kalaicho,_thelivoam0156 : அன்னிலை-temporary

தற்காலிகம்:

  டெம்பரரி/temporary-குறுங்கால, நிலையற்ற, தற்காலிகமான என ஆட்சியியலில் கையாளுகின்றனர்; புரொவிசனல்/provisional-தற்காலிக என மனையறிவியலில் கையாள்கின்றனர்; இச்சொல்லிற்கு ‘நிகழ்காலத்திற்கான, அப்போதைக்கான’ என்னும் இரு சொற்களையும் ஆட்சியியலில் கையாள்கின்றனர். எனினும் temporary, provisional ஆகிய இரண்டு சொற்களுக்குமே தற்காலிகம் என்னும் சொல்லைக் கையாளுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு சொல்லே கிடையாது. (தற்காலம் என்பது வேறு; குறிப்பிற்குரியவரின் சமகாலத்தைக் குறிக்கும்.) பெருமனெண்ட்(டு)/permanent-நிலையான என மனையறிவியலிலும் கணக்கறிவியலிலும் கையாளுகின்றனர்; வேதியியலில் நிலைப்புறு எனக் குறிப்பிடுகின்றனர்.

  temporary என்பது நிலையற்றதைக் குறிக்கிறது. உயர் திணை அல்லாதது-அல்+திணை = அஃறிணை எனப்படுவதுபோல், நிலையற்றதைக் குறிப்பதற்கு அல்+நிலை =அன்னிலை என்று சொல்லலாம். இதன் அடிப்படையில்:

அன்னிலை-temporary

அன்னிலை ஒதுக்கீடு-temporary allotment

அன்னிலை நியமனம்-temporary posting

அன்னிலை முன்பணம்-temporary advance

அன்னிலைக் காலம்-temporary period

அன்னிலைப் பதவி-temporary post

என்பன பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்ட முறையிலும் புதிய சொற்களை உருவாக்கலாம்.