kalaichol-thelivoam03

 57: இடையீடு-provision

 

  இடை என்பது நடு என்னும் பொருளிலும், இடையே என்னும் பொருளிலும், இடுப்பு என்னும் பொருளிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இடையின் அடிப்படையாக இடைப்படுதல் முதலான வேறு சொற்களும் கையாளப்படுகின்றன. இடையே வருதல் என்னும் பொருளில் உள்ள சொற்கள், இடையே தடையாக வருதல் என்னும் பொருளில்தான் வந்துள்ளன. எனினும் இடையிடுபு என்னும் சொல் பின்வருமாறு கையாளப்படுகின்றது.

கூர்உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு (நெடுநல்வாடை 119)

இடையே இடுதல் என்னும் இச்சொல்லை நிலையான ஒன்று வழங்குவதற்கு இடையே தரப்படுகின்ற-இடையே இடப்படுகின்ற-என்னும் பொருளில் நாம் இடையீடு என்று சொல்லலாம்.

இடையீடு-provision

provisional என்பது நிலையான ஒன்றிற்கு முன் இடையேற்பாடாக வழங்கப்படுவது. எனவே,

இடையீட்டு வேண்டல்-provisional demand

இடையீட்டுச் சான்றிதழ்-provisional certificate

இடையீட்டுத் தெரிவு-provisional selection

என்று சொல்லலாம்.

இவ்வாறு வேறுபட்ட பொருள்களுக்குரிய சொற்களை பழந்தமிழ்ச் சொற்கள் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்வது புதுச் சொல் புனைவுகளுக்கான காலத்தைக் குறைக்கும்.