கலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue
58 : பயின்-resin; பசைமம்-glue
பிசின் வகைகள்
தமிழில் மா, பலா ஆகியவற்றின் பிசின் (Gum of the mango or the palmyra tree) இடவகம் என்றும், ஒருவகை மரப்பிசின், கம்பிப்பிசின் எனவும், இலவம் பிசின் (Gum of the redflowered silk-cotton), சலவகு அல்லது சுரழ் (மலை) (Gum of Bombax malabarica) அல்லது மயிலம் Gum of the silk-cotton tree (பரிபாடல் : அகநானூறு :)எனவும், இலந்தைப்பிசின் (Gum of the jujube tree) சீவகம் எனவும், செந்நிறமாக உள்ள பிசின் செங்கரப்பன் (Red gum, Strophulus intertinctus) அல்லது எயிற்றுப்புண் எனவும், அத்திப்பிசின் தூணியங்கம் (Gum of the cluster fig) அல்லது நற்றுளி (Gum of the fig tree) எனவும், தேவதாருவின் பிசின் (Gum of the deodar) ஆச்சியம் எனவும், கருவேலம்பிசின் (Gum exuding from the black babul tree) காக்காய்ப்பிசின் எனவும், சொல்லப்படுகின்றன. இவை தவிர, உகளி, பயின், வேட்டம், கசை (பசைத்தன்மையுள்ள சாந்து) எனவும் பிசின் வகைகள் சொல்லப் படுகின்றன.
‘அம்பர் ‘(amber) என்பதற்கு சூழறிவியலில் அம்பர் என்றும், புவியியலில் (Geology) அம்பர் பிசின் என்றும், மனையியலில் அரக்குப்பிசின் என்றும், பொறி நுட்பவியலில் அரக்குப்பிசின், நிமிளை என இருவகையாகவும், பயிரியலில் பிசின் என்றும் குறிப்பிடுகின்றனர்.
‘கம்’(gum)-பிசின், பசை என ஆட்சியியலிலும், பொறிநுட்பவியலிலும் உயிரியலிலும் பசை என்றும், கால்நடைமருத்துவவியலில் தாவரப்பசை, பிசின் என்றும், வேளாணியலில் கோந்து என்றும் குறிக்கப்படுகின்றன.
அதே நேரம், ‘ரெசின்’(resin)-பிசின் என வேளாணியல், வேதியியல், சூழறிவியல், கானியல், மருத்துவவியல் ஆகியவற்றிலும், மரப்பிசின் என உயிரியல், பொறிநுட்பவியல் ஆகியவற்றிலும், பிசின், குங்கிலியம் என இருவகையாக மனைஅறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன.
‘(இ)க்ளு’(glue)-பசை எனப் பொறிநுட்பவியல், மனைஅறிவியல் ஆகியவற்றிலும், எலும்புப்பசை என கால்நடைஅறிவியலிலும், ஒட்டுப்பசை, பிசின், பசை என மூவகையாக ஆட்சியியலிலும் குறிக்கப்பட்டுள்ளன.
‘அட்ஃகெசிவ்‘(adhesive)-ஒட்டுவிப்பி என வேதியியல், பொறிநுட்பவியல் ஆகியவற்றிலும், ஒட்டுப்பசை எனக் கால்நடை அறிவியலிலும், ஒட்டுப்பொருள், பசை என மருத்துவயியலிலும், பசை, ஒட்டும், ஒட்டும் தன்மையுள்ள என ஆட்சியியலிலும், ஒட்டிக்கொள்ளக்கூடிய, ஒட்டுப்பொருள் என வோளணியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. ஒத்த பொருள்கள் உடைய வெவ்வேறு சொற்களாக இருந்தாலும், அவை ஒரே சீராகக் குறிக்கப்பட்டால்தான் பயன்படுத்துவோருக்குக் குழப்பம் இராது.
பசைகொள் மெல்விரல் (அகநானூறு : 34.10)
பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன (அகநானூறு : 244.1)
பசைவிரல் புலத்தி நெடிது பிசைந்து ஊட்டிய (அகநானூறு : 387.6)
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி (மலைபடுகடாம் : 26)
நலத்தகைப் புலத்தி பசைதோய்த்து எடுத்து (குறுந்தொகை : 330.1)
ஒட்டும் தன்மையுள்ளமையால் அரக்கு பயின் எனச் சொல்லப்படுகிறது.
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய (அகநானூறு : 1.5 ; 356.9)
ஒட்டு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒட்டிய(2), ஒட்டாது(2), ஒட்டியோர்(1) என்னும் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் பின் வரும் சொற்களைக் குறிக்கலாம்.
ஒட்டி-adhesive
பயின்-resin
பசை-Gum
பசைமம்-glue
பயினி-amber
Leave a Reply