வெறியம், சாராயம் என இருவகையாகவும், வானியலில் எரிசாராயம் எனவும், பொறி-நுட்பவியலில் ஆல்ககால், சாராயம் என இருவகையாகவும், மருத்துவயியலில் மது, ஆல்ககால் என இருவகையாகவும் குறிக்கப்படுகின்றது.
எத்தனால் (ethanol) என்பதும் உயிரியலில் சாராயம் எனப்படுகின்றது. ஆனால், எத்தனால் என்பது வேளாணியலில் எரிசாராயம் எனவும், சூழறிவியலில் எத்தனால், எத்தில்ஆல்ககால் என்றும் கையாளப்படுகின்றது.
ஃச்பிரிட் (spirit) வேதியிலில் சாராயம் எனவும், லிக்குயர் (liquor) சட்டவியலில் சாராணம் எனவும் குறிக்கப்படுகின்றன. (இ)லிக்கர் (liquor) என்பது பொதுவான சொல்லாக மதுபானத்தைக் குறிப்பது. ஃச்பிரிட் (spirit) என்பதும் பொதுவான சொல்லாகப் போதைநீரம் எனப்படலாம்.
கிளர், கிளர்க்கும், கிளர்ந்த, கிளர்ந்து, கிளர்ப்ப, கிளர்பு முதலான சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. மிகுதியாக்கச் செய்தலும், எழுச்சிகொள்ளச் செய்தலும் இவற்றின் பொருள்களில் அடக்கம். போதைப் பானகத்தில் கிளர்ச்சிக்காகச் சேர்க்கும் எத்தனாலைக் (ethanol) கிளரூட்டி எனலாம்.
பீர் (beer) என்பது கூலமாவிலிருந்து உருவாக்கப்படுவது எனவே, மாத்தேறல் எனலாம்.
வைன் (wine) கொத்தில் திரளாக உருவாகும் திராட்சைப்பழம் எனப்படும் கொடிமுந்திரிச் சாற்றில் இருந்து உருவாக்கப்படும் மது என்பதால் இதனைத் (திராட்சைப்) பழமது எனலாம்.
பிராந்தி (brandy) பழங்களில் இருந்து உருவாக்கப்படும் தேறல் என்பதால் பழத் தேறல் எனலாம்.
கின் (gin) கூலத்தில் (தானியத்தில்) இருந்து உருவாக்கி, பெர்ரி(berry) முதலான பழங்களில் இருந்து நறுமணம் எடுக்கப்பட்டுக் கலக்கப்படுவது. ஆல் என்னும் சொல்லில் இருந்து உருவானதே ஆனம் என்னும் மது எனத்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் குறிக்கப்பட்டுள்ளது. ஆல் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டதே. எனவே, ஆனம் என்பதை இதற்கான சொல்லாக வரையறுக்கலாம்.
ஓட்கா (வோட்கா-vodka) என்பது முதலில் உருசிய நாட்டில் உருளைக்கிழங்கில் இருந்து உண்டாக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், கோதுமையில் இருந்தும் உருவாக்கினர். நிறம், மணம், சுவையற்றது. நிறம், மணம், சுவையற்ற நீரைக்குறிக்கும் ஃபிரெஞ்சுச் சொல்லான ஓடா(வோடா-voda) என்னும் சொல்லின் அடிப்படையில் பெயர் சூட்டி உள்ளனர். வடித்து எடுக்கப்படும் நீர் போன்ற மதுவகை என்பதால் வடிநீரம் எனலாம். எனினும் பின்னர், எலுமிச்சை, புதினா, முதலானவற்றின் மணமும் சுவையும் சேர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டன. இதனைச் சுவைவடிநீரம் (flavored vodka) எனலாம். நீரம் என்னும் சொல்லிலே போதை இல்லை எனக் கருதுபவர்கள் வடி வெறியம் என்றும் சுவை வடிவெறியம் என்றும் கொள்ளலாம்.
இரம் (rum) என்பது கரும்புச்சாற்றில் இருந்து உருவாக்கப்படுவது. எனவே, சாறம் என்பதே சரியானது. சாறு (22) என்னும் சொல் பெரும்பாலான இடங்களில் விழா என்னும் பொருளில் கையாளப்பட்டிருந்தாலும், பூங்கரும்பின் தீஞ்சாறும் என்பது போல், சாற்றினையும் குறிக்கின்றது.
அராக்கு (arrack) என்பது அரிசியில் இருந்து கரும்புச்சாறு கலந்து உருவாக்கப் படுவது. தமிழில் உள்ள அரக்கு என்பதுதான் அராக்கு எனப்படுகிறது. எனவே, அரக்கு என்றே குறிக்கலாம்.
விசுக்கி (whiskey) என்பது சோளம் முதலிய மாவுக்கூழில் இருந்து உருவாக்கப்படும் மது. இசுக்காட்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை மதுவே ஃச்காட்சு (scotch) எனப்படுவது.
அடுநறா-scotch
அரியல் /அரக்கு-arrack
ஆனம்-gin
கந்தாரம்-zubrovka
கள்-toddy
கிளரூட்டி-ethanol
சாறம்-rum
சுவைவடிநீரம்/சுவை வடி வெறியம்-flavored vodka
நறவம்-whiskey
நறவு-alcohol
பழத் தேறல்-brandy
பழமது-wine
போதைநீரம்-spirit
மது-nectare
மதுபானம்-liquor
மாத்தேறல்-beer
வடிநீரம்/ வடி வெறியம்-vodka
(பட்டறிவின்றி இவை படிப்பறிவின் மூலமே குறிப்பிடப்பட்டுள்ளன. குறியீடுகளாகக் கருதியும்கூட இவற்றைப் பயன்படுத்தலாம்.)
Leave a Reply